வலைவீசும் எண்ணங்கள்
50. யாருக்காக இந்த வாழ்க்கை?
பற்று
வைப்பது, பற்றை விடுவது.. இரண்டும் பூரணமாக வளர்க்கப்பட்டால்.. அவை மனிதனை உயர்ந்தவனாக..
மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்குகின்றன – என்கிறார் விவேகானந்தர்.
வாழ்க்கையில்
ஒரு சராசரி மனிதராக நம்மால் பற்று மட்டுமே வைக்க முடிகிறது. பற்றை விட்டு வாழ
முடிகிறதா......? என்றால் இல்லை என்பதே பொதுப்படையான பதிலாக இருக்கும்.
வாழ்க்கையில்
எத்தனையோ நிகழ்வுகளை நாம் தினந்தோறும் கடந்து வருகிறோம். விதவிதமான மனிதர்கள்..
பலவிதமான குணங்கள்.. நாட்களும் கடக்கிறது. நாமும் வாழ்கிறோம். இதில் நாம் கடந்து
வரும் இடம் எல்லாம் சன்னையும் சச்சரவுமாக எல்லா நாளும் இருப்பதில்லை.
எல்லா
இடத்திலும் எதோ ஒரு வகையில் விட்டுக்கொடுத்தலும் சகிப்பும் தான் நம்மிடம் இருந்து
வெளிப்படுகிறது.
இப்படி எல்லா
இடத்திலும் வெளிப்படும் இந்த நல்லகுணம் பலநேரங்களில் ஒரு இடத்தில் மட்டும் காணாமல்
போய்விடுகிறது. அந்த இடம் தான் குடும்பம்.
யாருக்காகவெல்லமோ
விட்டுக்கொடுத்தும் மாற்றிக்கொண்டும் சகித்துக்கொண்டும் நடக்கும் நம்மால் குடும்பம்
என்ற இடத்தில் மட்டும் நமக்காக எல்லோரும் மாறவேண்டும் என்று நினைக்கிறோமே தவிர நம்
குடும்பத்தாருக்காக நாம் கொஞ்சம் மாறுவோம் என்று நினைப்பதில்லை.
அதுவும்
இன்றைய இளையசமுதாயத்தினரிடம், இளம் தம்பதிகளிடம் இந்த குணம் மிகவும்
அருகிக்கிடக்கிறது. மேலைநாட்டு பண்பாடு இவர்களை மிகவும் ஆட்டிப்படைக்கிறது.
“ஒன்றாக
பயணிப்போம் வெவ்வேறு திசைகளில்” என்பதாய் இருக்கிறது இவர்கள் பலரின் வாழ்க்கை
முறை. இந்த பயணத்தில் வண்டி எந்த ஊர் போய் சேரும்...?
பெரும்பாலும்
இப்படி இருக்கும் உறவுகள் மேல்நாட்டு அடிப்படையில் வெறும் பாலியல் இச்சைகளின்
மேல்தான் தொக்கி நிற்கிறது. இந்த பந்தம் பலமானதும் பிடிப்பனதும் அல்ல.
சிலர் காதலின்
போது உருகி மருகி அன்பில் திளைத்து ஈருடல் ஓருயிர் என்று இருப்பார்கள். திருமணபந்தம்
என்று வரும்போது அதுவரை இருந்த எல்லா நற்குணங்களும் காணாமல் போய் சின்ன சின்னதான
சராசரி மனிதர்களிடம் இருக்கும் குறைகளும் மாபெரும் குற்றம் போல கண்டு எதையும்
விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்ள முடியாமல் முடிவில் அர்த்தமில்லாத பிரிவை நோக்கி
அவர்கள் வாழ்க்கை பயணப்பட தொடங்குகிறது.
சிலகாலம்
வாழ்ந்து வாழ்க்கையில் அனுபவம் கண்ட தம்பதிகளை நோக்கினால்இருவரில் யார்
குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவது என்ற ஒருமுனை அதிகாரப்போட்டியில் எதோ ஒரு
புள்ளியில் இருவருமே அறியாமல் வீழ்ந்துவிடுகின்றனர்.
இதில் யார்
பலவீனமாக இருக்கிறார்களோ அவர் வீழ்த்தப்பட்டு அங்கு செல்லாகாசாக, காட்சிப்பொருளாக தக்க
வைக்கப்படுகிறார்கள். அங்கும் வாழ்க்கை இருக்கிறது. அது நாட்பட்ட தாம்பத்திய
வாழ்க்கையில் பெரிய பாதிப்பையும் குழந்தைகளின் எதிர்காலம் என்ற ஒற்றை காரணத்தில்
ஒருவர் மட்டுமே எல்லாவற்றிற்கும் விட்டுக்கொடுத்து மனஅழுத்தத்துடன் பிணைத்துக்கொண்டு
இருப்பார்.
அந்த அழுத்தம்
எங்கே எப்போது எப்படி எவ்வாறு வெடிக்கும் என்பது தெரியாது, ஆனால் நிச்சயம் ஒருநாள்
வெடித்துவிடும்.
நமது இந்திய
நாட்டின் குடும்ப அமைப்புகள் உலகின் ஆகச்சிறந்த பண்பாட்டு முறையாகும். இன்றைய
உலகளாவிய பண்பாட்டு கலப்பில் இளையதலைமுறையினருக்கு இந்த குடும்ப வாழ்கை முறை
பெரும் கட்டு போலவும், காட்டுத்தனமகவும் தோன்றலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
வாழ்க்கை முறையும் தங்களின் சுதந்திரமான வாழ்க்கையில் தடைபோடும் பிணையாக இதை
நினைக்கலாம். அனால் எல்லோருக்கும் முதுமைப்பருவம் வருவது நிச்சயம்.
சென்ற தலைமுறை
வரை தங்கள் குடும்பத்து வயதுமுதிர்ந்த உறுப்பினர்களை பராமரிப்பது பெரும் கடமையாக
வாழ்ந்து வந்தார்கள். இன்றைய தலைமுறையில் அது பாதியாக குறைந்து மீதி முதியோர்
இல்லங்களில் வைத்து பராமரிக்கிறார்கள்.
அனால் இந்த
தலைமுறை முதுமையடையும்போது இந்த குறைந்தபட்ச பராமரிப்புக்கும் தாங்களே ஏற்று
செய்யும் நிலை விரைவில் வரலாம்.
எப்போதுமே
பண்பாட்டு முரண்பாடுகள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடம் தொடங்கி மெல்ல மெல்ல
கீழ்நோக்கி வந்து விளிம்புநிலை மக்களை அடைகிறது. ஒரு காலத்தில் காதல் திருமணம்,
சாதிமறுப்பு திருமணம் இப்படி தொடங்கி இன்றைக்கு அது பெரும்பாலும் ஒரு சாதாரண
நிகழ்வாக இருக்கிறது.
அதே நிலையில்
தான் திருமண பந்தமின்றி “இணைந்து வாழ்தல்” (Living Together) என்பதும்
இன்றைக்கு மேல்தட்டு மற்றும் உயர்வருமான பிரிவு மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.
இது மெல்ல அவர்களை ஒட்டி பழகும் அடுத்தநிலை இளைய பிரிவினர் மத்தியில் மெல்ல மெல்ல
இதுபற்றிய எண்ணம் தலைதூக்குகிறது.
யாருக்கும்
எந்த பிணைப்பும் இல்லாமல் நீ எது செய்தால் எனக்கென்ன? நான் எது செய்தால்
உனக்கென்ன? செலவுகள் பகிர்வோம்.. ஒன்றாய் வாழ்வோம். இன்பத்தில் திளைப்போம். உன்
துன்பம் எனதில்லை என் துன்பம் உனதில்லை.. பிடிக்கவில்லையா? பிரிந்து விடுவோம்.
இது என்ன
வாழ்க்கை? யாருக்காக நாம் வாழ்கிறோம்? என்ன பிடிப்பு இருக்கிறது இந்த வாழ்க்கை
வாழ? வாழ்வென்றால் இன்பம் மட்டும் தானா? பாலியல் இச்சைகள் மட்டும் தானா?
யாருக்கும் துன்பமே வராதா? நோய்கள் அணுகாதா? ஒரு அணைப்பு அப்போது தேவைப்படாதா?
பணமிருந்தால் எல்லாம் கிடைத்துவிடுமா? அதில் உண்மை நிலை இருக்குமா? இன்பத்தில்
அணைக்கும் கரங்கள் துன்பத்தில் ஆறுதல் சொல்லாமல் விலகி செல்லும் வாழ்க்கை எதற்கு? எங்கே
உண்மையான அன்பு?
தேகத்தின்
ஈர்ப்பு எவ்வளவு நாள் இருக்கும்? வருடங்கள் போகப்போக களையிழககும் தேகத்தின் மீதான
பிடிப்பில் வரும் பிணைப்பு வாழ்க்கையில் என்ன உண்மை இன்பம் இருக்கிறது?
இளரத்தம்
துடிக்கும் துடிப்பில் இளவயதிலேய அதிகமாக பொருளீட்டும் கர்வத்தில் கண்ணுக்கு
விருந்தாக தெரியும் வெளிநாட்டு பண்பாட்டு சீர்கேட்டு வாழ்க்கை இந்த புண்ணிய
மண்ணுக்கு தகுமா?
நமது இலக்கியங்களும்,
வேதங்களும், தத்துவஞானிகளும் விட்டுச்சென்றது எதுவும் மேம்போக்கானது அல்ல.
வாழ்க்கை
என்பது புரிதலும், அன்பும், நேசிப்பும், அரவணைப்பும், விட்டுக்கொடுத்தலும்,
அனுசரித்தலும், போற்றுதலும் மட்டுமே. திருமணவாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் இருவேறு
திசைகளில் பயணிப்பது அல்ல, மாறாக இணைந்து ஒருவழியில் பயணிப்பது ஆகும்.
வாழ்க்கையில்
நிச்சயம் பிரச்சனைகள் எழும், அப்போது இருவரும் மனம்விட்டு பேசுவதும், வேற்றுமைகள்
களைவதும், ஒத்த கருத்து முடியவில்லை என்றாலும் யாரவது ஒருவர் விட்டுக்கொடுத்து
மதிப்பளித்து ஒன்றாய் முன்னேறி வாழ்வின் இன்பங்களை ஒருங்கே பெற்று துன்பங்களை
இணைந்து வென்று சந்ததி வளர்த்து வாழ்வது தானே சிறப்பு.
அடைப்பட்ட காதுடையோனாய்
நானே சரி, உன் கருத்து தேவையில்லை, நான் செய்வதே, சொல்வதே முடிவு என்று எதிர்
கருத்து எதையும் ஏற்க மறுத்து உடல், மனம் என்று விலகி செக்குமாடாய் சுற்றி வருவது
அல்ல வாழ்க்கை.
புரிதல்
கொண்டு, பிடிவாதம் தளர்த்தி, விட்டுக்கொடுத்து, தட்டிக்கொடுத்து வரும் ஒரு இன்பமான
வாழ்வை வாழ்கையில்:
“எண்ணற்ற
பிறவிகள், சொர்க்கங்கள், நரகங்கள், இவைமூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பெரிய பாடம்
இதுதான் - வேண்டும் என்று கேட்பதற்கோ, ஆசைப்படுவதற்கோ சொந்த ஆன்மாவைத்
தவிர எதவும் இல்லை” என்ற விவேகானந்தர் வரிகள் தான் என்றைக்கும் உண்மை.
இனிய
வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை
விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக