திங்கள், 10 அக்டோபர், 2016

பந்தங்கள்

சமுதாய வாழ்க்கை முறையில் குடும்ப அடிப்படை, திருமண பந்தம் என்பது சமூக கட்டாயம் என்பதை விட இந்த சமூகம் கட்டமைத்த ஒரு சிறந்த அமைப்புகளில் ஒன்று எனலாம்..  வாழ்க்கை என்பது தனித்து வாழும் பலமும், வசதியையும் பெற்ற இளமைப்பருவம் மட்டுமே அல்ல. எல்லோருடைய அன்பும் அரவணைப்பும் தேவையான குழந்தைப்பருவமும்முதிர்ந்து தளரும் முதிய பருவமும் அடங்கியது. இந்த துணை தேவைப்படும் பருவங்களில் நிம்மதியாக வாழ்வே குடும்ப அமைப்பு.. அதை தருவது திருமணபந்தம். வாழ்க்கையை வாழ்ந்து ரசிக்கும் போதுதான் வாழ்வியல் இன்பம் புரியும்.. தொல்லை நிறைந்தது என்று தூர நின்றால் அந்த தூரமே முதுமையில் மிகப்பெரிய துயரமாக நிற்கும்..

சுதந்திரமான வாழ்க்கைக்கு பந்தங்கள் தடை என்று நினைப்பவர்கள் இன்றைக்கு வாழ முற்படும் “பந்தமில்லா வாழ்க்கை முறை” (Living together) என்பது முன்னர் கூறியது போல இளமைத்துள்ளளில் இனிமையாக இருப்பது போல இருந்தாலும் அது ஒரு கசப்பின் விருட்சம் என்பது அப்படி வாழ்பவர்களுக்கு வயோதிகம் நெருங்க நெருங்க மெல்ல புரியும். இந்த “பந்தமில்லா வாழ்க்கை” (Living together) முறையில் உடல் தேவை மட்டுமே பிரதானமாக முன்னிற்கிறது. அது தவிர்த்து மனம் என்பதை முன்னிருத்தினால் தான் பந்தங்களில் உண்மை பிணைப்பும், இனிமையும், தேவையும் உணரப்படும்.

ஆனால் மாறிவரும் இன்றைய சமூக சூழலில் “பந்தமில்லா வாழ்க்கை முறை” (Living together) பெருகிவருவது மனங்களுக்கு இடையேயான புரிதலும், விட்டுக்கொடுத்தலும், அடங்கியும், அடக்கியும் வாழ்தல் பற்றிய புரிதல் இல்லாததும், உலகளாவிய பொருளாதார சுதந்திரமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை விடுத்து முன்னோர்கள் வாழ்ந்த இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை முறையை புறந்தள்ளினால் இந்த சமூகத்தின் சீர்கேடுகளை யாராலும் தவிர்க்க முடியாது.


அன்புடன் சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: