செவ்வாய், 6 டிசம்பர், 2016

முதல்வருக்கு ஒரு இரங்கல்

ஒரு
துரோகத்தின் தீவுக்குள்
இவ்வளவு நாள்
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக
கனன்று கொண்டிருந்தீர் நீங்கள்..

காலம் விடுவித்து சென்று விட்டது..
ஆனாலும்
நீங்கள்

எங்கிருந்தோ வந்தாய்..
வேற்றுமைகள் வாழும் கூட்டத்தில்
விடிவெள்ளியாய் முளைத்தாய்..
பேதங்கள் வீழ்த்துமிடத்தில்
வெற்றிக்கொடி ஏந்தி நின்றாய்..

அன்பு சகோதரி என்றார்கள்..
அம்மா என்றார்கள்..
ஆத்மார்த்தமாய் ஒரு கூட்டம்
ஆதாயத்துக்கு ஒரு கூட்டம்..
எய்த்திடத்தான் ஒரு கூட்டம்..
வீழ்த்திடத்தான் ஒரு கூட்டம்..

சமர்க்களத்தில் சளைக்காது போரிட்டாய்..
அவமானங்களை நெஞ்சில் அடுக்கி
உரமாக்கி ஓயாத உழைப்பினாலே ஓங்கி வளர்ந்தாய்..

வெட்ட வெட்ட வீழ்வேன்
என்று நினைத்தாயோ..
இல்லை..
வீறுகொண்டு எழுவேன் என்றே சாதித்தாய்..

எனக்கும் பேதங்கள் உண்டு உம்மிடம்..
கருத்து ரீதியாய் மட்டுமே..
நான் கண்டு வியந்தேன்..
உமது பிடிவாதம் கண்டு..
உமது இரும்பு மனம் கண்டு..
உமது தன்னம்பிக்கை கண்டு..
உமது போராட்டகுணம் கண்டு..

ஆணாதிக்க சமுதாயம்..
யாருமில்லா வாழ்க்கை..
எதுவாக இருந்தால் என்ன...?
பெண்ணென்றால் முடியாதா என்ன?
போராடி வென்று நீங்கள்
வாழ்ந்து காட்டிவிட்டீர்....

இன்னும் பலகாலம் உங்கள்
ஆளுமை வேண்டுமென்று
எண்ணிகொண்ட உள்ளங்களில்
நானும் ஒருவன்..

ஏனிந்த அவசரமோ..
தவிக்கவிட்டு பறந்துவிட்டீர்..

காணாமல் மறைந்திந்த
தங்கமுகம் மூச்சின்றி
கண்டவுடன் கரையுடைந்த அணைநீராய்..
கண்களிலே பெருகியது..

அது கண்ணீர் மட்டுமல்ல..
காப்பாற்றுவது யாரோ என்ற
கையறுநிலையும் கூட...


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: