வெள்ளி, 2 டிசம்பர், 2016

எனக்கு பிடித்த பாடல்..



இப்படி ஒரு தலைப்பு வந்தது என் மனதில் பலகாலமாக மறக்காமல் இசைத்துக்கொண்டு இருக்கும் ஒரு பாடலை இங்கு பதிவு செய்ய நல்ல சந்தர்ப்பமாக எண்ணுகிறேன்..

பல திரைப்பட பாடல்கள் எனக்கு மனப்பாடமாக மனதில் இருந்து பல நேரங்களில் துள்ளலிசை கொண்டு இன்பத்திலும், ஆறுதல் தரும் தத்துவ வரிகள் மனதின் பாரங்களுக்கு வடிகாலாகவும் இருந்தாலும், ஏனோ. இந்த பாடல் என்னை ரொம்பவே மயக்கி விட்டது மறக்காமல் மனதில் நின்று விட்டது..

இது சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மறக்காமல் இருக்கும் என் பள்ளிக்கால நாட்களில் கேட்ட பாடலாகும்.

அப்போது எல்லாம் வாரம் தவறாமல் சர்ச்க்கு அழைத்து செல்வார் என் தந்தை. என் அம்மா தவிர வீட்டில் என் அண்ணன், இரண்டு தம்பிகள், அப்பா என்று சர்ச் செல்வதே இனிய அனுபவம்.

அங்கே போதகர் அவருக்கு அந்த வாரம் சிரமமான வாரமாக இருந்தால் தன்னுடைய சிறுவயது கஷ்டங்கள், தான் எப்படி மதம் மாறி இன்றைக்கு ஒரு போதகராக இருக்கிறேன் என்று உருக்கமாக சொல்லி அதைவிட உருக்கமாக ஒரு பாடல் பாடுவார்.... அவரின் இனிய குரலில் அதை கேட்கவே மனம் கலங்கும்.

அந்த அறியா வயதில் மனதில் கேட்ட அந்த பாடல் பின்னர் யோசிக்கும் வயது வந்து, பல புத்தகங்கள் படிக்க, மதங்களை வெறுத்து...

கடவுள் இருக்கிறார்
அவர் மனதில் இருக்கிறார்
மதங்கள் இருக்கிறது
அது மனங்களை பிரிக்கிறது

என்று உணர்ந்த பின்பும் இன்றைக்கும் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது.

மிகவும் மனம் கவலையில் இருக்கும்போது உள்ளுக்குள்ளேயே இந்த பாடலை பாடி அப்போது வரும் கண்ணீரில் எல்லாம் கரைந்து போவது போல ஒரு நிம்மதி பிறகும். இதோ அந்த பாடல்..

என்னை மீட்ட இரட்சகரை..
எந்நாளும் துதித்து பாடுவேனே..
தாயின் கருவில் உருவாகும் முன்னே..
என்னை பேர் சொல்லி அழைத்த
வான்மகனே..  (என்னை மீட்ட)

கல்வாரி பாதையின் ஓரத்திலே
மனம் கசிந்து நான் அழும் நேரத்திலே..
தாங்கி நடத்திட்ட என் அப்பனே..
தயவோடு நீர் என்னை காத்தீரே.... (என்னை மீட்ட)

ஆதியும் அந்தமும் ஆனவரே..
எனக்கு ஆறுதல் தேறுதல் அளிப்பவரே..
அன்னை தந்தை என்னை வெறுத்தாலும்
அன்போடு நீர் என்னை அணைத்தீரே.. (என்னை மீட்ட)


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: