வெள்ளி, 17 ஜூன், 2016

25. சுகமா? சுமையா?

வலைவீசும் எண்ணங்கள்

25. சுகமா? சுமையா?

வாழ்வின் உண்மையான சந்தோஷம் எதில் இருக்கிறது? உண்மையில் நமது வாழ்க்கை வெறும் சந்தோசங்கள் மட்டுமே நிரம்பியதா? இன்றைய வாழ்க்கை சூழலில் மனித வாழ்க்கை என்பது சுமைகள் நிறைந்த ஒரு பயணமாக இருக்கிறதா இல்லை சுகங்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததாக இருக்கிறதா? வாருங்கள் அப்படியே வாழ்க்கையில் பயணப்பட்டு வலைவீசி தேடிப்பார்ப்போம்.

இன்றைய உலக சூழல், வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில் மனித குலத்தை நிறுத்தியுள்ளது. கொஞ்சம் ஆசுவாச படுத்த நிற்கலாம் என்றால் பிறர் நம்மை கீழே தள்ளி மிதித்துக்கொண்டு ஓடும் நிலையில் சுற்றிலும் போட்டிகள் நிறைந்து இருக்கிறது. அது வியாபாரம் ஆகட்டும், விளையாட்டு ஆகட்டும், வேலைகள் ஆகட்டும், அரசியல் ஆகட்டும். கொஞ்சம் அசந்தால் போதும் நம்முடைய நிலை (position) (வேலையில், தொழிலில் நமது நிலை) நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது.

எத்தனை எத்தனை ஆண்டு போராட்டமாக இருந்தாலும் கொஞ்சம் அசந்தால் எல்லாம் பறிபோகும் அபாயத்தில் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. இந்த இறுக்கமான சமூக சூழலில் இன்பம், சந்தோசம், ஓய்வு எனபது இடையில் கிடைக்கும் சின்ன விருந்துகளாக நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. மூச்சுக்காற்றாய் இருக்கும் வாழ்க்கையின் சுமைகளை சுமந்து செல்லும் நமது பயணங்கள் எல்லாமே சந்தோசத்தின் எல்லையை நாம் தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையின் வேர்களை பற்றிக்கொண்டு முன்னேறுகிறது.

சூழ்நிலை கைதியாய் வாழ்க்கை இன்றைக்கு நம்மை சிறைபடுத்தி வைத்துள்ளது. எத்தனை எந்தனை வஞ்சனை, சூழ்ச்சி, வேலை அழுத்தம், எந்தனை கிடுக்கிப்பிடிகள். இத்தனை அழுத்தங்களையும் மனதில் தாங்கி நாம் வாழ்வதின் காரணம் வாழ்க்கை எனபது என்றைக்கும் சுகமான ஒரு பயணம் என்பதே. நாம் சுமக்கும் அனைத்து சுமைகளையும் நமது வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சந்தோஷ தருணங்களும் இறக்கி வைத்து விடுகிறது.

இன்றைக்கு வேலையின் பொருட்டு நிற்காமல் ஓடும் ஆண்களாக இருந்தாலும் ஒருபுறம். படிப்பு சுமை அழுத்தும் பிள்ளைகள் நிலையாகட்டும், கணவனை, பிள்ளையை கவனித்து அரைகுறையாக வயிற்றை நிரப்பி வேலைக்கு ஓடும் பெண்களாகட்டும் மாலையில் வீடு திரும்பியவுடன் வீட்டில் அனைவரும் ஒன்று கூடி பகிரும் மகிழ்ச்சியில் தான் வாழ்வின்  சூட்சுமம் ஒளிந்துகொண்டு நம்மை வாழ வைக்கிறது.

நாம் படித்து கடந்து வந்துள்ள வரலாறுகளில் “கஜினி தோற்றிருக்கிறார்; எடிசன் தோற்றிருக்கிறார்; பெர்னார்ட்ஷா பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார் ஆனால் அவர்கள் எல்லோரும் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி பெற்றதால் தான் அவர்களின் வரலாறுகளை படிக்கிறோம். சுமைகள் மட்டுமே வாழ்க்கை என்றால் தோல்விகள் மட்டுமே தொடர்கதைகள் அல்லவா.

நமது சுமைகளின் வலிகள் நம்மை எவ்வளவு அழுத்தினாலும், நாம் தோல்விகளால் துவளாது நமது பாதையில் பயணங்களை தொடர்த்து கொண்டு இருக்கையில் வெற்றி நம்மை தேடி வருகிறது. உண்மையில் “முதல் தடவை செய்வது முயற்சியல்ல, மூச்சுள்ள வரை செய்வதே முயற்சி' என்பதே வெற்றியின் ரகசியம். அந்த வெற்றியே நம்பிக்கையின் வேர். நம்பிக்கை சந்தோசத்தின் ஆரம்பம்.

நூற்றாண்டுகளுக்கு முன் கண்ட பூமி இன்றைக்கு இல்லை. 'பூமி வெப்பமாகி வருகிறது, கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இது எல்லாமே மனித தவறுகளே. நாம் வாழ்க்கை இனிக்க வேண்டுமானால் நமது வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்தது போல இயற்கையுடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்.

இன்றைய நமது சுமைகளுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் நாமே காரணம். ஆசைகளின் எல்லைகள் விரிய விரிய நமது சுதந்திரந்தின் எல்லை சுருங்கி வாழ்வின் இன்பங்கள் ஒளிந்துகொண்டு நம்மை தேட வைக்கிறது. பிறருடனான நமது எதிர்பார்ப்புகளையும், நமது ஆசைகளையும் சுருக்கிக்கொள்ளும் போது நமது சுதந்திரந்தின் எல்லைகோடு மகிழ்ச்சியை நமக்கு தாராளமாக தந்து விரிவடைகிறது.

நேசங்களை நாம் எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லோருக்கும் கொடுக்கும்போது பாசங்களும், இன்பங்களும், அன்பு நெஞ்சங்களும் நம்மை சூழ்ந்து நமக்கு சாமரம் வீசும்..

நமது மனதில் போட்டி, பொறாமை ஒதுக்கி அன்புடன் விட்டுக்கொடுத்து வாழும்போது வாழ்வில் நம்பிக்கை கூடி சந்தோசம் பூக்க ஆரம்பிக்கிறது. நாம் தற்புகழ்ச்சியை வெறுத்து,  பெரியவர்களுக்கு உண்டான மதிப்பு கொடுத்து,  'நான்' தொலைத்து “நாம் என்ற எண்ணத்தோடு குழுவாக இணைந்து செயலாற்றும்போது வெற்றிகள் நமக்கு “சந்தோசம் என்ற பூச்செண்டை வாசலில் வைத்து நமக்கு சேவகம் செய்யும்.

நாம் பெரும் வெற்றியில் கர்வம் கொள்ளாமல் நம்மிடம் தோற்பவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களை நம்முடன் இணைத்து பயணிக்க மனதை பண்படுத்த வேண்டும். அவர்கள் நம்மிடம் தோற்கவில்லை என்றால் நமக்கு ஏது வெற்றி? தோல்வி அடைந்தவரின் அவர்களின் போராட்டமும் உண்மையான உழைப்பு தானே. அதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியதும் அவசியம் தானே.

உண்மைகள் புரிந்துகொள்ளப்ப்படும்போது எல்லாமே இன்பமாக இருக்கும். பொய்கள் வென்றாலும் நிலைக்காது என்ற உண்மையை ஏற்று அமைதியாக நாம் வாழும் போது நமது மனதின் துக்கங்கள் தீர்ந்து வாழ்க்கை இனிதாகிறது.

நாம் வாழும் இந்த பூமியில் நமது வாழ்க்கை ஒரு பயணம் மட்டுமே... ஆனால் நாம் அனைவரும் ஒரு தேவையை மனதில் கொண்டு அதை தேடி நமது பயணத்தை தொடங்கி கடைசியில் வாழ்க்கையை ஒரு பந்தயகளமாக மாற்றி சோர்ந்துபோய் நிற்கிறோம்.

வாழ்க்கையில் சோதனை மேல் சோதனை நம்மை அழுத்தும்போது கடவுளை நிந்திக்கிறோம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.. எல்லா கிளைகளிலுமா பறவைகள் கூட்டமாக அமர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறது. இல்லையே.. “தாங்குகிற கிளைகளில் மட்டுமே பறவைகள் தங்குகிறது இந்த உண்மை நம் மனதில் பதிந்தால் நம்முடைய வேதனைகள், துக்கங்கள், சோதனைகள் எல்லாம் இன்பத்தின் வேர்களுக்கான உரங்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

நம் வாழக்கை என்றைக்கும் சுகமாக இருக்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாம் தடையின்றி கிடைக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை என்பது கனவில் நடப்பது இல்லை. சந்தோசங்களும் என்றைக்கும் கனவாய் போவதில்லை. நம்முடைய எண்ணங்களில் அடிப்படையிலேயே வாழ்வின் சுவைகளும், இன்பங்களும், களிப்புகளும் நமக்கு கிடைக்கிறது.

பணமிருந்தால் எல்லாம் சாதிக்கலாம, பணமே சுகத்தின், இன்பத்தின் நுழைவுச்சீட்டு என்று ஒரு கூட்டம் இந்த உலகத்தில் கூப்பாடு போட்டு வாழ்கிறது.. பணம் தான் சுகம் என்பது வெறும் கானல் வரிகளே. அந்த பணத்தை அளவில்லாமல் வைத்திருப்பவனிடம் கேட்டால் நிம்மதி என்பது பணத்தால் கிடைக்காது என்பதை பல கதைகள் சொல்லி நமக்கு வகுப்பெடுப்பார்கள்.

முன்பே சொன்னது போல ஆசைகளை கட்டுக்குள் அடக்கி வாழ்வதில் தான் வாழ்வின் சுகம் ஒளிந்துள்ளது. இன்றைய சூழலை நாம் உற்றுப்பார்த்தால் நம்மை சுற்றிலும் ஆசையை தூண்டும் காரணிகளே நிறைந்துள்ளன. அந்த சூழலில் இருந்து விலகும்போது சந்தோசம் நம் தோளில் வந்து அமர்ந்து நலம் விசாரிக்கும். அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஞானிகள் சொல்லுவது போல நாமும் நமது குறிக்கோளை விரிவாக்கி வாழ முடியும். ஆனால் அந்த ஆசைகள் வெறும் பகட்டு சார்ந்ததாக இல்லாமல் உறவுகளின் மகிழ்ச்சி சார்ந்ததாக இருக்கும்போது சந்தோசம் இன்னும் கூடும் எனபது உண்மையல்லாவா?

நிலையாமை என்பது உலகின் நியதி. இந்த நிலையாத வாழ்வியல் பயணத்தில் நம்மால் ஆன சிறு சிறு உதவிகள் மூலம் நம்மை சுற்றி உள்ளவர்களை சந்தோசப் படுவோம். அது பொருளாக கொடுத்து தான் என்பதல்ல. நமது சிறு செய்கையும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரும். ஒரு நன்றியிலும், ஒரு புன்னகையிலும், ஒரு அன்பு வார்த்தையிலும் நாம் பிறருக்கு சந்தோசம் தர முடியும்.

இயக்குனர் திரு. பாக்கியராஜ் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் அடிக்கடி சொல்லுவது “சந்தோசத்தில் பெரிய சந்தோசம் மற்றவர்களுக்கு அந்த சந்தோசத்தை தந்து பார்க்கும்போது வரும் சந்தோசமே. நீங்களே ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன் இந்த சந்தோசத்தை..


“தாங்குகின்ற தகுதி இருக்கின்ற கிளைகளில் தான் பறவைகள் வந்து அமர்கிறது...... நாம் சந்தோசம் என்னும் கிளை பரப்பி வைப்போம். சந்தோசம் தேவைப்படுபவர்கள் வந்து அமரட்டும். நாமும் அதில் சந்தோசம் காண்போம்.

கருத்துகள் இல்லை: