வலைவீசும்
எண்ணங்கள்
11. வெற்றி
வெற்றி என்பது நாம் அனைவரும்
விரும்பும் ஒன்று. அந்த வெற்றி என்றால் என்ன? வெற்றியில் ஒருவர் எப்படி இருக்க
வேண்டும். வெற்றியை எப்படி நமது வாழ்வை சிறப்பிக்க பயன்படுத்த வேண்டும்.... இந்த
வாரம் வலை வீசுவோமா...
நம்முடைய எல்லோர் வாழ்விலும் பலநேரங்களில் நமக்கு
எதிர்பார்த்த வெற்றிகளும்,
சில நேரங்களில் எதிர்பாராத
வெற்றிகளும் கிடைக்கிறது.
நாமும்
பலவிதமான வெற்றிகளை ருசிக்கிறோம். வாணிபத்தில்
வெற்றி, காதலில் வெற்றி, தேர்வில்
வெற்றி, போட்டிகளில் வெற்றி, வாழ்க்கைத்
திட்டத்தில் வெற்றி எனப் பலவிதமான வெற்றிகள்.
அத்தகைய
நேரங்களில் நாம் பெருமிதம் அடைகிறோம். நண்பர்களாலும் உறவினர்களாலும்
பாராட்டப்படுகிறோம். வாழ்த்தப்படுகிறோம்.
அந்நேரங்களில்
நமது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும்? பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்
மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது சிறந்தது தான், இருப்பினும் அந்த வெற்றி, நமக்கு
மட்டுமே உரியது என்னும் எண்ணம் நம்மில் உருவாக அனுமதிக்கக் கூடாது.
“வெற்றிமீது வெற்றி
வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லம் உன்னைச்சேரும்”
என்னும்
பாடல் வரிகளுக்கேற்ப,நாம் அந்த வெற்றியை
பெறுவதற்க்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வெற்றியை நமக்கு பெற்றுத்தந்த
பலரையும் எண்ணிப் பார்த்து அவர்களோடு எப்போதும் வெற்றியை
பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒன்று
மட்டும் மனதில் கொள்ளுங்கள்..என்றைக்கும் உங்களின் சிறந்த குணங்களை வெற்றிக்காக பலிகொடுக்க
வேண்டாம். அப்படி படைக்கும் சாதனைக்கும்,
வெற்றிக்கும் எந்த
அர்த்தமும் இல்லை.. பலனுமில்லை.
நம்மை
சுற்றிலும் நல்ல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்.. வெற்றிபெற்ற மனிதர்களும்
இருக்கிறார்கள்.. ஆனால் ஒருவர்
பெரிய வெற்றி பெற்றபின்பும் நல்லவர்களாக இருப்பது
தான் சிறந்ததிலும் சிறந்தது.
நாமும்
நல்லவர்களாகவும், சிறந்தவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருக்க
வேண்டும். அதை தான் பெற்றோரும், நம்மை சார்ந்தோரும் விரும்புவர்.
யார் வெற்றியாளர் ஆகிறார்.
"வெற்றி பெற்ற மனிதரெல்லம் புத்திசாலி இல்லை...
புத்திசாலி மனிதரெல்லம் வெற்றி காண்பதில்லை"
இது எந்த அளவிற்கு உண்மையாகும். இன்றைக்கு வெற்றி பெற ஒருவருக்கு மிகவும் அவசியமானது சிறந்த யோசனைகள் (Good Ideas).
மிகச்சிறந்த
தமிழக விஞ்ஞானி திரு. ஜி.டி. நாயுடு பிறப்பால் பெரிய
செல்வந்தர் அல்லர். அவர் பெயரையும் புகழையும் சேர்த்தது தனது
சிறந்த யோசனைகளை ஒரு வடிவத்திற்கு கொண்டுவந்து வெளிப்படுத்தியதால் தான்.
நாம்
இப்பொழுது கொண்டாடும் முகநூலை அறிமுகப்படுத்திய திரு. மார்க் ஜுபர்க்கர் அவர்கள்
ஒன்றும் பெரிய செல்வந்தர் இல்லை. மேலும் இந்த முகநூலை அறிமுகப்படுத்தும்
போது வயதில் மிகமிக இளையவராகவும் தான் இருந்தார். அவரின் வெற்றிக்கு
முக்கிய காரணம் அவரின்
சிறந்த யோசனை மட்டுமே.
தனித்தனி
தீவாக மனிதன் மாறிக்கொண்டு இருந்தாலும் அவன் ஒரு சமுதாய விலங்கு. அவர்களின் மனது உண்மையில்
சொந்தங்களுகு ஏங்குகிறது என்பதை மிக சரியாக அறிது மக்களை இணைக்கும் தனது யோசனையை மிகச்சரியாக
சந்தைப்படுத்தியதில் தனது வெற்றியை இன்றைக்கு ருசிக்கிறார்.
வெற்றி
என்பது என்றைக்கும் ஒருவருக்கு மட்டுமே சொந்தமில்லாத உலகை உயிரோட்டத்தோடு வைக்கும்
காற்றைப்போன்றது. அது எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதை சரியாக கண்டறிந்து
வெளிக்கொண்டு வரும் செயல் தான் வெற்றி.
இந்த
வெற்றியின் மிதப்பில் ஒரு நபர் தவறு செய்தால்????
தவறு
செய்வது மனித இயல்பு.. ஆனால் வெற்றியின்
மமதையில் தெரிந்தே தவறு செய்வது என்பது மன்னிக்க இயலாத ஒன்று. இப்படி ஒருவர் தவறு
செய்யும்போது நாம் அவரின் நெருங்கிய
நட்பாகவோ, உறவாகவோ இருந்து
அமைதி காப்பது சரியான செயலாக இருக்காது.
வெற்றியின் கணங்களை நாம் ருசிக்கவேண்டியது தான். தவறில்லை. வெற்றியின் நேரத்தில் மனம் களிப்பில் ஆர்ப்பரிக்கும். அதே நேரத்தில் நாம் பெரும் எல்லா வெற்றியும் நம்முடைய தன்னிப்பட்ட செயலின் மூலம் கிடைத்துவிடாது. வெற்றி உண்மையில் ஒரு கூட்டு முயற்சியால் சாத்தியமாகும் கனியாகும். அந்த வெற்றியில் நாம் ஒரு கருவி மட்டுமே என்ற உண்மையை மனதில் வைத்தால் நாம் என்றைக்கும் அகங்காரம் என்னும் ஏணியில் ஏறி பின் ஒருநாள் கீழே விழும் நிலை வராது.
மரத்தில் வரும் கனி என்பது வெறும் பூவின் வெற்றியா? வேர் முதற்க்கொண்டு மரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளின் உழைப்பால் அல்லவா சாத்தியமாகிறது. வெறும் மரத்தின் உழைப்பு மட்டுமா உண்மையில் அதை சாத்தியப்படுத்துகிறது. இல்லையே.. வெளிக்காரணிகளான சூரியன், காற்று, நீர், மண் இவற்றியின் உதவிகளும் அல்லவா ஒரு கனி உருவாக காரணமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு வெற்றி எப்படி தனி ஒருவருக்கு சொந்தமாகும்.
வெற்றிக்கு தேவைப்பட்ட அந்த கூட்டு முயற்சி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது தனிமனித வெற்றியாக பவிக்கப்பட்டால் அது தவறான ஒரு வெற்றிக்களிப்பாகும்.
உண்மையில் நாமே பலரை பார்த்திருக்கலாம். பெரிய வெற்றி பெற்ற பின்பு அந்த வெற்றியை சரிவர கையாலத்தெரியாமல் பலர் வீழ்ந்திருக்க காண்கிறோம். பல பிரபலங்கள் தங்கள் வெற்றியை மனதில் வைக்காமல் மண்டையில் வைத்து எவ்வளவோ வெற்றியாளர்கள் பலவித போதைகளுக்கு அடிமையாகி அழிந்துள்ளனர்.
அதில் வெகுசிலரே விழுந்த பின்பு எழுகின்றனர். பலரும் உயர்ந்த பின்பு விழுகின்றனர். கீழிருக்கும்போது விழுந்தால் வரும் அடியை விட வெற்றிப்படியின் உச்சத்தில் இருந்து விழுந்தால், அதுவும் மிகவும் உயரத்தில் இருக்கும்போது விழுந்தால்??? எண்ணிப்பாருங்கள்... அந்த அடி நம்மை முழுமையாக வீழ்த்தி விடாதா?
வெற்றியின் போது வரும் நிதானமும், வெற்றியின் போது வரும் பணிவும், வெற்றியின் போது வரும் அன்பும், வெற்றியின் போது வரும் கருணையும், வெற்றியின் போது வரும் பொறுமையும் தான் அந்த வெற்றி நிலைக்கவும், நம்மை அந்த வெற்றிக்கு தகுதியான சிறந்த மனிதராக மாற்றும் வல்லமையையும் நமக்கு தரும்.
ஒவ்வொருவரும் தாங்கள் பெரும் வெற்றியின் போது எப்படி ஆழ்கடலின் நடுவில் அமைதி இருக்குமோ அதுபோன்ற அமைதியை மனதில் கொண்டும், எப்படி கரையில் அந்த கடலின் அலைகள் துள்ளிக்கொண்டு உற்சாகமாக இருக்குமோ அது போன்ற உற்சாகத்தை நமது செயலிலும் கொண்டு வெற்றியை கவனமாக கையால வேண்டும்.
எப்பொழுதுமே வெற்றி நமது தனிப்பட்ட செயல் என்ற எண்ணத்தை உருவாக்கி நமது அகங்காரதிற்கு வலு சேர்க்கக்கூடாது. ஒவ்வொரு வெற்றியும் நமது பொறுப்புணர்வை கூட்ட மட்டுமே செய்ய வேண்டும்.
எல்லாம் இருக்கட்டும்... உண்மையில் வெற்றி என்பது என்ன?
உண்மையில் வெற்றி என்பது ஒரு கௌரவம் அல்ல. அது நமக்கு தரப்பட்ட முக்கிய பொறுப்பு ஆகும். நமக்கு கிடைக்கும் பதவி உயர்வுகளும் நமக்கான சிறப்போ, கௌரவமோ அல்ல. அது நமக்கு கீழே நமது குழுவில் உள்ள மற்றவர்களையும் நம்மை போன்ற வெற்றியாளர்களாக உருவாக்கும் பொறுப்பு.
எப்படி தேசத்தின் தலைவர் என்ற பதவி ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு செலவிடப்பட வேண்டுமோ, எப்படி ஒரு விளையாட்டு அணியின் தலைமை பொறுப்பு தமக்கு கீழேயுள்ளவர்களையும் சேர்த்து வெற்றி கொண்டு அடுத்த தலைமை பொறுப்புக்கு உகந்தவரையும் தேட வேண்டுமோ அப்படியான பொறுப்பு.
நாம் வெற்றி என்ற ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறும்போதும் பொறுப்பு என்னும் ஏணியில் தான் நம் பாதங்களை மிகவும் உறுதியாக பதிக்கிறோம். ஆக, வெற்றி பெற நாம் விழையும் எல்லா செயலும் நாம் அதிகமான பொறுப்புகளை ஏற்று எந்த பொறுப்பை திறம்பட கையால தயாராகிறோம் என்பதே உண்மையாகும்.
நாம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் இருக்கும் ஒரு பெரிய வளமே. நமது செயல்கள் மூலம் நாம் நம்மைப்போன்ற வெற்றியாளர்களை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து போன பிறகும் நம்மை இந்த உலகம் நினைவில் நிறுத்த வேண்டும் என்றால் நாம் மட்டும் வெற்றியாளராக இல்லாமல் நாம் பல வெற்றியாளர்களை உருவாக்க வேண்டும்.
இங்கு நான் ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கிறேன். எப்படி ஒரு சிறந்த ஆசிரியர் பல ஆயிரக்கணக்கான மாணாக்கரை உருவாக்கி நம்முடைய கண் முன்னே மிகச்சிறந்த வெற்றியாளர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்களோ அதுபோலவே நாம் ஒவ்வொருவரும் பல வெற்றியாளர்கள் உருவாக வழியாக இருப்பது
தான் மிகச்சிறந்த செயல் ஆகும். அது தான் மிகச்சிறந்த வெற்றியுமாகும்.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக