வெள்ளி, 14 அக்டோபர், 2016

42. எங்கே தேடுகிறோம்..?

வலைவீசும் எண்ணங்கள்

42. எங்கே தேடுகிறோம்..?

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும் என்பது உலகியலில் முக்கிய கோட்பாடாக இருந்தாலும் சிலவற்றை சில இடங்களில் மட்டுமே பெறமுடியும். அப்படி பெறக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை இன்றைய நாளில் நாம் தேட வேண்டிய இடத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா இடங்களிலும் தேடி அலைகிறோம்.

வறுமையிலும் செழுமையாய் வாழ்ந்து காட்டி நமக்கு போதித்த இந்த சமூகமும், பண்பாடும் இன்றைக்கு மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து வசதிக்காக எதைவேண்டுமாலும் செய்யலாம் என்ற மனநிலையில் வந்து நிற்கிறது.

இந்த தேடல் ஒருவரை துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்து பின்னர் பணத்தை, பகட்டை, செல்வாக்கை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசையில் தள்ளிவிடுகிறது. அப்படி அதிகரிக்கும் ஆசையில் ஒவ்வொருவரும் தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு இப்படி ஓடி ஓடி தேடி சம்பாதித்தாலும் அந்த ஓட்டம் என்பது ஓடிக்கொண்டு இருக்கும்வரை மட்டுமே சிறப்பாக இருக்கும். எங்கோ எதோ ஒரு காரணத்தில் அவர்கள் தேங்கி நிற்கும்போது எல்லோர் மனதிலும் இந்த ஓட்டங்களில் தாங்கள் எதையோ ஒன்றை இழந்து விட்டோம் என்ற வெறுமையை மட்டுமே தருகிறது.

ஆம்.. அந்த வெறுமை என்பது இழந்துவிட்ட மகிழ்ச்சியான நாட்களும் தங்களை விட்டு விட்டு ஒதுங்கி நிற்கும் நிம்மதியும் என்பது அவர்களுக்கு புரியவே நீண்ட நாட்கள் ஆகிவிடுகிறது.

செல்வம் தேடும் ஓட்டத்தில் கிடைக்கும் இன்பங்கள் எல்லாமே உண்மையான மனஅமைதி தரும் சந்தோசமோ, நிம்மதியோ அல்ல. அது எல்லாம் இரண்டு மணி நேர இருட்டுகளில் செயற்கையாக கிடைக்கும் பொழுதுபோக்கு நிம்மதி போன்றவையும், இரண்டு மணிநேரம் பகட்டான கூட்டத்தில் ஊற்றிக்குடித்து உதட்டளவில் பாராட்டப்படும் வார்த்தைகள் மட்டுமே.

எதிலும் உண்மை இல்லா போலிகள் மலிந்துள்ள உலகில் இன்றுக்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எங்கு நோக்கினாலும் யார் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சியின் பிரகாசத்தை பார்க்க முடிவதில்லை. எல்லா மனதிலும் துன்பங்களும், சுமைகளும், கவலைகளும், வெறுமையும் பிரதிபலிக்கும் புன்னகை தான் வெளிப்படுகிறது.

எந்த வசதியும் இல்லாத நாளில் கடுமையாக உழைத்து நிறைவாக வாழ்ந்த வாழ்க்கையில் கிடைத்த அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் இன்றைக்கு பெருகியுள்ள நவீன வசதிகள் நமக்கு தரவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. உள்ளங்கள் சேர்ந்து இருந்த அன்றைக்கு இருந்த வசதி குறைந்த இனிய நாட்கள் இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத மெல்லிய படலமாக உறவுகளை பிரித்திருக்கும் பகட்டு என்ற திரை தருவதில்லை.

எல்லா இழப்புகளும் நமக்கு மட்டுமே..

இந்த பூமி அதன் போக்கில் எப்போதும் போலவே சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது. நாம் தான் நமது போக்கை மாற்றிக்கொண்டு எது முக்கியமோ அதை எல்லாம் இழந்துவிட்டு வேண்டாததை பற்றிக்கொண்டு தவிக்கிறோம்.

எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை தான் நம்மில் இருக்கிறார்கள்.

நியாயமான கவலைகள் மனித இயல்பு.

நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைப்படுவதும், அடுத்து தொலைத்ததை விட அதிகபணம் மற்றவர்களை உபயோகப்படுத்தி ஈட்டிவிட முடிமா? என்ற எதிர்பார்ப்பதும் தான் இன்றைக்கு பலரின் மனதில் நிறைந்து கிடக்கும் கவலையாகும்?

கவலைகள் எல்லாமே மழைக்கால காளான்களைப் பல எந்த காரணமும் இல்லாமல் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

நாம் அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்கும்போது அவை நமது கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை நமது ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழக்க நேர்ந்தால் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

ஒருவன் ஒன்றை தேடுகிறான் என்றால் அது மற்றவனின் கையில் அவன் பார்த்து ஏங்கியதாக இருக்கும். எப்பாடுபாட்டாவது அதை அவன் பெற்றுவிட்டால் சில நாட்களில் அந்த பொருள் எந்த மூலையில் இருக்கும் என்பது அவனுக்கே தெரியாது.

ஆக நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் மட்டுமே இருக்கிறது.

அதையும் தாண்டி உண்மையான மகிழ்ச்சியும், நிம்மதியும் எதில் இருக்கிறது? இனிய பாடலில், ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆனால்.... மனம் நிறைந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் எங்கே இருக்கிறது என்றால்.....? அது நம்மிடம் மட்டுமே இருக்கிறது. நமது மனமே அவற்றின் மூலம். எதிலும் அதீத பற்று இல்லாமையும், போதும் என்று சொல்லும் மனமும் நம்மிடம் இருந்தால் நாம் தான் இந்த உலகத்தில் மிகமிக மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்த மனிதன்.

இந்த மண்ணில் எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. நம்புவோம். நாம் எல்லாமே பெற்றிருக்கிறோம் என்று... நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

நம்மிடம் ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தாலே போதும். சிறிய விதைதான்ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோதுஅது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? அது நம்மிடம் மட்டுமே இருக்கிறது. நாம் ஒவ்வொரு கணங்களையும் ரசித்து அனுபவித்து வாழ்தோம் என்றால் அதுவே மகிழ்ச்சி. ஒரு பொருள் இருந்தால் தான் மகிழ்ச்சி என்றால் ஏன் அந்த பொருள் நமக்கு கிடைத்த பிறகும் மனம் வெறுமையாய் உணர்கிறது. காரணம் நாம் அந்த கணத்தை அனுபவிக்க மறந்துவிடுகிறோம்.

ஒரு குழுவாக வெளியில் செல்லும் போது சிலர் உற்சாகமாக நடனமாடுவார்.. நம்முடைய மனமும் அப்படி நடனமாட விரும்பும்.. ஆனால் நாம் அந்த கணத்தை அங்கேயே கொண்டாடாமல் தள்ளி வைத்து நமது மகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். நமக்கு தடைபோடும் வெட்க உணர்வுகள், யார் என்ன நினைப்பார்களோ என்ற மூன்றாம் நபரின் கருத்தின் மீதான நமது எண்ணமே நம்மை அந்த கணத்தை உண்மையான மகிழ்ச்சியுடன் கழிக்கமுடியாமல் தடை செய்துவிடுகிறது.

பந்தயத்தில் முதலிடம் பெறுபவன் அந்த கணத்தில் மகிழ்ச்சியை கொண்டாடாமல் வேறு நாளில் அந்த கணத்தின் பெருமிதத்தை, மகிழ்ச்சியை என்ன தான் நினைத்து பார்த்தாலும் நிச்சயம் பெற முடியாது.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவனுக்கு கிடைக்கும் ஆரவார ஊக்குவிப்பும், அரங்கம் அதிரும் கைத்தட்டலும் அந்த கணத்தில் அவனக்கு கிடைக்கும் பரவசமும்.. மீண்டும் பதிவின் ஒளி பிம்பக்காட்சிகளை திரும்பத்திரும்ப போட்டு பார்க்கும்போது நிச்சயம் கிடைக்காது. அது போலவே நமது மகிழ்ச்சியான தருணங்கள் மனதில் இருந்தாலும் அந்த கணத்தில் கொண்டாடாமல் பிறகு நினைத்து பார்ப்பதில் உண்மையான நிறைவு கிடைக்காது..

மகிழ்ச்சியும் நிம்மதியும் நம் கையில் தான் உள்ளது....

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: