வலைவீசும் எண்ணங்கள்
18. நோக்கமும்
செயலும்
ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது மனதின்
நோக்கத்தை சார்ந்தே இருக்கிறது. அதே நேரம் அந்த செயல்களின் மீதான மற்றவர்களின்
பார்வை வெவ்வேறானவையாக இருக்கிறது. இப்படியான செயல்களும் நோக்கங்களும் பற்றி
இந்தவாரம் வலை வீசுவோம்..
நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதற்கான நோக்கம்
இந்த பரந்த பூமியை அதனுடைய இருப்பில் பாதுகாத்து சக மனிதர்கள் ஒருவருக்கொருவர்
மகிழ்ச்சியுடன் கைகோர்த்து அன்புடன் இணைந்து வாழவேண்டும் என்ற நல்ல நோக்கமே.... இப்படி
அன்புடன் கைக்கோர்க்கவே எல்லா மனிதர்களின் கை விரல்களுக்கிடையில் போதிய இடைவெளியை
விட்டுப் படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நாமோ இதைத்தவிர்த்து
மற்ற எல்லா எதிர்மறையான காரியங்களுக்கும்
பயன்படுத்தி துன்பத்தில் மூழ்கி அழிவில்
நடக்கிறோம்.
மனிதர்களாகிய நாம் தினந்தோறும் செய்யும்
வேலைகளில் மூழ்கிவிடுகிறோம். நாட்களோ பறக்கின்றன, ஆனால் இதயங்களின் முக்கியமான செயல்களில் ஒன்றை நாம்
அனைவரும் மறந்து விடுகிறோம். அது நம்முடைய செயல்களின் நோக்கம். நம்முடைய ஒவ்வொரு
செயலையும் ஆக்கவோ, சிதைக்கவோ நம்மாலேயே முடிகிறது.
நமது செயல்களைப்பற்றி அறிவது ஏன் அத்தனை முக்கியம்? நமது
செயல்கள் நமது நோக்கங்களின் வழியே நடப்பதால் நமது நோக்கங்களின் வெளிப்பாடாக நமது
செயல்கள் அமைகிறது. அதுவே நாம் தினசரி செய்யக்கூடிய மிக எளிய செயல்களையும் ஒரு வழிபாடுகளாக
ஆக்கக்கூடும். நாம் தினந்தோறும் தூங்கும்போது காணும் கனவில் செல்வந்தராக வாழ முடியும்,
ஆனால் அந்த கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் நமது நோக்கத்திற்கு ஏற்ப செயல்கள்
இருக்க வேண்டும்.
நமது எண்ணத்தின் இருப்பிடம் என்ன? எண்ணம்
என்பது இதயத்தின் நிலை, செயல்பாடு மற்றும்
வர்ணணை. பிறர் கேட்கிறார்கள் என்பதற்காக நமது மனதில்
இல்லாத ஒன்றைச் நமது நோக்கமாக, செயலாக சொல்லலாம், உண்மையில் அதற்கு
பொருள் எதுவும் இல்லை, காரணம், நாம் சொல்லியதற்கு பின்னால் எந்த நோக்கமும் இல்லை.
நம்முடைய தூய்மையான எண்ணமும், மேலும்
ஒரு செயலை யாருக்காக செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி
முழுமனதுடன் செய்யும் போது அந்த செயலானது நமது நோக்கத்தை பூர்த்தி செய்கிறது. ஒரு செயலின்
பின்னல் உள்ள நோக்கம் தான் உந்து சக்தி. அந்த நோக்கம் இல்லாமல் நாம் எந்த ஒரு
செயலையும் செய்வதில்லை. நோக்கத்தின் இடம் மனதும், இதயமும்.
என்றைக்குமே ஒரு மனிதர்கள் நமது செயல்களை
எடைபோடுகின்றனர். ஆனால் கடவுளோ நமது நோக்கங்களை எடை போடுகிறார்.
ஒரு ராணுவ வீரர் போர்க்களத்தில் எதிரியை
வெட்டிக்கொன்றால் அது வீரம். அதுவே தனது பக்கத்து வீட்டுக்காரனை வெட்டிக்கொன்றால்
அது கொலை. செயல் என்னவோ ஒன்று தான், ஆனால் நோக்கம் மாறும்போது அந்த செயலின்
அர்த்தம் மாறுகிறது.
நாம் இந்த அடிப்படையை புரிந்துகொண்டால் உறவுகளை
பேணுவது எளிதாகும். மன்னிப்பது எளிதாகும். ஒருவரை பற்றிய அனைத்து விடயங்களையும்
சரியான கண்ணோட்டத்துடன் அணுக எதுவாக இருக்கும். ஒருவரது செயலை நேர்மறையான
கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது அவரது செயலின் பின்னல் உள்ள அவர்களது நோக்கம்
தெளிவாக புரியும். அவரின் நோக்கம் நல்லெண்ண அடிப்படையிலா இல்லை தீய எண்ணத்திலா
என்பதை நாம் எளிதாக புரிந்துக்கொள்ள இயலும்.
உதாரணமாக ஒரு நோக்கத்தையும், செயலையும் இங்கு
பார்ப்போம்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீவன் கோவியின் ’90 :10′ விதியில் சொல்லியபடி நமது
வாழ்க்கையில் பெரும்பாலான நோக்கங்கள் நம் வாழ்வில் நடை பெறும் நிகழ்ச்சிகளாலும்,
செயல்களாலுமே தீர்மானிக்கப்படுகிறது.
இதில் நமது வாழ்வைப் பாதிக்கக் கூடிய நிகழ்ச்சிகளும்,
செயலும் பெரும்பாலும் 10 சதவீதம்தான்,
ஆனால்
நாம் அவற்றை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துத் தான் மீதமுள்ள 90 சதவீதம்
நிர்ணயிக்கப் படுகிறது.
நம்மால் முடிந்துபோன நிகழ்வுகளை மாற்றமுடியாது
என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் விவேகம் நாம் வாழும் வாழ்க்கை என்றைக்கும் இனிமையாக இருக்கும்.
இல்லையெனில் கசப்பாக மாறிவிடும்.
உதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒருநாளில் நாம் பணிபுரியும்
அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்குச் செல்லவேண்டி நாம் தயார் நிலையில்
இருந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கின்றோம். தெரியாத்தனமாக மகள் அங்கு
இருந்த காபிக்கோப்பையைத் தட்டிவிட்டுவிடுகிறாள். அது நம் சட்டையின்மீது
கொட்டிவிடுகிறது. இந்த நிகழ்வு முடிந்துவிட்டது. மாற்ற முடியாது. கொட்டியது
கொட்டியதுதான். ஆனால், அந்நிகழ்வை கையாளும் விதத்தில் நாம் செய்யும்
செயல்கள் தான் நம்முடைய் அன்றைய நோக்கத்தையும் அதன் வெற்றியையும் நிர்ணயிக்கிறது.
இந்த முடிந்துபோன நிகழ்வின் மீதான நமது முதல் செயலாக
நம் மகளைத் திட்டுகின்றோம். அவள் அழத்தொடங்குகிறாள். காபிக்கோப்பையை மேசையின்
விளிம்பில் வைத்ததால்தான் கொட்டிவிட்டது என்று மனைவியின் மீது குற்றம்
சாட்டுவோம். அங்கு நடக்கும் சொற்போரினால் நேரமாகிவிட கோபத்துடன் நம் அறைக்குச்
சென்று அவசரமாக வேறு உடைமாற்றிக்கொண்டு வரும்போது மகளும் அழுதுகொண்டே சாப்பிட்டதால்
கிளம்பத் தாமதமாகிவிட பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகின்றாள். ஆக இப்பொழுது
மகளைப் பள்ளியில் விடும் வேலையும் விழுந்துவிட்டது.
தாமதமாகிவிட்டதே என்ற பதட்டத்தில் வேக விதியை மீற
போக்குவரத்து காவலர் ரூ.500அபராதம் விதிக்கிறார். அதைக்க்ட்டிவிட்டு, மகளை
அழைத்துச் சென்று அவள் பள்ளியில் விடும்போது திட்டியதால் கோபம் கொண்ட மகள் ‘போய்
வருகிறேன்” என்றுகூடச் சொல்லாமல் உள்ளே சென்றுவிடுகிறாள்.
அலுவலகத்திற்குத் தாமதமாக செல்ல பின்புதான் முக்கியமான
கோப்புகள் அடங்கிய நமது கைப்பெட்டியை அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததை
உணர்கின்றோம். மீண்டும் மீண்டும் தொல்லைகள்.. வீட்டிற்கு மாலை திரும்பிப்போனால், மனைவியும்
மகளும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அன்றைய நாள் மோசமான
நாளாகிவிடுகிறது.
காரணம் நாம் முடிந்துவிட்ட நிகழ்வின் மீது
செயல்படுத்திய செய்கை நம்முடைய நோக்கத்தையே சிதைத்து விட்டது.
சரி.. இப்படி பார்ப்போம். நிகழ்ந்த செயலை மாற்ற
முடியாது. நம்முடைய சட்டையில் காபி கொட்டிவிட மகள் நாம் திட்டப்போகின்றோமோ
என்ற பயத்தில் கண் கலங்குகிறாள். மெல்ல அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி “போனால்
போகட்டும். இனிமேல் கவனமாக இருக்கவேண்டும்,
சரியா?”
என்று சொல்லிவிட்டு நம்முடைய அறைக்குச்
சென்று உடை மாற்றிக்கொண்டு கைப்பெட்டியுடன் வருகிறோம்.
நம் மகள் வழக்கம் போல் உணவருந்திவிட்டு
பள்ளிப்பேருந்தில் உற்சாகத்துடன் ஒரு பறக்கும்
முத்தம் தந்து ஏறுகிறாள். நாம் சந்தோஷமாகக் கிளம்புகின்றோம். சரியான
நேரத்திற்கு அலுவலகம் வந்து, இன்முகத்துடன் பணியாற்றுகிறோம். மாலை வீடு
திரும்புகையில், மகளும் மனைவியும் அன்புடன்
எதிர்கொள்ளுகிறார்கள். நாம் மகளைத்திட்டாமல்,
அன்பாகப் பேசியதால், அவர்கள்
இருவருக்குமே நம் மீது மதிப்பும் பாசமும் அதிகரித்திருக்கிறது.
ஆக இந்த நிகழ்வுகளில் காபி கொட்டுவது என்பது ஒரு
கற்பனை உதாரணம் மட்டுமே.. வாழ்வில் பல சமயங்களில் நாம் எதிர்பாராத, திருத்தமுடியாத
நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றின் மீதான நமது செயல்களே பல நிகழ்வுகளை தீர்மானித்து நமக்கான அன்றைய நோக்கத்திலும் பல விளைவுகளை தருகிறது. எவற்றையும்
பொறுமையுடன் எதிர்கொண்டு நமது செயல்களை செய்தால் வெற்றி கிடைக்கிறது.
நம்மை சுற்றியுள்ள இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் நம்முடைய ஒவ்வொரு செயல்களை கொண்டே நம்மை எடை போடுகிறார்கள்.
நாம் வாழும் வாழ்க்கையில் நமது குறிக்கோளின்
அடிப்படையில் பரம்பொருளால் நாம் தண்டிக்கப்பட்டாலும் சரி, கொண்டாடப்பட்டாலும்
சரி..நம்மை சுற்றியுள்ளவர்கள் நமது செயல்களின் அடிப்படையிலேயே நம்மை
தீர்மானிக்கிறார்கள்.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.