வலைவீசும் எண்ணங்கள்
27. வெளித்தோற்றம்
நமது வெற்றியை, மகிழ்ச்சியை, ஈர்க்க
நமக்குள்ளே ஒரு காந்தம் இருக்கிறது. எப்படி பால்வெளியில் அண்டத்தின் காந்தப்புலம்
சரியாக ஒத்து இருந்தால் தான் அண்டம் பிரச்சனை இல்லாமல் இயங்குமோ அது போல நமது காந்தபுலனைச்
சரியாக வைத்துக் கொண்டால்தான் நமது வாழ்க்கை பிரச்சனையின்றி நடக்கும்.” என்று மஹாத்ரயாரா கூறுகிறார்.
உலகம் பலவிதமான
மனிதர்களால் நிரம்பியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திற்கும் மாறுபட்ட குணம்
கொண்டவர்கள். அதே நேரத்தில் மனிதர்களை அவர்களின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து
எடை போட முடியாது. அப்படி முயற்சிப்பதும் பெரும் தவறில் கொண்டுபோய் விடும்.
எல்லோரம் கேள்விப்பட்ட பிரபல வார்த்தை தான் “don’t
judge a book by its cover”..
ஆம் ஒரு புத்தகத்தை முழுமையாக படிக்காமல் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து அது சிறந்ததா இல்லையா என்று முடிவெடுக்க
முடியாது அல்லவா. அதேபோலவே ஒருவரின் வெளித்தோற்றம் மட்டுமே அவரின் உண்மை குணத்தை
கட்டிவிடாது.
என்றைக்கும் நம்மை
நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம்.
வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். வாழ்க்கை பயணத்தில் நாம் நிறைய கற்று
கொள்ள நேரிடும். பலரையும் கடந்து போக வேண்டி இருக்கும். அப்படியான ஒவ்வொருவரையும்
எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும்.
“வெள்ளத் தனைய
மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய
உயர்வு...”
என்ற குறள் படி நமது உயர்வும்
நம்முடைய உள்ளத்தில் எண்ணங்களின் உயர்வை பொருத்து அமையும். எனவே யாரையும் அவர்கள்
பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் தாழ்வாக எண்ண வேண்டாம்.
“உள்ளுவதெல்லாம்
உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை
நீர்த்து...
என்பது போல நாம்
என்றைக்கும் உயர்ந்த உள்ளத்தோடு உயர்ந்து இருந்து மற்றவர்களையும் உயர்வாகவே
எடைபோடுவோம். பின்னர் அவர்களின் செயல்கள் அவர்களின் எடை தட்டை இன்னும் மேலே கொண்டு
செல்கிறதா இல்லை கீழே தள்ளுகிறதா என்பதை முடிவு செய்யும். அவசரப்பட்டு நாம் எந்த
முடிவையும் செய்ய வேண்டாமே..
ஒருவர் தவறானவராகவே
இருந்தாலும் அவர் எல்லோருக்கும் நிச்சயம் தவறானவர் இல்லையே.. அவரையும் உயர்ந்தவராக
எண்ணும் உள்ளங்களும் இருக்கலாம் அல்லவா.. அதற்கான காரணங்களும் அவர்களிடம்
இருக்கலாம் அல்லவே..
நம்மையே
எடுத்துக்கொண்டாலும் நாம் எல்லோருக்கும் நல்லவராக நடந்து கொண்டாலும் நம்மை சரிவர
புரிந்து கொள்ளதவர்களுக்கும், நம்மை பிடிக்காதவர்களுக்கும் தவறானவராகத் தானே தெரிவோம்.
எல்லோரும்
எல்லோருக்கும் என்றைக்கும் நல்லவராக இருந்திட முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை தானே.
அமுதும் விடமாகக்
கூடும்.. விடமும் மருந்தாகக்கூடும். எல்லாம் காலமும், சூழலும் செய்யும் முடிவு
தானே.
நாம் நமது சுயமதிப்பை
வளர்த்துக் கொள்வதன் மூலம் நமது வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். அதுவே நம்மை
உயர வைக்கும். நாம் என்றைக்கும் நம்மைப் பற்றியோ, பிறரைப்பற்றியோ தாழ்வாக எண்ணும்
போது வாழ்க்கையின் வளர்ச்சியும் வளமும் தடைபடும்.
எல்லோரையும் நல்லவராக
எண்ணுவோம். இந்த உலகம் நமக்கு நல்லதாகவே தெரியும். அதே நேரத்தில் தவறானவர்கள்
என்று தெரியும் போது அவர்களை கொஞ்சம் தூரத்தில் வைத்தே பார்த்துக்கொள்வோம்.
கல்லில் இருக்கும்
தேரையை அறியாது அந்த கல் சிறந்தது என்று சொல்ல முடியாது அல்லவா? அதற்கும் தனி
சாதுர்யம் வேண்டுமே.. குரங்கு என்று தோற்றம் கண்டு ராவணனாலும் அவனின் அசுர
சேனையாலும் இகழப்பட்ட அனுமனால் தானே இலங்கை தீப்பற்றி எரிந்தது.
எல்லோரோமே இந்த கதையை
படித்து இருக்கலாம்.
“ஒரு செல்வந்த
முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும்
வணக்கம் சொல்வது வழக்கம். ஆனாலும் ஒரு நாளும் அந்த முதலாளி பதில் கூறியதோ காவலாளி
முகத்தை பார்பதோ கிடையாது. ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு
வெளியே உள்ள குப்பத்தொட்டியை ஏதும் மீந்த உணவு
இருக்கிறதா என்று கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் எதையுமே
கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
மறுநாள் அங்கு புதிதாக
தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காண காவலாளி சந்தோஷத்தில்
எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான். இது நெடுங்காலம் தொடர திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார்.
மறுநாளில் இருந்து அங்கு உணவு இல்லை. இதனால்
அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று.
ஒருநாள் அவன் தனது
முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தி கேட்கவும், பிறகு உணவு வந்த கதை
தடைபட்ட கதை எல்லாம் சொல்லவும் "முதலாளியம்மா 'ஓ' என
அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான்
இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கேட்டான். அதற்கு
முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு
பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். இன்று ஏழாவது
நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்”.
நான் தினமும் தவறாமல்
வணக்கம் சொல்லியும் ஏரெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு
தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான். அடுத்த
நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை
கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில்
சொல்லாமலே அவனது தந்தையைப் போல செல்வான்.
ஒரு நாள் பொறுமையை
இழந்து காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த
சிறுவன் "எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது" என்று
சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.
நாமும் இவ்வாறு தான்
அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே பல நேரங்களில் தவறாக
முடிவெடுத்துவிடுகிறோம்.
இந்தக் கதையிலிருந்து
இரண்டு விசயங்களை எடுத்துக்கொள்ளலாம்;
ஒன்று.. எதையும், யாரையும்
பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.
இரண்டு... நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு
விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு முதலில் அந்த
காவலாளி முதலாளி பற்றி கொண்ட எண்ணம் அவர் யாருக்கும் மதிப்பளிப்பதில்லை. யாருடைய
வார்த்தைகளையும் காதில் வாங்காதது போல செல்கிறார். அவர் கர்வி என்ற எண்ணத்தில்
இருக்கிறான்.
உண்மையை உணர்த்த
தருணத்தில் அவரின் இரக்க குணமும், கேட்காமல் உதவும் குணமும், வள்ளல் தன்மையையும்,
தன்னுடைய குறையை பெரிதாக எண்ணாமல் பிறரின் மீது கருணையோடு இருப்பவர் என்பதையும்
உணர முடிகிறது.
இப்படித்தான் நம்மில்
பலரும் முதலில் ஒருவரைப்பற்றி சரியாக அறியாமல் ஒரு சில நடவடிக்கைகள் வைத்து அவர்
தவறானவர் என்று முடிவெடுத்து விடுவோம். ஆனால் நெருக்கிப்பழகும் போது தான் அவரின் நற்குணங்கள் தெரியவரும். நாம் எடுத்த
முடிவு தவறு என்று தெரிய வரும்.
என்றைக்கும் நாம்
ஒருவரை பற்றி தீர்ப்பு எழுதிவிட்டு பின்னர் அவரைப்பற்றிய விசாரணையில்
இறங்கக்கூடாது. இன்றைக்கு பல விசயங்களில் அது தான் நடக்கிறது.
வெவ்வேறு களங்களில்
வாழும் மனிதர்கள் எல்லாம் ஒரே தராசில் சமமாக நிற்க முடியாது. அழுக்கடைந்த உடையால்
ஏழை என்று நாம் ஒதுக்கும் ஒருவர் தான் ஒரு
விபத்து என்றால் எந்த பிரதிபலனும் பார்க்காமல் அங்கு உதவுகிறார்கள். பகட்டாக இருப்பவர்கள்
வேடிக்கை பார்த்து ஒதுங்கியே செல்லுகிறார்கள். அதற்கு நாம் பல காரணங்கள்
சொன்னாலும் எல்லா காரணமும் இருவருக்கும் பொது தானே..
“நமது வாழ்க்கை
என்பது புல்லாங்குழல் போன்றது; அதில் இன்பமும் துன்பமும் அதன் துளைகளைப்
போன்றது. அதை மூடியும், திறந்தும்,
திறந்தும், மூடியும்.. எவன்
ஒருவன் இனிமையான இசையை எழுப்பி ஆனந்தம் அடைகிறானோ... அவன் வாழ்க்கையை வாழ கற்றுக்
கொண்டவன்...” என்ற வரிகள் நமது வாழ்க்கை பற்றிய தெளிவை
வழங்குகிறது.
இப்படியான
வாழ்க்கையில் அவரசப்பட்டு ஒருவரைப்பற்றி, அவரின் குணம் பற்றி நாமே தீர்ப்பெழுதி
பின்னர் அந்த தவறுக்காக வருந்தும் நிலை அடையாமல் பொறுமையை எந்த முடிவையும்
எடுப்போம்.
இனிய
வணக்கங்கள்....
அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக