திசையறியா பாதையிலே
3. ஏனிந்த மாற்றங்கள்...
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாள் அது. வீட்டுக்கும்
பள்ளிக்கூடத்துக்கும் மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். காலையில் மாலையில்
காலாரா நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடந்து போய் வருவோம்.
இதில் நானும் இன்னொரு நண்பனும் மட்டும் மதிய உணவு இடைவேளைக்கு
ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து எங்களுக்கு தெரிந்த சைக்கிள் கடையில்
சைக்கிள் வாடகைக்கு எடுத்து அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு
பள்ளிக்கு திரும்பிவிடுவோம். ஒருவருக்கு பதினைந்து பைசா சைக்கிள் வாடகை
பகிர்ந்துகொள்வோம்.
எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. எங்களுக்குள் இருந்த
நட்பு தொடக்கப்பள்ளி முதலே வந்த நட்பாகும். தொடக்கப்பள்ளில் அவன் வீடு பள்ளிக்கு
எதிரிலேயே இருந்தது. இடைவேளை நேரங்களில் அவனுடைய வீட்டில் தான் பெரும்பாலும்
நண்பர்கள் தண்ணீர் அருந்துவோம்.
பள்ளிப்பருவத்து விளையாட்டுகளில் நாங்கள் பலரும் இணைந்தே
இருப்போம். ஆனால் சின்ன வயதுக்கு உரிய வளர்ச்சி மட்டுமே எங்கள் நட்பில் இருந்து,
பெரிய அளவு நட்பில் இறுக்கமோ, புரிதலோ இருந்ததா என்பதை எனக்கு சொல்ல தெரியவில்லை.
இப்படியான ஒரு நாளின் மதிய வேளையில் உணவு இடைவேளையில்
வீட்டுக்கு செல்ல நடக்க ஆரம்பித்த போது நண்பன் எதுவும் பேசாமல் வேக வேகமாக நடந்து
சென்று தனியாகவே ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்து சென்றுவிட்டான். என்னிடம் எதுவும்
சொல்லவே இல்லை. சரி அதோ அவரசம் போல என்று நானும் தனியாக வண்டி எடுத்துச்சென்று
சாப்பிட்டு பள்ளி திரும்பினேன், ஆனால் இது அடுத்த நாளும் தொடரவே.... என் மனதில்
இருந்த அந்த வயதின் இறுமாப்பா, ஆத்திராம தெரியவில்லை அவனை எதுவும் கேட்காமல்
நானும் தனியாக செல்ல தொடங்கிவிட்டேன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஒரே பள்ளியில் வேறு வேறு
வகுப்புகளில், வேறு வேறு பாடப்பிரிவுகளில் மேல்நிலை கல்வி வரை படித்தாலும் ஏனோ
எனக்கு அவனிடம், “நீ ஏன் அப்படி நடந்துகொண்டாய்?” என்ன காரணம் என்று கேட்கவும்
தோன்றவில்லை, பேசவும் இல்லை. ஆனால் அந்த ஊரை விட்டு சென்னை வரும் வரை பல இடங்களில்
எதேசையாக நேருக்கு நேர் சந்தித்தா பல சந்தர்ப்பங்களிலும் அவனிடம் எந்த காரணமும்
கேட்காமலே அந்த பிரிவு தொடர்ந்தது.
“ஏனிந்த மாற்றம்” அவன் மனதில் வந்தது. எந்த சண்டையும் இல்லை.
எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் எதற்காக விலகிச்சென்றான்? இதுவரை என் மனதில்
மறக்கமுடியாத, விடை தெரியாத கேள்வியாய்...!! தொக்கி நிற்கிறது.
பலநேரங்களில் நாமில் பலரும் என்னைப்போலவே அந்தந்த வயதிற்குரிய
சில குணங்களால் இப்படி பட்ட பல சம்பவங்களை கடந்து வந்திருக்கலாம். சொல்லமுடியாத
காரணம் எதுவும் இருக்கப்போவதில்லை என்பது என்னுடைய திண்ணமான நம்பிக்கை, ஆனால் என்
இப்படி நடந்தது?
மனம் விட்டு பேசாததா?
பொதுவாகவே குடும்ப வாழ்க்கையில் நம்மில் பலரும் நமது
துணைகளுடன் பகிரமுடியாத, பகிர விரும்பாத பல விடயங்களை நம்முடைய நண்பர்களிடம் மனம்
விட்டு பகிர்ந்து மனதின் பாரத்தை குறைப்பதோ அல்லது ஒரு நல்ல தீர்வு காண்பதோ
நடக்கிறது.
ஆனால் ஒரு நட்பில் இப்படி மனதின் எண்ணங்களை பகிராத நிலையில் எந்தவிதமான
காரண காரியங்கள் இல்லாமல் பிரிவு நிகழ்வது இன்றைக்கும் தொடர்கிறது.
நட்பை பராமரிப்பதும் ஒரு பெரிய கலை தான். அதை சரிவர
கையாளத்தெரியவில்லை என்றால் நட்பில் பெரிய இடைவெளி விழுந்து அதுவே நிரந்தர பிரிவாக
மாறிவிடுகிறது.
நட்பிலோ உறவிலோ பெரிய அளவு புரிதல் இல்லை என்றாலும் ஒரு
நட்போ, உறவோ தொடர்ந்து நிலைத்து வளர இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை அவ்வப்போது
இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் என்றால் எந்த ஒரு நட்போ, உறவோ வெறும்
சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும்.
இன்னும் பயணிப்போம்..
என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக