(காதலி ஒருவள் ஆழ்ந்த காதலை துறந்து
உலகத்தின் போக்கில் ஆடம்பரம் வேண்டும் என்று ஏழைக்காதலனை உதாசீனப்படுத்தும் வண்ணம்
தனது பேச்சுக்கள், நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டு செயல்படுகிறாள்.. இந்த நிலையில்
காதலனின் மனது என்ன சொல்லும் என்று ஒரு சூழ்நிலை சொல்லி இயக்குனர் ஒருவர் பாடல்
கேட்டார்.. அதின் சாரத்தை இங்கே கடிதம்
வடிவில் தருகிறேன்.)
இதோ
கடிதம்..
*************************
இதயத்தின் துடிப்பே..
என் இதழ் எழுதிய வார்த்தைக்கு பதில்
இல்லை.. உன் மௌனத்தின் விரதம் முடித்து
இந்த மடலுக்கு விரைந்து கிடைக்குமா இதயம் தொடும் வார்த்தைகள்.. இதோ எழுதுகிறேன்..
உலகத்தின் பார்வை செல்லும் வழியில்
எல்லாம் பயணம் செய்வது சாத்தியப்படாது. சாதியமும், மதவாதமும், சுயநலனும் மொத்தமாக குத்தகைக்கு
எடுத்த உலகமிது..
உனது ஒப்பீடுகள் எல்லாமே உனது தலைக்கு
மேலே மட்டுமே இருக்கிறது.. மேலே இருப்பவர்களை காட்டிலும் உனது பாதத்திற்கு கீழே
இருப்பவர்கள் மிக மிக அதிகம். கவனம் கொள்.
வானத்தை பார்த்து நடக்கும்போது
கவனிக்காத சிறு கல்லும் உன் பார்வையை பறித்து விடும் அறிவாயா?
எனக்கான இரங்கல் பாக்களை நீ தீட்டுவது
தெரியாது உன் பாத சுவடுகளில் என் இதயத்தை பயணிக்க வைத்தேன்.. வார்த்தைகளில் தேன்
தடவிய விடத்தை தூவும் நீயோ.., பாதைகளில் முட்களை தூவிவிட்டு சென்றது அறியாது
காயமான இதயம் குருதியில் குளிக்கிறது.
அன்பாயுதம் உன்னிடம் தோற்றுப்போகாது
என்ற தவறான கணிப்பு தவறாகவே போய்விட்டது.
எதுவும் பழுதில்லை.. உன் பயணத்தின்
முடிவில் உண்மை எதுவென்று நீ அறிவாய்..
திரும்பப்பெற முடியாத இழப்புகள் அங்கே குவிந்து கிடக்கும். எல்லாமே மாறி
இருக்கும். காயங்கள் தோய்ந்த என்னிதயம் மட்டும் அன்பெனும் மருந்தை உனக்கு
அளிக்கும் என்று நம்ப மட்டுமே முடிகிறது, ஏனெனில் உன்னுடைய கணைகள் இதயத்தை மட்டும்
காயப்படுத்தவில்லை... என் முச்சுக்குழலையும் ரொம்பவே நசுக்கி இருக்கிறது.
போகட்டும் என்று எல்லாவற்றையும்
விட்டுவிட்டு நடைபோட மனம் எண்ணும் நேரத்தில் குத்திக்கிழித்த கோர பற்கள் காணாமல்
போய் தேவதையை நீ இருந்த நினைவுகள் என்னை மறக்க செய்கிறது.. எவ்வளவு காலம் தான்
கடக்கும் என்று பார்த்துவிடுகிறேன்.. என் நேசப்பூக்களை உன்னை நோக்கி மட்டுமே
வீசுகிறேன்.. ஏற்று சூடிக்கொள்வதும், கசக்கி காலில் மிதிப்பதும் உன்னுடைய
முடிவுக்கு.. நான் எந்த ஆயுதம் எடுக்கக்
வேண்டும் என்பதை தீர்மானிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்..
வேதனை நெஞ்சில் மனம் வெம்பிக்கிடக்கும்
அன்பு காதலன்..
கற்பனை காதலன் சார்பில் கடிதம்
எழுதியது
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக