ஞாயிறு, 15 ஜனவரி, 2017

2. இப்படியும் சிலர்...

திசையறியா பாதையிலே

2. இப்படியும் சிலர்...


இது நடந்தது நான் இணைந்து நடத்திவந்த முதியோர் இல்லத்தில்.

ஒரு நாள் காவல்துறை மூலம் மூதாட்டி ஒருவர் எங்கள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் எவ்வளவோ விசாரித்தும் தன்னுடைய பெயர் தவிர வேறு எந்த தகவலும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

அவரை காவல்துறையிடம் அடையாளம் காட்டியது அந்த மூதாட்டியின் உறவினர் என்பது பின்னர் தெரிந்து கொண்டு அவரை அணுகி அந்த மூதாட்டி பற்றி விவரம் கேட்டோம். முதலில் தனக்கு எதுவும் தெரியாது சாதித்த அவர், “நாங்கள் காவல்துறையில் தகவல் தெரிவித்து விடுகிறோம்” என்று சொன்ன பிறகு அந்த மூதாட்டி பற்றிய தகவல்களை சொல்ல ஆரம்பித்தார்.

மூதாட்டிக்கு பிள்ளைகள் சென்னையின் பிரதான பகுதியில் வீடு இருப்பதாகவும் பராமரிப்பது யார் என்ற போட்டியில் இந்த மூதாட்டி இப்படி வெளியில் வந்துவிட்டார் என்பதையும் சொல்லி அவர்கள் முகவரி தந்தார்.

பின்னர்   அந்த முகவரியில் சென்று பார்த்தபோது நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் சிறப்பாகவே வாழ்ந்துகொண்டிருந்தனர். மூதாட்டி பற்றி சொன்னபோது இல்லை எங்களால் பராமரிக்க முடியாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

எங்கள் இல்லத்தில் உறவுகள் யாரும் இல்லாதவர்களை இலவசமாக பராமரித்தலும் இப்படி உறவர்களோடு இருப்பவர்களை அவர்களிடம் சேர்த்து விடுவோம். முடியாத பட்சத்தில் அவர்களிடம் மாத பராமரிப்பு கட்டணம் வசூலிப்போம். பின்னர் அவர்கள் மாதம் பணம் கட்ட சம்மதித்து உரிய நடைமுறைகளுக்கு பிறகு அவரை இல்லத்தில் பராமரித்து வந்தோம்.

இதை அறிந்து அதுவரை குடும்பம் பற்றி எதையும் வாய்திறந்து பேச மறுத்த அந்த மூதாட்டி, “ஏன் என் பிள்ளைகளிடம் பணம் வாங்குகிறீர்கள்? அவர்களே மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்” என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார். மனதுக்குள் குடும்பப்பாசம் இருந்தாலும் யாரோடும் ஓட்ட முடியாத நிலையில் விட்டுக்கொடுக்கவும் முடியாமல் இருமனதாய் தனிமையில் தவிக்கிறது அவரின் இறுதிக்காலங்கள்.

இது ஒரு முதியோரின் கதை என்றால் ஒன்னொரு பாட்டி. வீட்டில் இருந்து வழிதவறி சில கிலோமீட்டர் தூரம் எப்படியோ வந்துவிட்ட அவரை காவல்துறை உரியவர்கள் யார் என்று கண்டுபிடிக்க்கும் வரை பராமரிக்க கேட்டுக்கொண்டார்கள்.

ரொம்ப எளிய மனுஷி அந்த பாட்டி. இல்லத்தில் இருக்கும்போது என்னிடம் மிக சகஜமாக பழகி நலம் விசாரித்து அன்பாய் நடந்துகொண்டார். யாராவது இல்லத்துக்கு வந்தால் சமையல் செய்யும் பெண்மணியை அழைத்து “டீ கொடுமா.. சாப்பிட ஏதாவது அவங்களுக்கு கொடுமா” என்று தன்னுடைய வீட்டுக்கு வந்தவர் போல அருமையான உபசரிப்பு.

அவரிடம் மெல்ல பேசிய போது அவரின் மகன் பெயர், சொந்த ஊரான தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரையும், மகன் ஆசிரியராக இருப்பதாகவும்” சொல்லத்தெரிந்ததே தவிர வேறு தகவல் சொல்ல தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து காவல்துறை மூலம் தகவல் தெரிந்து திரண்டு  அவரின் மகன்களும், பேரன்களும், சொந்தங்களும். அப்பாப்பா.. எவ்வளவு நெகிழ்வு எல்லோருக்கும்.

தன்னுடைய மனிதர்களை கண்டவுடன் சமையல் செய்பவரை கூப்பிட்டு சீக்கரம் எல்லோருக்கும் காபி போட்டு தர சொல்லி உத்தரவு வேறு போடுகிறார். அங்கு ஒரு நெகிழ்ச்சியான உறவின் சங்கமத்தை பார்க்க கண்கள் பணித்தது.

ஒருபுறம் சுயநலம் கொண்ட மனிதர்களும், மறுபுறம் மனிதநேயமும் அன்பும் கொண்ட மனிதர்களும் நம்மை சற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

அன்பை நெஞ்சில் கொண்டவர்கள் ஒரு அனாதை போல வாழ இந்த உலகம் விட்டுவிடுவதில்லை. அவர்களை சுற்றி எப்போதும் அன்பை பகிரும் கூட்டம் மகிழ்வுடன் காத்திருக்கும்.

அன்பு எல்லா இடத்திலும் கொட்டிக்கிடக்கிறது. தேவையானவர்களுக்கு எப்போதும் நிறைவோடு கிடைக்கும்..

ஒதுங்கிக்கொள்கிரவர்கள் எதோ ஒரு மூலையில் வாழ்ந்துபோகலம். ஆனால் உலகத்தில் அவர்களுக்கான உண்மையான இன்பங்களை தொலைத்து பொய்யான வாழ்க்கையில் அவர்களின் முடிவு இருக்கிறது.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: