வெள்ளி, 24 ஜூன், 2016

26. மீண்டும் வாழ்க்கை

வலைவீசும் எண்ணங்கள்

26. மீண்டும் வாழ்க்கை

முதன்முதலில் இந்த தொடரை ஆரம்பிக்கும்போது வாழ்க்கை என்ற தலைப்பில் தொடங்கினேன். வாழ்க்கை எளிதில் முடிவதில்லை. அது நம்மை பலவித சோதனைகளுக்கு ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.

ஏனோ மனம் ஒரு தடுமாற்றத்திலும், இனம் புரியாத பதட்டத்திலும், எப்படி..? சுற்றிலும் பல நல்ல உறவுகள் இருக்கையில் அன்பை புரிந்துகொள்ளது பிரிந்து போன ஒரு உறவுக்காக இப்படி ஒரு முடிவை அந்த தம்பி எடுத்தார் என்ற குழப்பமும் அவருடைய பதிவை படித்ததும் கேள்விகளாய் எழுந்தது..

இது நேற்றைக்கு  நாம் அனைவருக்கும் ஏற்பாட்டிருக்கும். அன்பரின் சிறிது நேர தடுமாற்ற மனநிலையில் எடுக்கப்பட்ட மிகத்தவறான மிகப்பெரிய முடிவு. அன்பர் நலமாக இருப்பதில் அனைத்து உள்ளங்களுக்கும் மகிழ்ச்சி.

உண்மையில் நம்முடைய மாசற்ற அன்பை மற்றவர் மீது வைக்கும்போது உள்ளம் அளவிட முடியாத மகிழ்ச்சியில் நிறையும். அதே நேரத்தில் அந்த நபர் நாம் கொடுக்கும் அன்புக்கு துளிகூட தகுதியில்லாதவர் என்று தெரியவரும்போது நம் மனம் என்ன பாடுபடும் என்பதையே அந்த கணநேர முடிவின் விளைவாய் நாம் அனைவரும் உணர வேண்டியதாக இருக்கிறது.

இதுபோன்ற நேரத்தில் மனதை ஆறுதல் படுத்த தனிமையை தவிர்த்து நல்ல நட்புக்களுடனோ, நம்மீது மிகுந்த அக்கறை கொண்ட உறவுகளுடனோ மனத்தின் பாரங்களை பகிர்ந்துகொள்ள துயரங்கள் நீக்கி தெளிவாக முடிவெடுக்க நல்வழி கிடைக்கும்.

வாழ்க்கையில் தற்கொலை என்பது பிரச்சனைகளின் முடிவு என்றால் இந்த உலகம் வெறும் எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும். எல்லா உயிரினங்களுக்கும் பிரச்னைகள் உண்டு. மனித இனம் தவிர எந்த உயிரினமும் இப்படியான முடிவை தேடுவதில்லை. எல்லாமே வாழ்க்கையின் பயணங்களில் வரும் அனைத்தையும் சமாளித்தே வாழ்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பலவிதமான போராட்டங்களுக்கு பின்னால் ஒளிந்து விளையாடி நமக்கு பூச்சாண்டி கட்டுகிறது.

உண்மையில் நாம் மிகவும் பலவீனமானவர்களா? பிரசனைகளை எதிர்கொண்டு வாழ வழியோ, தைரியமோ, தெம்போ இல்லாதவர்களா? கண்டிப்பாக மேற்சொன்ன எந்த காரணமும் இல்லை. நாம் கொண்ட ஆறாவது அறிவின் மூலம் கூடி வாழும் ஒரு சமுதாய விலங்காக இருக்கிறோம். இப்படி கூடி வாழும் வாழ்க்கையில் இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தே இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறோம். அத்தகைய வலிமையான மனம் நம்மிடம் இருக்கிறது.

இதில் எது நம்மை பலவீனப்படுத்துகிறது? “என்னடா... வாழ்க்கை “வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று எந்த சூழ்நிலை நம்மை சிந்திக்க வைக்கிறது? இந்த வாழ்க்கையில்

நம்முடன் யாரும் ஆயுதமேந்தி போராட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை சமாளிக்கும் திடம் நமது மனதிடம் இருக்கிறது. ஆனால் அந்த மனம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். அதுதான் உற்சாகம், அன்பு, அரவணைப்பு, காதல், நேசம், பாசம், கருணை என்று பலவிதங்களில் நாம் சொல்லும் தேறுதல்.

நாம் சோர்ந்திருக்கும் நேரத்தில் இப்படியான தேறுதல் தரும் ஒரு உறவோ, ஒரு வார்த்தையோ, சாய்ந்துகொள்ள ஒரு தோளோ, மடியோ, எதுவும் இல்லாமல் தனிமையில் நிற்பது போற்ற நிலையில் தான் நம்மிடம் இருக்கும் இந்த தைரியம் தொலைந்து போகிறது.

அதுவும் ஆத்தகைய நிலையில் நமது காயங்களை கீறும் அம்புகள் நாம் நேசிபவராலேயே வீசப்படும்போது தோன்றும் கையறுநிலை எண்ணமே “சே..என்னடா வாழ்க்கை இது? என்ற விட்டோத்தியான மனநிலை. இந்த மனநிலையில் நாம் தனித்திருக்காமல் அந்த நிமிடங்களை கடந்து விட்டால் வாழ்க்கை நம் வசப்பட்டுவிடும். அந்த சூழலை நாம் தான் உருவாக்க வேண்டும்.

இந்த அற்புதமான மனிதபிறப்பு என்பது நாம் தேடிப்பெறுவது அல்ல... அதுவாக நமக்கு அமைந்தது. இந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களை நாம் பலநிலைகளில், பல விதங்களில் தினம் தினம் சந்திக்கிறோம், ஆனால் அவைகளில் பெரும்பாலானவை அற்பமானவையாக இருப்பதால் எளிதில் கடந்துவிடுகிறோம். நம்பிக்கையே நமது வாழ்வின் விடிவெள்ளியாய் இருப்பதால் அதைக்கொண்டு பலவற்றை கடக்கிறோம்.

உலகத்தில் ஏமாற்றுபவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக தங்களின் செயலுக்கு வெட்கப்படாமல் வாழும்போது, ஏமாறும் நாம் ஏன் குற்றவாளிக்கூண்டில் ஏறி நின்று கூனிக்குறுகி நமது வாழ்க்கையை தொலைக்க வேண்டும். அவர்களே வாழ்கையை வாழும்போது, நேர்மையுடன், அன்புடன், பண்புடன் இருக்கும் நமக்கு ஒரு வழி இல்லாமலா போய்விடும்.

மண் மூடாமல் விதைகள் என்றைக்கும் முளைப்பதில்லை. என்றைக்கும் பாரம் சுமக்காமல் மனதில் தெளிவு பிறப்பதில்லை. பாரங்கள் அழுத்த அழுத்தத்தான் கரியும் வைரமாகிறது.

உலகில் நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேடும் கடவுள், அன்பு, காமம், மகிழ்ச்சி, விளையாட்டு, பிரார்த்தனைகள் எல்லாமே நமக்கு வரும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக அல்ல.. அந்த பிரச்னைகளை மனம் தாங்கும் வலிமையைப் பெறுவதற்காக மட்டுமே. என்றைக்குமே.. வரும் பிரச்சனைகளை மனம் தளராமல் வென்றெடுக்க வேண்டுமேயன்றி அந்த பிரச்சனைக்கு வாழ்க்கையை பலியாக்கக்கூடாது.

இந்த வாழ்க்கையில் நம்மை சுற்றியுள்ள உறவுகள் உடையும் நேரத்தில், உருகும் நேரத்தில், ஒளியும் நேரத்தில் நமது மனதின் மூலம் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக தீர்மானிப்பதில் தான் நமது வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. எவ்வளவு தான் மனத்துணிச்சலுடன் இந்த உலக வாழ்வை நீங்கும் முடிவு எடுத்தாலும் அது நிச்சயம் கோழைத்தனமான முடிவு மட்டுமே..இதில் போற்றுவதற்கு எதுவுமேயில்லை.

மனம் உடையும் நேரத்தில் கொஞ்சம் நட்புக்கள், கொஞ்சம் சேவைகள், கொஞ்சம் வாசிப்புகள், கொஞ்சம் எழுத்துக்கள், கொஞ்சம் பகிர்தல்கள் என்று அந்த கவலைகளை போட்டு மூடுங்கள். கொஞ்சநாளில் அங்கு ஒரு அழகிய பூச்செடி வளரும்.

சமீபத்தில் படித்த “ கோடி பேர் வாழும் பூமில் அவர்களுக்கென்று ஒரு மூலை இல்லாமலா போய் விடும். தன கிளைகளில் துளிர்க்கும் ஒவ்வொரு இலைக்கும் மரம் இடம்  வைத்திருக்கத்தானே செய்கிறது. பழுத்து விழுவதற்கும் தன்னை முறித்து வீழ்வதற்கும் எத்தனையெத்தனை வேறுபாடுகள்.

வாழ்வதற்கான கஷ்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ள கைக்கொள்ளும் தைரியத்தைவிட, மரித்துப்போக நொடிப்பொழுதில் எடுக்கும் தைரியம் பலமடங்கு கூடுதலானது... வாழ தேவையான தைரியத்தைவிட சற்றே கூடுதல் தைரியம் கொண்டு சாகத்துணிபவரின் விரல் பிடித்து தைரியத்தை இடம் மாற்றி வைக்க சொல்லமுடியாதா?.. அவர்கள் இல்லாமலே போவதை எப்படி அனுமதிப்பது? இப்படியிப்படி எண்ணற்ற மொழிகளில் மனதிற்குள் அழுத்தும் குற்றப்பத்திரிகைகள் சார்ந்த வாதங்களுக்கு பதிலற்றே போய் விடுகிறது.

எவருக்கும் சாவதற்கான காரணங்களைவிட வாழ்வதற்கான காரணங்கள் ஒன்றே ஒன்றாவது கூடுதலாக இல்லாமல் போகாது. தேடிபார்ப்போமே...

வாழ்வோம்.. வாழ்க்கை அதுவாய் பழுத்து உதிரும் வரை

என்ற நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் வரிகளை இங்கு எழுதுவது பொருத்தமாகவே இருக்கும்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.

கருத்துகள் இல்லை: