புதன், 19 அக்டோபர், 2016

"பெண் என பிறக்கவில்லை..!"



நாங்கள் யார்...
முற்றுப்புள்ளியும் அல்ல,
தொடர் புள்ளியும் அல்ல..
கேள்விக்குறியாய் குறுகிக்கிடக்கிறோம்..
நாங்கள் வார்த்தைகள் பிறழ்ந்து போன வாக்கியமானோம்..
தழைக்க முடியா விழுதுகளானோம்..
தாயிருந்தும் தாயணைப்பு கிடைக்கவில்லை..
தந்தை இருந்தும் அவர் நெஞ்சம் இறங்கவில்லை..
சேயாக வாழவும் எங்களுக்கு வழியில்லை..
வசமில்லா காகிதப்பூ வம்சமாகி போனோம்..
நாங்கள் மகரந்தம் இல்லா வெற்று மலர்கள்..
அன்பும் மனமும் இல்லா சிற்பங்கள் அல்ல..
பெண் என பிறக்கவில்லை ஏனோ
பெண்ணாக மறுபிறவி தந்துவிட்டான் படைத்தோன்..
நெஞ்சமெல்லாம் பெண்மையிலே பூரிக்க..
சுற்றமெல்லாம் மென்மனதை சுடுகிறதே..
நாங்கள் வாழ்க்கை கேட்கவில்லை..
வாழ வழியை விடுங்கள் என்றே வேண்டுகிறோம்..
ஒதுங்கக்கூட வழியில்லை
ஒதுக்கி வேதனை கூட்டுகிறது சமூகம்..
புராணங்களில் மட்டுமே சாபங்கள் வாரங்களாக
எங்கள் வாழ்வில் சாபங்கள் மட்டுமே....
வரம் தருவது யாரோ?


சங்கர்  நீதிமாணிக்கம் 

கருத்துகள் இல்லை: