எனக்குள் நான் என்பது
என்னைப்பற்றிய கேள்வியா....?
என் உள்ளத்தைப் பற்றிய பார்வையா...?
இல்லை நான் என்பது தத்துவத்தேடலா....?
எதுவாகிலும் இருக்கட்டும்..
நான் என்றும் நானாக இருந்ததில்லை..
இதுவே உண்மை...
எனக்குள் நான்..
ஒரு உலகார்ந்த மனிதன்..
நல்லது கெட்டது நிறைந்த சராசரி..
நிறைதூக்கிப் பார்க்க..
கொஞ்சம் கெட்டவனும்..
மீதியாய் நல்லவனும்..
நான் நானாக எனக்காக வாழ்வது குறைவுதான்..
முன்பு பெற்றோர் சகோதரர்களுக்காக..
இன்று மனைவி பிள்ளைக்காக..
நான் எனக்காக வாழ்ந்தது
இந்த வாழ்க்கையினிடையில் ஒளிந்துள்ளது...
எனக்குள் நான் என்னைத் தேடினேன்..
பாசத்திற்காக வாழும் நான்..
நேசத்திற்காக வாழும் நான்..
நட்புக்காக வாழும் நான்..
நம்பிக்கைக்காக வாழும் நான்..
எனக்குள் நான் என்பது இதுதானென்றால்
நான் சுயநலமில்லாதவன்..
எனக்குள் நான் என்பது எனக்காகவென்றால்..
நான் எழுதும் கவிதைகள் எனக்காக..
நான் தேடும் நட்பு எனக்காக..
நான் நேசிக்கும் அன்புகள் எனக்காக..
நான் சுவாசிக்கும் மூச்சு எனக்காக..
எல்லோருக்கும் புரிபடாத கேள்வியாய்
இருப்பதே எனக்குள் நான் .என்பது...!
எனக்குள் நான் என்பவன்
இயற்கையை ரசிப்பவன்..
அழகைப் போற்றுபவன்..
தமிழை ரசிப்பவன்...
நட்பை நேசிப்பவன்..
அன்பை சுவாசிப்பவன்..
தனிமை எந்தன் வாசம்..
சோகம் எந்தன் கீதம்..
நம்பிக்கை எந்தன் சுவாசம்..
காதல் எந்தன் மோகம்..
அமைதி எந்தன் ராகம்..
எனக்குள் நான்
முற்றும் துறந்த முனிவனுமல்ல..
ஆசையை துறந்த புத்தனுமல்ல..
பொருளைத் துறந்து பட்டினத்தாருமல்ல..
புகழைத் துறந்த சித்தனுமல்ல..
என் ஞாபகங்கள் மட்டுப்பட்டது..
என் வார்த்தைகள் கட்டுப்பட்டது..
தனிமனிதனாய் என்னில் நான்
உலகின் சராசரிகளில் ஒருவனே..
நான் முரண்களின் உருவமே..
எனக்கும் சுயநலமுண்டு..
எனக்கும் ரகசியமுண்டு...
எனக்கும் கனவுகளுண்டு..
எனக்கும் முடிவுகளுண்டு..
ரகசியங்களை பூட்டிக்கொண்டு
முகமுடியோடு உங்கள்முன் நிற்கும்
பலரில் நானும் ஒருவன்..
நான் ஒரு திறந்த புத்தகமல்ல..
திறக்கப்படாத புத்தகம்..
இதோ எனக்குள் நான் என்பவன்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறான்
என்ற ரகசியம்..
கேள்விகளாலும், பதில்களாலும்
தெரிகிறது..
ஆனாலும்...
நான் என்றும் நானாக இருந்ததில்லை..
இதுவே உண்மை...