ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பயணத்தின் வழியே

பயணத்தின் வழியே தான் என் வாழ்வை மேம்படுத்தி கொள்கிறேன் .பயணம் கற்றுத்தருகிறது .பரஸ்பர அன்பையும் நட்பையும் உருவாக்குகிறது .

பயணத்தில் தான் நம்மை நாமே அடையாளம் காணத்துவங்குகிறோம் .
ஒரே வானம் தான் என்றாலும் ஒவ்வொரு பறவையும் ஓர் இலக்கை நோக்கி பயணிக்கிறது .சில பறவைகள் தனியே பறக்க விரும்புகின்றன .எனக்கு கழுகை பிடிக்கும் .அது மிக உயரத்தில் பறக்க விரும்புகிறது .மொத்த வானமும் தன் ஒருவருக்கே என்பது போல தனியே அலைகிறது .கழுகு பயம் அற்றது .அதன் கூர்மையான கண்கள் ,இரையை எங்கு இருந்தாலும் கண்டு கொள்கின்றன .காத்திருந்து அடைகின்றன .கழுகின் ஆவேசம் எப்போதும் என்னை எழுச்சி கொள்ள செய்கிறது .அதே கழுகு தான் தன் குஞ்சுகளை அக்கறையோடும் பாசத்தோடும் கவனித்து கொள்கிறது .
பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பது இல்லை.
பறக்க வேண்டும் என்ற இடையறாத வேட்கையால் மனதால் பறக்கின்றன.அதுதான் அந்த கண்ணுக்கு தெரியாத மூன்றாவது சிறகு .நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது .அதை விரித்து பறக்க நாம் எத்தனிப்பது இல்லை ..
வாழ்க்கை பரமபத கட்டத்தை விடவும் புதிரானது .எந்த ஏணி ஏற்றி விடும்? எந்த பாம்பு இறக்கி விடும்? என தெரியாது .அதை விடவும் எது ஏணி ?எது பாம்பு? என கண்டுகொள்வதும் எளிதானது இல்லை .ஆனாலும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் .
ஒரு கல் கல்லாகவே இருக்க விரும்புகிறது .ஒரு மரம் மரமாகவே இருக்க ஆசைப்படுகிறது .ஆனால் உலகம் அப்படி எதையும் அதன் ஸ்திதியில் வாழ அனுமதிப்பதில்லை .எல்லா பொருட்களும் தாமாகவே இருக்க வேண்டியே முயற்சி செய்வதாக தத்துவவாதி ஸ்பினோஸோ கூறுகிறார் .உண்மை தான்.
'திரும்பிப்பார்' என உலகம் எப்போதும் மனிதர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது .திரும்பி பார்ப்பது என்பது வெறும் தலை திருப்புதல் இல்லையே.நேற்றை ,அதன் முந்தின நாளை ,கடந்த வருடங்களை ,கடந்த நூற்றாண்டை ,ஏன் இந்த புவியில் மனிதன் வாழ தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடரும் வாழ்வின் பக்கங்களை நினைவு கொள்ளுதல் தானே திரும்பிப்பார்த்தல் .இதன் தீவிரமான ஆதாரங்களுடன் கூடிய தொகுப்பே வரலாறு ஆகிறது .
இந்தியவானம் -எஸ் .ராமகிருஷ்ணன் -ஆனந்தவிகடன்

கருத்துகள் இல்லை: