திசையறியா பாதையிலே
1. தொடக்கம்...
கடந்த ஒரு வருடமாக “வலைவீசும் எண்ணங்கள்” வழியே உங்களுடன்
வாழ்க்கையை பற்றிய பல காரணிகள், வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகள் பற்றி
நான் படித்து அறிந்து உணர்ந்த பலவற்றை நான் அறிந்த வகையில் உங்கள் அனைவருடனும்
பகிர்ந்துகொண்டு வந்ததில் மகிழ்கிறேன். உங்களின் பாராட்டும், பின்னூட்டங்களும்,
நீங்கள் தந்த உற்சாகமும் தான் என்னை வாரம் தவறாமல் எழுத வைத்தது என்றால்
மிகையில்லை.
இதோ.. “திசையறியா பாதையிலே” மீண்டும் என்னுடைய பயணத்தை உங்களுடன்
பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.
ஒவ்வொரு பயணமும் ஒரு புள்ளியில் தான் தொடங்குகிறது.
மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் என்ற கிராமத்தில் தொடங்கிய என்னுடைய பயணம் பல பாதைகளில்
எந்த திசையில் செல்கிறது என்று தெரியாமல் பாதை சென்ற வழியெல்லாம் மெல்ல பயணித்து
இன்று உங்கள் முன்னே “எதோ இவனுக்கும் கொஞ்சம் எழுத வருகிறது” என்ற நிலையில் நிற்க
வைத்துள்ளது.
இந்த “திசையறியா பாதையின்” பயணத்திலே நான் சந்தித்த மனிதர்கள்
பலவிதம். நான் சந்தித்த பிரச்சனைகள் பெரிய அளவில் இல்லையென்றாலும் அவைகள்
கற்றுத்தந்த பாடங்கள் நல்லவையே.
பள்ளிக்காலத்தில் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற ஆசையும் அது
முடியாது என்ற நிலையில் எப்படியாவது ஒரு பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணமும் மனதில்
இருந்தது. பின்பு மேல்நிலைக்கல்வி முடிந்து கல்லூரிக்கனவுக்கு தடை வந்த போது, குறிக்கோள்
இல்லாத பயணத்தில், கிடைத்த வேலையில் என்னை தக்கவைத்து முடிவாய் (முடிவா, இன்னும் தொடருமா?) மருந்து
விற்பனை துறையில் நிலைகொண்டு பின்பு என்னுடைய பட்டம் பெரும் கனவை நிறைவேற்றிக்கொண்டதும்
மெல்ல மெல்ல நடந்துள்ளது.
இந்த பயணத்தில் நான் நிராகரித்தும் நன்றாகவே இருக்கிறது.
என்னை நிராகரித்ததும் நன்றாகவே இருக்கிறது. எதிலும் எனக்கு பெரிய இழப்பு இல்லை
என்றாலும் மனது சில நேரங்களில் வருந்தும் நிகழ்வுகள் இன்றும் தொடர்கிறது. இது
எல்லோருக்கும் இருக்கும் இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுகிறேன். வாழ்க்கையின்
பூரணத்துவத்தை அடைய நாம் என்ன ஞானியா?
பலருக்கு இளைப்பாற புகலிடம் அளிக்கும் பெரும் வேடந்தாங்கலான சென்னை தான் எனக்கும் ஒரு இடம் தந்துள்ளது. இங்கிருந்து தான் என் பள்ளி வயதிற்கு
பிறகான எல்லா நல்லதும், கெட்டதும், மகிழ்ச்சியான, துக்கமான நிகழ்வுகளையும் சந்தித்து
வருகிறேன்.
இந்த “திசையறியா பாதையில்” பெரும்பாலும் எனக்கு உறுதுணையாக
இருந்தது நண்பர்கள் மட்டுமே என்பதை கர்வத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.
நண்பர்கள் கூட்டத்தில் எவ்வளவு கேலிகள், கிண்டல்கள்,
சுவாரசியமான பேச்சுக்கள், பயணங்கள்.. என்றைக்கும் மறைக்க முடியாத நாட்கள் அவை.
நான் சென்னையில் வந்த புதியதில் அறிமுகமே இல்லாத ஒரு
நண்பருடன் அறையை பகிர்ந்து தடைகளற்ற ஒரு மனிதனாய் வாழ்ந்த நாட்கள் இனிமையானவை. காலமாற்றம் எங்கள் நட்பில் பிரிவு ஏற்படுத்தி நண்பரை சொந்த ஊர் அனுப்பி வைத்ததும்,
அதனால் அன்றைய சூழ்நிலையில் தொடர்பு விட்டுப் போனது. பின்னர் நண்பரின் அரசியல் பொதுவாழ்க்கையில்
ஏற்பட்ட பிரச்னையில் சிலவருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார் என்று மிகமிக தாமதமாக
கிடைத்த செய்தியும் வேதனை தருவதாகும்.
எங்கோ ஒரு புள்ளியில் வந்த தொடக்கமே ஒருவரை சுற்றி சுற்றி
வரவைத்து இந்த பூமியில் வாழுவும் வரை இன்பமாக சில நேரங்களிலும், துயரங்களில் சில
நேரங்களிலும், வெறுமையில் சில நேரங்களிலும், பரவசங்களில் சில நேரங்களிலும் இருக்க
வைக்கிறது.
காலம் மட்டுமே ஏதுமற்ற சிலரை கடுமையான உழைப்பினால் மிக
உயரத்திலும், சிலரை படுகுழுயிலும் தள்ளி விடுகிறது. கடிவாளம் இல்ல குதிரை போல
வாழ்க்கை நம்மை இந்த ‘திசையறியாத பாதையிலே” மேடு பள்ளங்களில் பயணிக்க வைத்தாலும்
இன்னும் நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
இந்த பயணத்தில் கடந்து வந்த பாதையில் பெற்றதில் இருந்து கற்போம்.
கற்றதில் இருந்து எதிர்காலத்துக்கு தயாராகும் அதே வேளையில் நிகழ்காலத்தில் நமக்கான
வாழ்க்கையை நாம் வாழ்வோம்.
இன்னும் பயணிப்போம்..
என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக