வலைவீசும் எண்ணங்கள்
43. ஒருவேளை..?
ஒருவேளை.. இந்த சொல்லை நாம் பல நேரங்களில்
பயன்படுத்தி இருப்போம். இது முடிந்து போன நிகழ்விற்கும் எதிர்கால நிகழ்விற்கும்
நாம் பயன்படுத்தும் ஒரு சொல்.. நிகழ்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.
இந்த ஒற்றை சொல் நமக்கு பல நினைவுகளை சமயங்களில்
இனிமையாக்கும். நமது கனவுகளை வளமாக்கும்..
“இன்றைக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பது இங்கு
முக்கியமில்லை.... ஒருவேளை....! முடிந்து போன ஒரு நிகழ்வில்...! அந்த நொடியில்,
அந்த நிமிடத்தில், அந்த நாளில் நான் வேறு முடிவு எடுத்து இருந்தால் இன்றைக்கு நான்
இருக்கும் நிலையே வேறு” இப்படி நம்மில் சிந்திக்காதவர் யாரும் இல்லை..
அன்றைக்கு ஒருவேளை நான் வேறு முடிவு எடுத்து
இருந்தால் இன்றைக்கு இந்த கஷ்டங்கள் எனக்கு இருந்திருக்காது என்று தன்னுடைய
வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்களும்.. “ஒருவேளை அன்னைக்கு மட்டும் நான் எங்க
அம்மா அப்பா பேச்சை கேட்டு அவங்க சொன்ன முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்தா? இனைக்கு
இப்படி புலம்ப வேண்டியது இல்லை என்று பல தம்பதியர் புலம்புவதும் காதுகளில்
விழுகிறது.
இந்த “ஒருவேளை” என்பது எதிர்காலம் சார்ந்து
வரும்போது பெரும்பாலும் எதிர்மறை கேள்விகள் தாங்கியும், சமயங்களில் எச்சரிக்கை
உணர்வு கொண்டு நமது செயல்களை பல கோணங்களில் ஆராய்ந்து நடைமுறை படுத்தும், எதிர்மறையாக
நாம் எடுக்கும் காரியம் போக வாய்ப்பிருந்தால் அதுபற்றி நன்கு சிந்திக்கவும், அந்த
செயலின் பல கூறுகளை கண்டறியவும், வெற்றிக்கான வாய்ப்புகள் பற்றி தெரிந்து
கொள்ளவும், சமயங்களில் தந்த முடிவுக்கும் மனதை தயாராக வைத்துக்கொள்ளவும் இந்த
“ஒருவேளை” என்ற கேள்வி நமக்கு பயன்படுகிறது.
எதிர்காலம் பற்றிய “ஒருவேளை” என்ற தொனியில்
எழும்பும் கேள்விகள் நமக்கு மிக மிக அவசியம். இதன் மூலம் வரும் கேள்விகள் நமது செயலை
நன்கு திட்டமிட்டு சிறப்பான வழியில் உறுதியாக முடிக்க உதவுகிறது..
அதே நேரம் முடிந்துபோன ஒரு செயலில் “ஒருவேளை” இப்படி
நடந்து இருந்தால் என்பது வெறும் கற்பனை மட்டுமே. முடிந்துபோன செயலை நம்மால் மற்ற
முடியாது, ஆனால் அதே போலவே வேறு ஒரு நிகழ்வு தற்காலத்தில் நடக்க வேண்டும் என்றால்
“ஒருவேளை” அப்படி நடந்தது போல நடந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியோடு அந்த
அனுபவம் கொடுத்துள்ள முதிர்சியோடு கொஞ்சம் சாதுர்யமாக நம்மால் செயல்பட முடியும்.
நாம் எந்த ஒரு செயலையும் செய்ய திட்டமிட்டாலும் அந்த
செயல் தொடங்க முதல் அடி நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். உலகம் முழுவதும் சுற்ற
கிளம்பினாலும் முதல் அடி வீட்டிற்கு வெளியில் தான் வைக்க வேண்டும் என்பது பிரபல
வாக்கியம்.
ஒருவேளை அந்த முதல் அடியை எடுத்து வைக்காவிட்டால்
எந்த காரியம் நடைபெறும்?
“ஒருவேளை” என்ற கேள்வியை நாம் செய்யும் ஒவ்வொரு செயலை செய்யும்
முன்பும் கேட்டு வாழ்க்கையில் தெளிவாக செயல்பட்டால் “ஒருவேளை” என்ற கேள்வியைக்
கொண்டு இறந்த காலத்தை பற்றி நினைப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க முடியும்.
எல்லோர் வாழ்க்கையிலும் அள்ள முடியாத அளவிற்கு சோகங்கள் குவிந்து
கிடக்கின்றன ஆனால் நாம் அதைவிடுத்து சிதறிக்கிடக்கும் சந்தோசங்களை மட்டும் தேடி
எடுக்க தான் ரொம்பவே மெனக்கெடுகிறோம். எல்லா சந்தோசங்களும் அவமானங்கள், தோல்வி, ஏமாற்றங்கள் என்ற
பலவற்றோடு கலந்த கலவையாக மட்டுமே நமக்கு கிடைக்கும்....
இந்த உலகத்தில் நம்மால் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில்
கட்டிவிட முடியும். ஆனால் நமக்கான கவலையை நாம் யார் மீது சுமத்த முடியாது. அந்த
சுமைகளை நாம் மட்டுமே சுமக்க முடியும்.
ஒருவேளை நமக்கு கவலைகளற்ற வாழ்க்கை வேண்டும் என்றால் நாம் குழந்தைகளாக
இருக்க வேண்டும். அவர்கள் தான் நாம் யாரும் எதிர்பாக்காத கற்பனை உலகுக்கு நம்மை கூட்டிச்சென்று
பல உண்மைகளை மிக எளிதாக உணரவைக்கிறார்கள், ஆனால் நாம் தான் குழந்தைகளும் இன்றைக்கு
அவர்களாகவே இருக்க விடுவதில்லையே.. பேச ஆரம்பித்தவுடன் இந்த உலகத்தையே
படிக்கவேண்டும் என்ற நமது எண்ணத்தை அவர்கள் மேல் திணித்து ஒரு யந்திரமாக
மாற்றிவிடுகிறோமே..
“ஒருவேளை” நீங்கள் வாழ்க்கையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றால்
இந்த தொடரை, இந்த பதிவை படிக்காமலேயே தப்பி சென்றிருக்க முடியும், ஆனால் விதி
அப்படி அல்லவே. நடக்கவேண்டியது எல்லாம் நடந்தே தீரும் என்று இருக்கும்போது நீங்கள்
இதையும் சகிக்க வேண்டியது தான்..
கடவுள் நமது கோரிக்கைகளுக்கு பல சமயங்களில் செவி சாய்க்காமல் நம்மை
அமைதி காப்பது உண்டு. நாம் தான் அந்த நேரங்களில் அமைதி இழந்து தவிப்பும். நீங்கள்
ஒரு வெள்ளிக்கு ஆசைப்படும் போது அதை உங்களுக்கு தராமல் உங்களை உழைக்க செய்யும்போது
அல்லல் படும் மனம் ஒருவேளை உங்களுக்கு ஒரு தங்கமே கிடைத்தால்? அது தான் கடவுளின்
செயலக இருந்தால்? பொறுமையும், ஆழ்ந்த அமைதியும் மட்டுமே கடவுளை நமக்கு
உணரவைக்கும்.
அதிக புத்திசாலித்தனம், அதிக பணம், அதிக பாசம், அதிக சொத்து, அதிக
அதிகாரம் என்று எந்த அதீதும் நமக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதில்லை. அளவோடு
இருக்கும் எல்லாமே மனதுக்கு இன்பம் தான். மனம் தான் நமது எல்லை. ஆனால் உண்மையில்
நம் எல்லோருடைய மனதுக்கும் வானம் கூட எல்லையாக இருப்பதில்லை. ஒருவேளை எல்லோர்
மனதின் எல்லையை சுருக்கி வாழ்ந்தால் உலகம் மிகவும் அமைதியாக, இன்பமாக
இருந்திருக்குமோ என்னவோ?
சில ஆய்வுகள் படி மகிழ்ச்சியான மனம் என்பது பிறவியிலேயே பரம்பரையாக மரபணுவில்
பதியப்பட்டு இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸ் மெகேலோஸ் என்ற விஞ்ஞானி பல நாடுகளிலிருந்தும் 18,000 கல்லூரி
மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடம், மகிழ்ச்சி குறித்து செய்த ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளாரம்.
அதாவது, மரபணு வழியாக இந்த மகிழ்ச்சி, தன்னிறைவு வரும் வாய்ப்பு இருக்கிறதாம். அது, தாய் தந்தை
வழியாகவும், அவர்கள் வளர்ப்பு முறையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை
சாத்தியப்படுகிறது. சலிப்போ, சங்கடமோ மகிழ்ச்சியோ எதுவாகினும்,
பரம்பரைப் பழக்கமும் துணை போகிறது. பெற்றோர் எவ்வழியோ, குழந்தைகள் அவ்வழி
இல்லையா?
ஒருவேளை பணமும் இப்படி மரபணு வழியாக வருவதாக இருந்தால் இப்போது
இருக்கும் வர்க்க பேதம் இந்த உலகில் இன்னும் பெருகி ஒரு நிம்மதி இல்லாத உலகமாகவோ,
அல்லது ஒரு ஆண்டான், அடிமை என்ற சமுதாயமாகவோ மட்டுமே இருந்திருக்கலாம்... சமதர்ம,
சமத்துவ என்ற வார்த்தைகள் அகராதியில் இல்லாமலேயே போய் இருக்கும்.
உண்மையில் எல்லா வேளைகளும் நமக்கு மிகவும் முக்கியமானதும்,
அவசியமானதும், நாம் புரிந்து செயல்படக்கூடியாதாகவும் தான் இருக்கிறது. நாம் தான்
பல சந்தர்பங்களை நழுவ விட்டு பின்னாளில் “ஒருவேளை” அப்படி நடக்காமல் போயிருந்தால்,
“ஒருவேளை” அப்படி நடந்து இருந்தால் என்று சொல்லி முடிந்ததை நினைத்து
புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.
முடிந்தவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள
முயற்சியுங்கள், ஆனால் அந்த முயற்சியில் யாரையும் காயம் படுத்தாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கான வாழ்க்கையை வாழ எப்படி உங்களுக்கு எல்லா உரிமையும்
இருக்கிறதோ அதேபோலவே மற்றவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
நாம் அடைந்த, பெற்ற வாழ்க்கையை நாம் தான் அனுபவிக்க வேண்டும். எல்லாமே
ஒரு திட்டமிட்ட சுற்றில் இந்த உலகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.
எதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ முற்பட்டால் நல்ல அமைதியான
வாழ்க்கையை வாழ முடியும்.
நமக்கு ஏற்றபடி மாற்றி முடியுமானால் நம்மால் சிறப்பான வாழ்க்கை வாழ
முடியும்.
“ஒருவேளை” நம்மால் நமது வாழ்க்கையை பலருக்கும் பயன்படும்வகையில்
மாற்றி வாழ முடிந்தால்.....? எதற்கு இந்த கேள்வி..
வாழ்ந்து தான் பாருங்களேன்.. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இந்த பூமியில் வாழ்கிறீர்கள்
என்பதை உங்களால் உணரமுடியும்.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்