வெள்ளி, 28 அக்டோபர், 2016

44. நாம் எந்த வகை..?

வலைவீசும் எண்ணங்கள்

44. நாம் எந்த வகை..?


உலகில் பலவகை மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும் அவர்களை வாழும் வகை கொண்டு இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம். ஒன்று “இதுவே போதும்” என்று இருப்பதில் திருப்தி கொண்டு வாழ்பவர்கள். மற்றொன்று “இதுவல்ல என் இடம், இதுவல்ல என் வாழ்க்கை, இதுவல்ல என் செயல், அடுத்து என்ன?” என்ற கேள்விகளோடு வாழ்கிறவர்கள்.

அதாவது “இப்படியே இருந்து விடமாட்டோமா? என்ற ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து வெளியே வர துணிவில்லாமல் அப்படியே இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்கள் இந்த முதல் வகையினர்..

இரண்டாம் வகையினரோ “இப்படியே.இருந்து விடுவோமோ?” என்ற ஒரு கேள்வியை மனதில் கொண்டு இதில் இருந்து மீண்டு மேலும் மேலும் உயர்வது எப்படி என்ற சிந்தனையில் தங்களை செதுக்கிக்கொண்டு வாழ்பவர்கள்..

இந்த இரண்டுவிதமான மனிதர்கள் கொண்டது தான் இந்த உலகம். “இப்படியே இருந்து விடுவோமோ? இப்படியே இருந்து விடமாட்டோமா?” இந்த வரிகள் பல பதிவுகளை படிக்கும்போது கடந்து வந்த ஒரு ட்விட்டர் பதிவு, ஆனால் பாருங்கள் எவ்வளவு எளிதாக மனிதர்களை இரண்டே வரிகளில் இந்த ட்விட்டர் சொல்லிவிட்டது.

இதுவே போதும் என்று வாழும் முதல் வகையினர் ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து எந்த ஒரு புதிய முயற்சியையும் செய்ய முயலாமல் கிடைக்கும் வாழ்க்கையில் திருப்தி படுபவர்கள். இவர்களின் வாழ்க்கை மாடிப்படியில் ஏறுவது போல் சீரான இடைவெளியில் உயரும். சமயங்களில் சமதளப்பாதை போல ஒரே மாதிரியாகவும் இருக்கும்.

இரண்டாம் வகையினர் பயணிக்கும் பாதை மலையில் இருக்கும் ஒரு கரடு முரடான பாதையில் பயணம் செய்வது போன்றது. இவர்கள் பல இன்னல்கள், சவால்கள், இக்கட்டுக்கள் எல்லாம் கடந்து தங்கள் பயணத்தை முடிக்கும்போது அவர்கள் இருக்கும் உயரம் இந்த உலகமே கண்டு வியக்கும். குறைந்த பட்சம் அவர்கள் சார்ந்து இருக்கும் சமூகம் அவர்களை வியந்து மிகுந்த மரியாதையுடன் பார்க்கும்படியாக கூட இருக்கும்.

பல விளையாட்டுகளில் ஆட்டக்கார்கர்கள் சிலநேரங்களில் பாதுகாப்பு ஆட்டத்தையும் (DEFENSE PLAY), மிகவும் இக்கட்டான தருணங்களில் மிகவும் ஆபத்தான முறையிலான துணிச்சலாக (RISK PLAY) விளையாடுவார்கள். இந்த பாதுகாப்பு ஆட்டம் ஆடுபவர்கள் தான் நாம் கண்ட முதல் வகையினர். ஆபத்தை எதிர்கொண்டு துணிந்து விளையாடுபவர்கள் இரண்டாம் வகையினர்.

முதல் வகையினர் பார்வையாளர்களாய் கை தட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அரங்கில் இரண்டாம் வகையினர் கைதட்டல் பெரும் வகையில் மேடையில் அமர்ந்திருப்பார்.

இந்த இரண்டாம் வகையினர் மனதில் ஊக்கமும், நெஞ்சில் துணிவும், கூடவே துணையாக தன்னுடைய நம்பிக்கையையும் நிறைய வைத்திருப்பார்கள். அவர்களே மேன்மை பெற்று வாழ்கிறார்கள்.

உண்மையில் இருவருமே வாழ்க்கையில் வெற்றிபெற்று திருப்தியாக வாழ்ந்தாலும் முதல் வகையில் ஒரு சலிப்பு இருக்கும். இவர்கள் கூடவே பயணம் தொடங்கியவர்கள் துணிந்து செயல்பட்டு ஏணியில் ஏறி சென்றிருப்பர். முதல் வகையினரோ அவர்களை அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

முதல் வகையினர் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவராக இரண்டாம் நபர்கள் இருப்பார்கள்.

“வாய்ப்புகளால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்துவிட முடியாது, அதற்கு மாற்றங்களும் மிக அவசியம்” என்ற அறிஞர் ஜிம் ரான் குறிப்பிட்டுள்ளபடி இவர்கள் இந்த நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாற நிச்சயம் மாற்றங்கள் அவசியம். அந்த மாற்றம் நாம் துணிச்சலாக ஒரு செயலை செய்வதில் இருக்கிறது.

இந்த உலகத்தில் தேவைகள் தான் பெரும்பாலும் உயிரினங்களை இயங்க வைக்கிறது. அதிலும் முக்கியாக நமது மனித இனம். இங்கு தேவை என்பது நம்மைப்பொறுத்தவரையில் வெறும் பணம் என்றே கணிக்கப்படுகிறது, ஆனால் அதையும் மீறிய தேடல் தான் உண்மையில் நம்மை இயக்குகிறது.

பணம் படைத்த ஒரு மனிதனும் தேடலில் இருப்பன், இல்லாதவனும் ஒரு தேடலில் இருப்பார்கள்.. பணமிருப்பவனுக்கு அன்பு, நிம்மதி, நம்பிக்கையான மனிதர்கள், அமைதி, திருப்தியாக சாப்பிடும் வாழ்க்கை இப்படி பல தேடல்கள் இருக்கிறது. என் என்றால் அவர்கள் பணம் தேடும் முயற்சியல் இதை எல்லாம் இழந்தவர்கள்.

இந்த உலகத்தில் நம்மால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும், ஆனால் அப்படி வாழ்வது தான் வாழ்க்கையா? .புழுக்களும், பூச்சிகளும், ஈக்களும், எறும்புகளும் தான் வாழ்ந்து மடிகிறது? என்ன பெருமை அதில்.

“ஒருவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தாமல் இவ்வுலகத்தை விட்டுச் செல்வதைப் போல ஒரு துன்பம் ஏதுமில்லை”.

அந்த திறமையை வெளிப்படுத்த நாம் துணிய வேண்டும். துணித்து வாழ்க்கையில் செய்யும் ஒரு செயல் தோல்வியை தந்தாலும் அது நமக்கு ஒரு நல்ல பாடமே. நிச்சயம் இழப்பு அல்ல. அது முன்னேற்றத்தில் சிறிய தடை மட்டுமே. முன்னேற்றத்தையே முடக்கியது ஆகாது.

இருவகை மனிதர்கள் பற்றிய ஒரு ஒப்பீடுக்கு வித்தக கவிஞர் பா. விஜய் அவர்கள் ஒரு கட்டுரையில் பகிர்ந்துள்ள இந்த கவிதை நல்ல உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறன். அது:

“ஏக்கத்தோடு வாழ்பவனுக்கு
எல்லா நாளும் மின்வெட்டு..
ஊக்கத்தோடு வாழ்பவனுடைய
ஒவ்வொரு செயலும்
கல்வெட்டு”

அவரே சொல்லியது போல

“உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்..

இந்த இருவகை மனிதர்களை தாங்கியது தான் இந்த உலக வாழ்க்கை.. நாம் எப்படி வாழவேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்.


கருத்துகள் இல்லை: