திசையறியா பாதையிலே
4. அனுபவங்களில் பாதை...
என்னுடைய அம்மா வழி தாத்தா ரொம்ப எளிமை. தன்னுடைய கடின
உழைப்பால் தன்னுடைய பிள்ளைகளுடன் இணைந்து உழைத்து நல்ல நிலையில் உயர்ந்தவர்.
எனக்கு தெரிந்து அவர் மேல் சட்டை அணிந்து பார்த்தது இல்லை. எப்போதும் வேட்டியும், துண்டும்
மட்டுமே அவரது உடையாக நான் பார்த்திருக்கிறேன். அதுபற்றிய காரணம் எனக்கு
சரியாக தெரியவில்லை என்றாலும் அவரின் எளிமையான வாழ்க்கையை மறக்கமுடியவில்லை.
இவரைப்போல நம்மிடையே மிகவும் எளிமையான மனிதர்களாக வாழ்ந்து
மறைந்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே மறைந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கும்
ஆத்மாக்கள்.
எளிமையின் சிகரமாக வாழ்ந்து மக்களுக்காவே வாழ்ந்து மறைந்து
மக்கள் மனதில் எப்போதும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் கர்மவீரர் போல என்றும்
சொல்லலாம்.
மேலைநாட்டு உடையலங்காரமே தங்களை ஆண்டவர்கள் முன்னால் மதிப்பு
ஏற்படுத்தி தரும் என்று நினைத்திருந்த சமயத்தில் நாட்டின் கடைக்கோடி கிராமங்களில்
வசிக்கும் மக்கள் உடுத்த துணியில்லாது உழைப்பதைப்பார்த்த அந்த மானிதர் எனக்கு
எதற்கு இந்த ஆடை அலங்காரம், போதுமே ஒரு இடைக்கச்சையும், மேலே ஒரு துண்டும் என்று
தன்னுடைய ஆடைமுறையை மாற்றிய அந்த அரையாடை மனிதரின் செயல்களை கண்டு ஒரு
ஏகாதிபத்தியமே அலறியது என்றால் அவர் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்
மகாத்மா அல்லாமல் யாரை சொல்லுவது?
ஆடைகள் ஒருவரின் இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தாலே
போதும். ஆடம்பரம் என்ற பெயரில் உடுத்தும் ஆடை வகைகள் இன்றைக்கு போல் அன்றைக்கு
இல்லை என்றாலும் தன்னை மக்களிடம் தாழ்த்தி அவர்களில் ஒருவனாய் மாறி
போராட்டக்களத்தில் முன்னின்று செயல்பட்டதால் தான் அந்த மாமனிதரை இன்றும்
போற்றுகிறோம்.
உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிகவும் அதிசயமானது.
வாழவேண்டுமென்றால் எப்படியாவது நம்மை வாழவைத்துவிடும். இந்த உண்மையை அவரின்
வாழ்க்கையே நமக்கு உணர்த்திக்கொண்டு இருக்கிறது.
"எனது சொந்த வாழ்வில் பின்பற்றாத ஒன்றை, மற்றவர்கள் செய்யும்படி, நான் சொன்னதே கிடையாது..
இதுதான், எனது பலமாகும்..!" என்று சொல்லியது மட்டுமில்லாமல் அந்த வார்த்தையின்
படி வாழ்ந்து காட்டியவர்களில் ஒருவர். மகாத்மா காந்தி.
அதே போலவே நம்முடைய வாழ்க்கையிலும் “மன்னிசுடுங்க” என்று ஒரே
வார்த்தையில் முடிக்க வேண்டிய சில பிரச்னையை ஆயிரம் வார்த்தைகள் சொல்லி
நியாயப்படுத்த முயன்று தோற்றுப்போகிறோம். பலநேரங்களில் அதற்க்கு அடிப்படையாக
இருக்கும் ஒரே காரணம் தன்னகந்தை (ஈகோ).
“மன்னிப்பு கேட்பவன் மனிதன்.. மன்னிக்க தெரிந்தவன் மாமனிதன்”
என்பது எளிமையாக தெரிந்தாலும் அதில் பொதிந்துருக்கும் அர்த்தம் ஆயிரம் உண்மைகளை
நமக்கு சொல்லும்.
சில நேரங்களில் சில யோசனைகள் வெறும் யோசனைகளாக மட்டுமே
இருத்தல் நல்லது. அதேபோல சில நேரங்களில் சில யோசனைகள் யோசனைகளாக மட்டுமில்லாமல்
உடனடியாக செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
செய்யக்கூடியதை செய்யாமல் இருப்பதும், செய்யாமல் விடவேண்டியதை
கையில் எடுத்து அவதிப்படுவதும் சரியான அனுபவின்மையை மட்டுமே காட்டும்.
அன்றாட செயல்களில் இருந்தும், முன்னோர்களின் வாழ்க்கையில்
இருந்தும் நாம் பாடங்களையும் அனுபவங்களையும் பெற்று தெளிவான பாதையில் நடைபோடுவோம்.
இன்னும் பயணிப்போம்..
என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக