திங்கள், 26 டிசம்பர், 2016

எப்படி இருந்தது 2016



எப்படி இருந்தது..
இருக்கும் இடத்தில் இருந்து பின்னோக்கி பார்க்க..
ஏற்றங்களும் இறக்கங்களும் விளையாட்டு காட்டிய
பரமபத விளையாட்டில் இருந்த இடத்திலேயே..
நான்...

அடர்ந்தமரக்காட்டில் தழுவியோடும் தென்றலாய் இனிமைகள்
எல்லாமே வரமாய் வந்த நட்புக்கள் தந்த கொடைகள்..
மனத்துயரங்களின் காயங்களுக்கு மருந்தாக..
எழுத்தில் பூத்த எண்ணங்களின் நந்தவனமாக..
நமது குழுவும்..நட்புக்கள் தந்த அங்கீகாரமும்..
தாழ்ந்துவிடாது என்னை தாங்கிக்கொண்டது
மறக்கமுடியமா?

வீழ்ச்சிகளை தொழிலிலும்
எப்போதும் போல நம்பிக்கை ஏமாற்றத்திலும் கண்டுகொண்டாலும்
நான் வீழ்வேனோ..
இன்னுயிர் தாழ்வேனோ?
வேள்விகளாய்
கடமைகள் நெஞ்சில் எஞ்சி நிற்க
தோல்விகளா..?
எனக்கு தடைபோடும்..

தூக்கமில்லா இரவென்று துயர் நெஞ்சை தொட்டதில்லை..
ஏக்கமில்லை என்று சொல்ல நான் புத்தனுமல்ல..
சோகங்களை எருவாக்கி சோதனைகள் புடம்போட
கருகாத வேர்கொண்ட மரமாக துளிர்க்கின்றேன்...

நாட்டையே உலுக்கிடும் பொருளாதாரம்
என்னை மட்டும் விட்டிடுமா?
வீழ்ச்சி தான் என்றாலும்..
மனமும் உடலும் வீழ்ந்துவிடவில்லை..

சொல்லமுடியா சோகம் கௌவிக்கொள்ள
வருடிவிடும் அன்பு உள்ளம் எல்லாம் வாரிப்போட்டு
அலையில்லா கடலை தேடும் அப்பாவியே.. போ..
எல்லாவற்றையும் எட்டி உதைத்துவிட்டு
பூத்திருக்கும் புன்னகையை நெஞ்சில் சூடி
வெற்றி தேடும் பயணத்தை தொடரடா....!!
என சொல்லும்போதே..

இரவு வானத்தில் பளபளக்கும் விண்மீன்கள்
என்னை வாரி அணைத்து
உருகியோடும் வெண்பனியாய் உயிர்த்துவிடுகிறது..

வருடத்தின் கடைசியில் ஆட்கொண்ட
சோர்வினால் ஏற்பட்ட சின்ன தடை..
இனி
உடைத்தெறிந்து பயணிப்பேன்..
எப்போதும் போல

துன்பங்கள் அடியில் தங்கிய தெளிந்த நீராய்
இன்ப பூக்கள் மிதக்கும் சோலைகளிடையே
துள்ளியோடும் ஆறாய்..
என் பயணம் தொடரும்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: