வாழ்க்கை ஒரு
விளையாட்டு என்று முன்னோர்களும், அறிஞர்களும் சொன்னார்கள். இன்றைக்கு நமது
அன்றாட வாழ்வே ஒரு ஓட்டப்பந்தயமாய்
இருக்கிறது. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் நின்று விட்டால் வாழ்வில் நாம்
தோற்றவர்களாக ஆகிவிடுகிறோம். நமது வாழ்கை பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு
நிகழ்வும் விளையாட்டாய் எடுத்துக்கொண்டு நம்முடிய அடிகளை ரசனையுடன் எடுத்து வைக்க
வாழ்வே இனிமைபெரும்.. வாருங்கள் இந்தவாரம் வலை வீசலில் விளையாடுவோம்..
ஒரு விளையாட்டு என்று
எடுத்துக்கொண்டால் இரண்டு அணிகளும் சளைக்காமல் ஒருவருக்கு ஒருவர்
விட்டுக்கொடுக்காமல் விளையாடும்போது பார்க்க சுவாரசியமாக இருக்கும்.
இந்த
சுவாரசியத்திற்காக தான் அந்த ஆட்டத்தை மக்கள் ரசிக்கிறார்கள். உண்மையில் ஆட்டத்தில்
வெற்றி, தோல்விகளை விட அந்த ஆட்டம் ஆடப்படும் விதம் தான் இங்கு
முக்கியமாக இருக்கிறது
நமது வாழ்க்கையும்
ஒரு விளையாட்டு தான். நாமும் நம்முடைய விளையாட்டை தினம் தினம் ஆடிக் கொண்டே
இருக்கிறோம்
நமது விளையாட்டில்
முக்கிய பிரச்சனை என்னன்னு பார்த்தால், நாம் விளையாடும் வாழ்க்கை
விளையாட்டில் நாம் நினைத்தபடியே
எல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது தான். ஒருவேளை நாம் நினைத்தபடி நம்முடைய
வாழ்க்கை அமைந்தால் விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கிறது என்றும், நாம் திறமையாக
விளையாடுவதாகவும் சொல்லுகிறோம். அதேநேரம் நாம் தோல்விகளையே சந்தித்து வந்தால்,
எதிராளியையும், கண்ணில் காணமுடியாத கடவுளையும் பழி சொல்லி நமது தவறுகளை
மறைக்கப்பார்க்கிறோம், அல்லது விளையாட்டே சரியில்லை என்று விலக நினைக்கிறோம்.
உண்மையில் “வாழ்க்கை
என்றால் ஆயிரம், வாசல் தோறும் வேதனை இருக்கும்”, எதுவந்தாலும் போராடி வாழ முனையாலும் என்ற எண்ணத்துடன் வாழ நமது வாழ்க்கையும் சுவாரஸ்யமாக
இருக்கும்
உண்மையில் துன்பத்தை
அனுபவித்தால் தானே இன்பத்தின் அருமையை நன்கு ருசிக்க முடியும். இன்பத்திலேயே
வாழ்ந்தால் சிறு இழப்பும் நம்மை வீழ வைத்துவிடும். அலையில்லாத கடலில் மாலுமி
எதற்கு?
இந்த வாழ்கையைப்பற்றி
நன்கு உணர்ததாலேயே நமது சான்றாண்மையான நமது முன்னோர்கள் சிறுவயதில் விளையாடும்
விளையாட்டுக்களில் வாழ்க்கைக்கு தேவையான எல்லா கருத்துக்களும் பொதிந்த போதனையுடன் ஆனால்
நாமே அறியாவண்ணம் நம் மனதில் அந்த போதனைகள் பதிய வைக்க விளையாட்டை பயன்படுத்தினார்கள்
என்று சொன்னால் நம்மில் பலரும் ஆச்சர்யத்தில் திகைப்பார்கள்..
ஆனால் நான் சொல்லுவது
மிகவும் உண்மை. இந்த உண்மை இத்தனை நாள் தெரியாமல் அந்த விளையாட்டை விளையாடி
இருக்கிறோம் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன். நீங்களும் பாருங்களேன். நமது
முன்னோர்கள் எவ்வளவு அற்புதமான
அறிவார்த்தமான மனிதர்கள் என்பதை இதன்மூலம் நாமும் அறிவோம்..
வாழ்க்கையில் ஏற்றம் மட்டுமே
நிலையானது அல்ல. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறக்கம் எந்த
வழியிலும், எந்த நாழிகையிலும் வரலாம் என்பதை *பரமபத”
விளையாட்டு எவ்வளவு எளிதாக உணர்த்தி நமது மனதை பதப்படுத்துகிறது.
கணிதத்தை எப்படி எளிமையாக
கையாளலாம் என்று நாம் விளையாடும் எத்துணையோ விளையாட்டுகள் நமக்கு
சொல்லித்தருகிறது. கூட்டலையும்... பெருக்கலையும்... விளையாட்டாய் கத்துகொடுக்கும் *கிட்டிபுள்’, சரியான வழியில் கணக்கிட்டு முத்து எல்லாம்
“பல்லாங்குழி”..
வெட்டி வெட்டி வெளியில்
எறிந்தாலும்... மீண்டும் மீண்டு(ம்) தொடக்கத்திலிருந்து துவங்கி தளராமல் நம்முடைய இலக்கை
அடைய நம்பிக்கை ஊட்டி சொல்லித்தரும் *தாயம்”...
நம் மீது எந்த திசையில்
இருந்து தாக்குதல் வரும். நாம் அடுக்கிய கட்டிடம் எப்படி சரியும், அதை எப்படி
அடுக்குவது, வேகத்தில் விவேகத்தோடு தாக்குதலில் இருந்து தப்பித்தோ அல்லது
தாக்குதலின் வலியை பொறுத்துக்கொண்டு நமது வேலையை முடிப்பதும் என அழித்தலும்
ஆக்கமும் நம்முள்ளுண்டு என்பதை உணர்த்தும் *ஏழுகல்”....
போராடுவோம், போராடுவோம்.
இறுதிவரை போராடுவோம். போராட்டத்தில் ஒரு சிப்பாயாக இருந்தாலும் சாதுர்யம்,
சாமர்த்தியம் கொண்டு முன்னேறினால் நமது தோற்றமே மாறும், ஆம் சக்தி மிக்க ஒரு
ஆளுமையாக உருவாகலாம் எனபதை சொல்லும் *சதுரங்கம்”...
நமது கண்டுபிடிக்கும்
திறமையும், நம்மை மறைத்துக்கொண்டு வாழும் திறமையையும் சொல்லித்தரும்
“கண்ணாம்பூச்சி”...
எல்லோருடனும் சமமாக நமது
திறமை இல்லை என்றாலும் நம்மளும் சாதிக்க முடியும் என்று திண்மையாய் சொல்லித்தரும் *நொண்டி”...
நட்புக்கு கைகொடுத்து
நட்புக்களை உயரே உயரே கொண்டு செல்ல தோள்கொடுக்கும் நட்பின் இலக்கணம் போதிக்கும்
வேளையில், பணிவையும் நமக்கு கற்பிக்கும் *பச்சைகுதிரை”....
யோசித்துப்பாருங்கள்..
எத்தனை எத்தனை விளையாட்டுக்கள் இன்னும் இதில் சொல்லாததும் நமது வாழ்கையை
விளையாட்டாய் விளையாடிக்கொண்டே வெற்றி என்னும் படிகளில் ஏற நமக்கு ஊக்கம் தரும்
எளிய விளையாட்டுக்கள். இந்த விளையாட்டின் தாத்பரியம் புரிந்துகொண்ட வாழ்ந்ததால்
தானோ என்னவோ அந்தகாலத்தில் தற்கொலைகள் அவ்வளவாக இருந்ததில்லை போலும்..
இன்றைக்கு விளையாட்டிலும்
வேட்டிப்போடுவதும், சுட்டுத்தள்ளுவரும், முட்டிக்கொண்டு மோதுவதும்... அவை என்ன போதிக்கும்.. வெறும் வன்மமும், கோபமும்,
விட்டுக்கொடுத்து வாழும் இயல்பு இல்லாத கல்நெஞ்ச குணமும் மட்டுமே..
இன்றைக்கு நமது
வாழ்க்கை என்பது நேரடியாக ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்த்துக் கொண்டு
இருக்கையில் வரும் ஒரு உணர்ச்சிப்பிழம்காக அல்லவா இருக்கிறது. அதை பார்க்கும்போது
எத்தனை உணர்ச்சிகள், பதட்டம், கோபம், ஆத்திரம், இயலாமை என்று. அதை தானே நம்முடைய
அன்றாட வாழ்விலும் காணுகிறோம்.
சரி இதில் விடுபடுவது
எப்படி.. எப்படி நேரடி விளையாட்டு நடக்கும் போது உணர்ச்சிகரமாக இருப்போமோ அதற்கு
நேரெதிர் மறுஒளிபரப்பு சமயத்தில் பதட்டம் இல்லாமல், அமைதியாக, இனிமையாக ரசிப்போமோ
அந்த மனநிலையை நாம் பெற முயற்சித்தால் வாழ்க்கை விளையாட்டு நிம்மதியான ஒன்றே..
ஆம், வாழ்க்கையும்
ஒரு நேரடி ஒளிபரப்பு விளையாட்டாய் நினைத்தால், நமக்கு எப்போதும் ஒரு பதட்டமும்,
பயமும், பாதுகாப்பின்மையும் கூடவே இருக்கும். அதையே ஒரு மறுஒளிபரப்பு போல எண்ணி எல்லாமே
நன்றாகத்தான் நடக்கும் என்று ஒரு நேர்மறை மனநிலையை
கொண்டு வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கை ஒரு இனிய நிகழ்வே
விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும்
சரி , மனம் அமைதியாக, சமநிலையில் இருந்து
செயல்பட துவங்கினால் போதும். எதையும் சந்திக்கலாம். எவ்வளவோ சாதிக்கலாம்.
இனிய
வணக்கங்கள்....
அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக