வெள்ளி, 7 அக்டோபர், 2016

41. பொய்களை விரும்பும் மனது

வலைவீசும் எண்ணங்கள்

41. பொய்களை விரும்பும் மனது


அட என்னங்க.. நம்ம மனசு பொய்களை விரும்புதா? கேள்வி எழுவது சாதாரணம் தானே. ஆனால் உண்மையும் அது தானே.

தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
போற்றும் புகளுரைகள்..
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர்

கூறும் அறிவுரைகள்..கூறும் அறிவுரைகள்.. என்ற வரிகளில் உள்ள பெற்றவர் சொல்லும் புகழுரைகள் பெரும்பாலும் பொய்கள் தானே. ஆனால் நம் மனதோ அதை ரசிக்கிறது.

பெற்றோர்களின் அன்பு காரணாமாக நம்மை உயர்த்தி சொல்லும் வார்த்தைகளில் ஆரம்பிக்கும் பொய்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு வாழ்நாளில் அடிமையாக மாற்றிவிடுகிறது. ஆனால் இந்த பொய்கள் நமது வாழ்க்கையை பெரிதாக புரட்டிப்போடப்போவதில்லை. மனதிற்கு கொஞ்சம் இதம் மட்டுமே தருகிறது. ஆனால் இந்த பொய்களில் மயங்கி அதுவே உண்மை என்று மனம் நினைக்கத்துவங்கும் போது தான் பிரச்சனைகள் துவங்குகிறது.

ஆம், மனம் எப்போதும் யாரவது நம்மை புகழ மாட்டார்களா? என்று எண்ண துவங்கும் நிலையே இந்த பொய்களின் வேலை தான்.

சரி.. இந்த பொய்கள் மனதுக்கு பிடித்துப் போனதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்க முடியும்?

காரணம் பொய் பெரும்பாலும் எல்லோருடைய மனதின் அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. நமது மனதின் எண்ணங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. நம்முடைய மனதிற்கு ரொம்பவும் பிடித்தமானதாய் இருக்கிறது. அதுவும் இல்லாமல் பொய் நாம் நினைக்ககூடிய வகையில் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. எப்படி வேண்டுமோ எப்படி விரும்புகிறோமோ அதற்கு ஏற்றாற்போல் இந்த பொய்யை வளைத்துக்கொள்ள முடிகிறது.

இந்த முயற்சியில் உண்மையின் அழகை சிதைக்கவும் நம்முடைய மனம் தயங்குவதில்லை. இந்த பொய்கள் நிரந்தரமில்லை என்று உணர்ந்தவர்கள் கொஞ்சம் நிதானித்து உண்மையை அறிந்துகொள்ளவும், அதன் வழி நடக்கவும் முடிகிறது. ஆனால் சிலர் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – என்பது வள்ளுவன் வாய்மொழி..

ஆம்.. இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே.. எவ்வளவு தான் உடல்நலம் குன்றி இருந்தாலும் பொய்யாக சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் தாரும் இதம் அந்த நேரத்தில் உண்மையால் தர முடியாது. இந்த இடத்தில் பொய் நன்மை தரும் மருந்தாக செயல்படுகிறது.

பாராட்டுகள் கூட பல நேரங்களில் பொய்யாய் சொல்லப்பட்டாலும் அதன் செயல்பாடு பாராட்டுப் பெற்றவரின் மனதில் நேர்மறையாக செயல்பட்டு உண்மையாக உழைக்கவும், நேர்மையாக செயல்படவும் மேலும் தனது செயல்பாட்டை செம்மை படுத்தும் உதவுகிறது.

சரியாக படிக்காத ஒரு மாணவனை நீ நல்ல படிக்கக்கூடியவன் உன்னால் முடியும். இன்னும் கொஞ்சம் நல்ல முயற்சி செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம் என்று பாராட்டி சில பொய்யுரைகளுடன் தட்டிக்கொடுக்கும் போது மனம் அதை நேர்மறையாக என்று சிறப்பாக செயல்படுகிறது.

மேலும் குறைகளை சுட்டிக்காட்டும் போது அழகிய பொய்யை கூறி அதன் வழி மெல்ல மெல்ல குறைகளை சுட்டிக்காட்டும்போது பல சமயங்களில் நமது வாழ்க்கை இன்பமயமாகிறது. இது நாம் எல்லோரும் தினந்தோறும் பயன்படுத்தும் ஒரு சாதாரண வழி. இதை எதிராளியும் நன்கு உணர்ந்தே இருப்பார். சமையலை பாராட்டி மனைவி மனதை குளிர்வித்து வேறு சில தவறுகளை திருத்துவதும், சமயங்களில் இல்லாத அழகை இருப்பதாக கூறி காதலில் களிப்பதும் என்று பல இந்த வகையில் இருக்கிறது. அதற்கு தனியாகவே ஒரு பதிவு எழுதலாம்..

சிலநேரங்களில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது, ஆனால் அது நல்வினை ஆற்றும்போது எவ்வித களங்கமும் இல்லை.

அதே நேரத்தில் சில பொய்கள் மனித வாழ்க்கையே தடம் புரட்டிப்போடும் கொடூரம் நிறைந்தது.

எப்படி...?

பைபிளின் வார்த்தைகள் படி மனிதர்களைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே தூதர்களைக் கடவுள் படைத்தார். அந்தத் தூதர்களில் ஒருவன் கலகக்காரனாய் மாறினான்.

சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி பொய்யை பல வார்த்தைகள் கூறி ஏவாளிடம் மனதை மயங்க வைத்து கடவுள் சாப்பிட வேண்டாமெனக் என்று சொன்ன கனியைச் சாப்பிட்டால் அவளும் அவளுடைய கணவனும் சாகமாட்டார்கள் என்று கூறினான். மொத்தத்தில், கடவுள் அவர்களிடம் பொய் சொன்னதாக சாத்தான் குற்றம்சாட்டினான். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் அவர்களுக்கு ஞானம் பிறக்கும்... சுதந்திரம் கிடைக்கும்... என்றெல்லாம் ஆசை காட்டினான்.

சாத்தான் சொன்ன பொய்யை ஏவாள் நம்பினாள். அதனால், அந்தப் பழத்தின் மீது ஆசைப்பட்டு அதைச் சாப்பிட்டாள். பிறகு தன் கணவனுக்கும் கொடுத்தாள், அவனும் அதைச் சாப்பிட்டான். இவ்வாறு, அவர்கள் இருவரும் பாவம் எனும் படுகுழியில் விழுந்தார்கள். ஒரு பொய் ஒரு சந்ததியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. அந்த பாவங்களில் பலனை நாம் அனுபவிப்பதாக பைபிள் சொல்லுகிறது.

நமது நாவை கூரான கத்திக்கு எல்லோருமே ஒப்பிடுகிறோம். கத்தி மருத்துவர் கையில் இருந்து ஓர் உயிரைக் காப்பாற்றுகிறது. கொலையாளி கையில் இருந்து ஓர் உயிரை எடுக்கக்கிறது. இதே போன்றுதான் நாவும். சுவர்க்கம் செல்வதற்கும் நரகம் செல்வதற்கும் முக்கிய காரணமாக நாவுகளில் வழி வரும் வார்த்தைகளில் அமைகிறது.

இஸ்லாத்தில் சொல்லப்படுவது என்னவெனில்.. “நபி(ஸல்)அவர்கள் எவர் தமது இரு தொடைகளுக்கிடையில் உள்ளதையும் இரு தாடைகளுக்கிடையில் உள்ளதையும் பாதுகாத்துக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

நாவை பாதுகாத்தால் சுவர்க்கம் உண்டு என்று பொறுப்புணர்வோடு சொன்ன நபி(ஸல்)அவர்கள்தான் நாவை தவறாக பயன்படுத்தினால் நரகம் உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.”

இஸ்லாம், மனிதன் மனம்போன போக்கில் நாவைப் பயன்படுத்தி இழிவைத் தேடிக்கொள்ளாமல் அவன் கண்ணியத்தோடு பிறரிடம் நடந்து தன் மதிப்பைப் பெற்றுக் கொள்ள வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் அவனை எச்சரிக்கவும் செய்கிறது.

பொய் சொல்வது மிகவும் எளிதானது என்கிற தவறான நமது எண்ணத்தில் இருக்கிறது. ஆனால் அது உண்மையா என்றால்? “பொய்” என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

பொய் சொல்லும் வழக்கம் கொண்டால் கண்டிப்பாக ஞாபகசக்தி அதிகமாக இருக்க வேண்டும். யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். உண்மை பேசுவதில் இந்த அசௌக்கர்யம் இல்லை.

ஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம். அதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.

உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.

சில சமயங்களில் “பொய் சொல்வதா? உண்மையைச் சொல்வதா” என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா? மெய்யா? என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை.

ஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் “உண்மை” தான் நன்மை தரும் விடையாக இருக்கும். உண்மைகள் சொல்லுவது அந்த நேரத்தில் மட்டுமே நமக்கு இக்கட்டையும், வலியையும் தராலாம், ஆனால் நீண்ட கால நோக்கில் உண்மை சொல்லுவதே நிம்மதியானது.

நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள். நாம் கண்ணுக்கு கவர்சியாக இருக்கிறது என்று நீர்க்குமிழியை விடும்பினால் அது சீக்கிரம் உடைந்துபோகும் என்ற உண்மையையும் உணர்ந்தே இருக்க வேண்டும்.

பொய் அற்ப ஆயுள் கொண்டது தான், அதே நேரத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரிடம் ஆறுதலாக “நீ சீக்கிரம் குணம் அடைந்து விடுவாய், உன்னால் சிறப்பாக மீதி நாட்களை வாழ்ந்து மகிழ முடியும்” என்று சொல்லுவதில் இருக்கும் மகிழ்ச்சி கோடி கொடுத்தாலும் வராது.

பொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: