செவ்வாய், 31 ஜனவரி, 2017

"கற்பென்பது. . . !"


என்னவென்று காலகாலமாய்
எழும் கேள்விகளும்
மனதிற்கு தோன்றும் வார்த்தையெல்லாம்
விடையாய் பகிரும் மானுடமும்..
தான்தோன்றித்தனமாக வியாக்கியானம்
தந்து சென்ற மூத்தோர்களும்..
கற்பென்பதை பெண்ணுடலோடு ஒட்டி வைத்து
மனதோடு வெட்டி வைத்த கதையை
யார் சொல்லுவர்..

மனத்துயரம் கொடுத்துவிட்டு மங்கையரை தவிக்கவிட்டு
தடம்புரண்டு சோரம்போகும் மணாளர்கள் இருக்கையிலே
உடலாலே தூய்மை காத்து
மனதாலே கெட்டுப்போகும் சங்கதிகள்
படுக்கையறை உள்ளேயும் தடையின்றி வந்திடுதே..
யாருக்கிங்கே உண்மையில்
இந்த கற்பு இருக்கிறது....?

கற்பென்பது உண்மை
கற்பென்பது நம்பிக்கை,
கற்பென்பது நேர்மை
கற்பென்பது கண்ணியம்
கற்பென்பது கடமை..
கற்பென்பது கட்டுப்பாடு...!

சொல்லிவிட முடியாமா?
மாந்தர்களே..
யார் இங்கே கற்போடு இருக்கிறார் என்று?
பொய் சொல்லும் வாய்தான்
முதலில் கற்பை இழக்கிறது..!

அனல் கக்கும் வார்த்தையிலே
சொல்லி சென்ற பாரதியும்
கற்பை பொதுவில் தான் வைத்தான்..
நாம் இன்னும் அதை
பெண்ணில் மட்டுமே வைக்கிறோம்..

நானும் சொல்லவில்லை
கற்பென்பது பெண்ணுக்கு மட்டும் என்று..

படுக்கையறை சீண்டலை
பாடலென்ற பெயரிலே வீட்டிற்குள் பார்க்கும்போது..
நானும் பொய்யுரைக்கவில்லை
நானும் கற்போடு தான் இருக்கிறேனென்று..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: