வலைவீசும்
எண்ணங்கள்
13. ரசித்து செய்வோம்
அன்பு நண்பர்களே.. ஒரு செயலை நாம் விரும்பி செய்வதற்கும், பிறர்
வற்புறுத்தலால் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். நாம் நமக்கு பிடித்த
ஒரு காரியத்தை செய்யும்போது கூடவே ரசனை வந்து ஒட்டிக்கொள்கிறது. அந்த ரசனையோடு ஒரு
செயலை செய்யும்போது அது இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். இந்த ரசனை பற்றி வலை
வீசலாம் வாருங்கள்..
நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், அடிக்கடியும் கேள்விப்படுகிற ஒரு
விஷயம் தான் இலக்கை நிர்ணயிப்பது (goal
setting).
நாமே பலருக்கு அறிவுரை வழங்கி இருப்போம். நமக்கும் அந்த அறிவுரைகள் அதிகம்
கிடைத்திருக்கும். அதன்படியே
நாமும் லட்சியத்தை அடைய தீவிரமாக முயற்சி செய்வோம். அது மனித இயல்பு. தவறில்லை.
ஆனால் வெளியில் இருந்து ஒருவரின் மூலம்
கிடைக்கும் ஊக்கத்தில் மட்டுமே நம்மால் அந்த லட்சியத்தை அடைந்துவிட முடியுமா? என்றால்
கொஞ்சம் சந்தேகம் தான். ஏன்? கொஞ்சம் யோசித்தால் ஒன்று நன்றாகத் தெரியும். அது தான்
ரசனையின்மை. அதாங்க “Passion”.
அது என்ன ரசனை..????? வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களை அடைந்த பல
வெற்றியாளர்களின் வாழ்க்கைப் பக்கத்தை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால், அதில், நமக்கு
தெரியும் மிக முக்கியமான மற்றும் பொதுவான விஷயம் தான் இந்த ரசனை
(Passion).
நீங்களே ஒரு பட்டியலிட்டு பாருங்கள். உங்களை சுற்றியும், இந்த
உலகத்திலும் பலரையும், பல பிரபலங்களையும் பட்டியலில் காணலாம். அவர்களின் பேட்டிகளை
நாம் கொஞ்சம் கூர்ந்து படித்தால்
இருக்கும் அடிப்படை ஒற்றுமை இந்த ரசனை தான். வெற்றியாளர்கள் அனைவரும் தங்கள்
வேலைகளை மிகவும் பிடித்து ரசித்து அதிலேயே மூழ்கி ஒன்றிணைந்து செய்ததால் தான்
அவர்களில் வெற்றிபயணம் தொடர்ந்திருக்கிறது.
இந்த வெற்றியாளர்கள் அனைவரும் குறிப்பிடும் பொதுவான கருத்து இது தான், “உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு செயலை,
வேலையை, விளையாட்டை உங்கள் இலக்காக, வாழ்க்கை குறிக்கோளாக எடுத்துகொண்டு செய்யும்
போது அந்த செயல் என்றைக்கும் ஒரு கடினமான செயலாக இருக்காது. (“chase your passion”, “Love what you do, do what
you love”, “Don’t limit your challenges, but challenge your
limits”)
ஒரு சின்ன உதாரணம். நீங்கள் திங்களில் இருந்து சனி வரைக்கும் வேலை
செய்தாலும் அந்த சனிக்கிழமை மாலையில் ஒரு உற்சாகம் வரும் பாருங்கள். ஞாயிறு
விடுமுறை என்ற எண்ணமும் வீட்டில் குடும்பத்தோடு இருக்கலாம் என்ற எண்ணமும் தரும்
உற்சாகம் அது.
அதே போல நம் பள்ளி நாட்களை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வருவோம். வாரம்
முழுக்க வகுப்புகள் இருந்தாலும் வாரத்தில் ஒரு நாள் வரும் விளையாட்டு பிரிவேளை
எவ்வளவு உற்சாகம் தரும். நாமும் எவ்வளவு குதூகலம் கொள்வோம்.
அதே நேரம் ஒரு பிடிக்காத பாடவேளையில் நாம் அவ்வளவு சங்கடத்தோடு
வகுப்பறையில் அமர்ந்திருப்போம். மனமும் சோர்ந்து இருக்கும். விளையாட்டு என்றல்
துள்ளிக்குதித்து முன்னனில் இருக்கும் நமது மனது தேர்வு என்றால் நிச்சயம் உற்சாகம்
இழக்கும். அதுவும் திடீரென்று ஒரு ஆசிரியர் அவருடைய வகுப்பு நேரத்தில் சிறுதேர்வு
(test) வைத்தால் நமக்கு மிகவும் கசக்கும். என்னெனில் நாம் அனைவரும் தேர்வை
என்றைக்கும் ரசித்து ருசித்து செய்வதில்லையே.
நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யும்போது நாம் மிகச்சுலபமாக
ஆபத்துக்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் மனநிலை பெறுகிறோம். எடிசனைப் பாருங்கள்.
எந்தனை, எத்தனை முயற்சிகள்! எவ்வளவோ தோல்விகள்... எப்படி இருந்தால் என்ன
தன்னுடைய குறிக்கோளை விடாப்படியாக மனதில் கொண்டு மிகவும் ரசித்து தன்னுடைய
சோதனைச்சாலையில் தன்னுடைய சாதனை முயற்சிகளை தொடர்ந்ததால் வெற்றிக்கனிகளை
பறித்தார்.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி என்றால்,
விழுந்த போதெல்லாம் “பலமடங்கு சக்தியுடன்” எழுந்தான் என்றால், அது மிகப் பெரிய வெற்றி.
விழுந்த போதெல்லாம் “பலமடங்கு சக்தியுடன்” எழுந்தான் என்றால், அது மிகப் பெரிய வெற்றி.
அந்த வெற்றிக்கு தேவையான சக்தியை கொடுப்பதில் இந்த ரசனைக்கு (Passion) மிகப்
பெரிய பங்கு உண்டு.
இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு! இது தெரிஞ்சிருந்தா, இந்த
வேலைக்கே வந்திருக்க மாட்டேன். அவனை மாதிரி அரசாங்க வேலைக்கு போயிருப்பேன் என்று
நம்மில் பலர் சொல்லக்கேட்டு இருப்போம். அதே நிலையில் தான் அரசாங்க வேலையில் இருப்பவரும்
இருப்பார். தன்னுடைய கஷ்டத்தைச் சொல்வார். ஆக, ஒன்னு மட்டும் உண்மை. எல்லாருமே
அவரவர் வேலையில் கஷ்டம் என புலம்புவார்கள்.
ஒரு சின்ன ஜென் கதை..
ஜப்பான் நாட்டில் ஒரு தாயும் சின்ன வயசு மகனும் மட்டும் வசித்த வீடு
அது. ஏழைக்குடும்பம். வீட்டுத் தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது
நிலையில் தாயும் உடல்நிலை சரியில்லாமல் மரணத்தருவாயில் இருந்தார்.
அவளிடம் அந்த சின்னஞ்சிறு மகன் வந்து “அம்மா நீயும் என்னைவிட்டுப்
போயிடாதே. நான் அனாதையாகிடுவேன்”
என்று சொல்லி அவளது கைகளைப் பிடித்து அழுதான். அதற்க்கு அந்த தாய் சொன்னாள், “மகனே!
எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. நம் நாட்டில் ஹிரோஷிமாவும், நாகசாகியும்
எத்தனை அநாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமலா போய்விட்டார்கள்?
ஒன்றை மட்டும் புரிந்து கொள்! உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு
விஷயத்தைச் சொல்வார். அதையே உனக்கு நான் சொல்கிறேன், என்ற தாயிடம், அந்த
துயரமான சூழ்நிலையையும் மறந்து, அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.
“மகனே! நீ ஒருகலைஞனாகி விடு. பிழைத்துக் கொள்வாய். அதற்காக, பெரிய
கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்குகழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால்
கூட அதையும் கூட கலை போலக் கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல், வேறு
யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும். உன் வேலையில் ஒரு
தனித்துவம் வெளிப்பட வேண்டும்” என்றாள்.
ஆம்... வேலையை ரசித்து, விருப்பத்துடன் செய்யுங்கள்... எந்த
வெறுப்பும் கடினமும் இருக்காது.
ரசனையோடு வாழ்வோம்
ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!!
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக