வலைவீசும்
எண்ணங்கள்
10. சந்தோசம்
“இடுக்கண் வருங்கால் நகுக..” இப்படி
சொல்லிவச்சிட்டு போயிட்டாரு நம்ம
அய்யன் திருவள்ளுவர்..
அப்படி நாமால் எல்லா நேரத்திலும் சிரித்து
மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
இந்த் சந்தோஷம் என்பது எதில் உள்ளது.. வாங்க இந்த வாரம்
வலை வீசலாம்.
இந்த் உலகத்தில் எல்லா மனிதர்களும் விரும்புவது
சந்தோஷமே .அந்த சந்தோஷத்தை அடைவதற்கு பல வழி முறைகளை முயற்சி செய்து பார்க்கிறோம்.
ஆனால், முழு பலன் தான் கிடைக்க மாட்டேன்கிறது .என்ன
செய்வது?.
அது சரி.. நாம் எதை சந்தோஷம் என்று கூறுகிரோம்?
“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தோஷம் மனிதனுக்கு
மனிதன் சந்தோஷம் மாறுபடும். எதை என்று கூறுவது ".
சந்தோஷம்,
துக்கம் அகிய இரண்டுமே நம் எண்ணத்தில்தான்
உள்ளது. அது கடையில் வாங்க கூடிய பொருள் அல்ல. அது இரண்டுமே
நாம் செய்யும் நடவடிக்கைகளின் பலன். ஒரு செய்கைக்கு காரணம் நம்முடைய எண்ணம். நம்
எண்ணத்தில் உருவாவதற்கு காரணம் சுற்றுப்புறமும், சூழ்நிலையும்,நம்முடைய
ஐம்புலன்களும் தான். இதில் ஐம்புலன்களை மட்டும் தான் நம்மால் கட்டு
படுத்தமுடியும். அதுதான் கடினமானது
ஒரு வேலை செய்யும் பொழுது முழுவதுமாக
சிந்திக்காமல், அந்த வேலையை அரைகுறையாக செய்துவிட்டு பலனை
அடையும் பொழுது நாம் சிந்திக்கிறோம்.
மனித சிந்தனை சரியாக இருக்கும் போது அங்கு
தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் இல்லை. தேவையில்லாத சிந்தனைகள் இல்லாத பட்சத்தில்
அங்கு மகிழ்ச்சி நிலவும். உடம்பில் தேவையில்லாத
கீதையில்
கூறியுள்ளபடி "த்ருஷ்ட்டம், அதிருஷ்ட்டம், துர்திருஷ்ட்டம்," என்று
மூன்று வகை உண்டு. த்ருஷ்ட்டம் - (Visible-
both actions & results) , அதிருஷ்ட்டம்
- ( Invisible - either actions or results
will be invisible), துர்திருஷ்ட்டம்
- (Invisible - either bad actions or bad
results will be invisible)
த்ருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற வேலையும்
அதன் பலனும் காலதாமதமின்றி கிடைக்கபெறுவது. உதாரணமாக, முப்பது
நாட்கள் ஆபீஸ் வேலைக்கு சென்று முதல் தேதி அன்று சம்பளம் வாங்குகிறோமே அதுதான் த்ருஷ்ட்டம்.
அதிருஷ்டம் என்றால், பலனை
எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்காக ஒரு செய்கின்ற வேலை, அதனால்
ஏற்படுகின்ற பலன், காலதாமத்தினால் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.
அந்தப்பலன் கிடைக்கும் காலத்தை தீர்மானம் செய்வது இறைவன் மட்டுமே. இந்தப்
பிறவியில் கிடைக்கலாம் அல்லது அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அதனால், நாம்
செய்கின்ற செயல் தான் முக்கியம்.
துர்திருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற தவறான
வேலை, அதனுடைய பலன் நமக்கு காலதாமதமாகி, நமக்கு எதிரானதாக
அமையும். ஜாதகத்தில் ராகுவும் , சனியும், அந்த
தசை வரும் பொழுது பூர்வ கர்மபலன் சரியில்லை என்றால் ஜாதகனை
தொங்கவிட்டு அடிப்பார்கள் என்று வாத்தியார் பாடத்தில் கூறினார்களே , இதற்கு
பெயர் தான் துர்திருஷ்ட்டம். இங்கு "
தவறான" என்ற சொல்லுக்கு மற்றவர்களுக்கு வேதனை தரக்கூடிய செயல் செய்வது என்று
பொருள் கொள்ள வேண்டும்”
இதையெல்லாம் விடுத்து எது ஒருவருக்கு உண்மையில் சந்தோஷத்தை
கொடுக்கிறது? புலனின்பமா?
அறிவு சார்ந்த இன்பமா? இல்லை
உணர்வு சார்ந்த இன்பமா? எந்த இன்பம் நீடித்திருக்கும்?
முதலில் புலனின்பத்தை எடுத்துக் கொள்வோம். கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து.முகரும் இந்த ஐவகை இன்பங்களும்
பெண்ணிடம் உண்டு. சாப்பாட்டிலும் உண்டு. இந்த இரண்டு வகை இன்பங்களை தேடித் தேடி
ஓடாதவர்கள் உண்டா? இதனால் கிடைக்கும் இன்பம் நிச்சயமாக நிலையானது
கிடையாது.
மேலும் இந்த புலனின்பத்தை அனுபவித்து தீர்த்து
விட முடியாது. மகாபாரதத்தில் வரும் யயாதி கூறியதைப் போல, உலக
இன்பங்களை அனுபவித்து தீர்த்து விடலாம் என்று நினைப்பது எரிகின்ற கொள்ளிக்கு நெய் வார்த்து
அதை அணைத்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பானது. எனவே நீடித்த இன்பத்தை ஒரு
போதும் தராது. இது ஒரு வரம்பிற்குள்
இருக்கவேண்டும்.
அடுத்து அறிவார்ந்த சந்தோஷம்: அறிவார்ந்த
சந்தோஷம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை. ஏனென்றால் அறிவு செயல் பட
ஆரம்பிக்கும் பொழுது சந்தோஷம் விடை பெற்று விடும். சிறு வயதில் மயலின் இறகை நோட்டு
புத்தகத்தில் வைத்து அது குட்டி போடும் என்று நம்பும் சந்தோஷம் வளர்ந்த பிறகு
இருக்குமா?
அடுத்தது உணர்வு பூர்வமான சந்தோஷம்: இது சற்று
உயர்ந்த ரகம்: மேலே சொன்ன இரண்டு ரகங்களும் அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும்
சந்தோஷத்தை தரும் என்றால், இதில் நாம் மற்றவரையும் சந்தோஷப்படுத்தலாம்.
எப்படி என்றால் ஒருவர் பாடுகிறார். அது அவருக்கு சந்தோஷம், அது
நன்றாக இருக்கும் பட்சத்தில் கேட்பவருக்கும் சந்தோஷம். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இன்று இல்லை. ஆனால் அவருடைய சங்கீதம் இன்றும் நம்மை சந்தோஷப்
படுத்துகிறது.
ஏ.பார்த்தசாரதியின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
போல இந்த உலகில் மூன்று விதமான
உதவிகள் உண்டு. ஒன்று பணத்தால் ஒருவருக்கு உதவுவது. இது அதமம் (கடைசி). இரண்டாவது
உடலால் ஒருவருக்கு உதவுவது இது மத்யமம்(இடை நிலை). மூன்றாவது உணர்வு பூர்வமாக
ஒருவருக்கு உதவுவது, இதுதான் உத்தமம் (உயர்ந்த நிலை).
முன்பெல்லாம் எல்லா மகான்களும் பாடகர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள், விளையாட்டு
வீரர்கள் போன்ற சிறந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, நாம்
"எல்லா இடங்களிலும் பெரிய மனிதர்கள் என்றால் ஒரு
தனி கவனிப்புதான்" என்று நினைத்துக் கொள்வோம்.. ஆனால்
அவர்கள் தங்கள் திறமையால் எத்தனை பேர்களை உணர்வு பூர்வமாக சந்தோஷப் படுத்துகிறார்கள்? அதற்கான
அங்கீகாரம்தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். மேலும் இந்த
உணர்வு பூர்வமான சந்தோஷத்தை தெய்வீகமாக மாற்றுவது எளிது.
இதில் எதுவுமே நிலைத்த சந்தோஷத்தை தராது
என்பதுதான் உண்மை. எதுவுமே நீடித்த சந்தோஷத்தை தராது என்பதை கண்டு கொள்வதுதான்
சந்தோஷத்தை தரும்.
யாதனின் யாதனின் நீங்கியாங்கு நோதல்
அதனின் அதனின் இல
எதில் எதில் இருந்தெல்லாம் விலகி இருக்கிறோமோ
அவைகளால் துன்பம் கிடையாது என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னார். நீங்குதல்
என்பது புறக்கணித்தல் அல்ல எட்டி இருத்தல், தாமரை
இல்லை தண்ணீர் போல இருக்க வேண்டும். இதை பழக்கிக் கொண்டோமானால் வாழ்கை இனிக்கும்!
நீங்கள் சந்தோசமாக இருக்க என்ன வேண்டும்..?
கோடி ரூபாய் பணம்..?
ஒரு பெரிய பங்களா..?
கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்..?
லட்ச லட்சமாய் பணம் புரளும் வியாபாரம்..?
இவை மட்டும் கிடைத்து விட்டால் உங்களுக்குப்
போதுமா..? நீங்கள் காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக
இருந்து விடுவீர்களா..? அவரவர் ஆசைகளை ஒட்டி
உங்களுடைய இந்தத் தேவைகள் மாறலாம். அமெரிக்க வேலை, ஆங்கிலம் பேசுகின்ற
தொடர்புகள் இப்படி வெவ்வேறு மாதிரியாய் இவை இருக்கலாம்..
ஆனால் இவை கிடைத்திருக்கிற எல்லோரும் சந்தோஷமாக
இல்லையே… “என்ன வாழ்க்கையடா இது” என்று
அவர்களும் அலுத்துக் கொள்ளத்தானே செய்கிறார்கள்.
பணக்காரன் ஏழையை பார்த்து இவன் என்னைவிட
நிம்மதியாக இருக்கிறான் என்று நினைத்து பெருமூச்சு விடுகிறான். ஏழை பணக்காரனை
பார்த்து அவர்கள் எந்தக் கவலையும் இன்றி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறான்.
மத்திய தர வர்க்கத்தினர் நிலையோ இன்னும் மோசம்.
அவர்கள் பார்வையில் ஏழை, பணக்காரன் இந்த இரண்டு வர்க்கமுமே
சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. கஷ்டப்படுவது தாங்கள் மட்டும் தான் என்பது
அவர்களின் அபிப்பிராயம்.
சந்தோஷத்தை தள்ளிப் போடாதீர்கள். அப்புறம்
சந்தோஸம் என்ற ஓன்று உங்கள் வாழ்வில் இல்லாமலேயே போயிவிடும் .
சரி விஷயத்திற்கு வருவோம். என்ன கிடைத்தால்
உங்களுக்கெல்லாம் சந்தோசம் கிடைக்கும்? கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்.
யாரெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ…. அவர்களிடம் இருப்பெதெல்லாம் உங்களுக்கு
கிடைத்தால் நாமும் அவர்களைப்போல் சந்தோஷமாய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.
நான் சொல்வது சரி தானே! இப்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. எது உங்களிடம் இல்லையோ
அதில் தான் உங்கள் சந்தோஷம் இருக்கிறது என்று நீங்கள் முடிவுக்கு வந்து
விடுகிறீர்கள்.
அப்படியானால் உங்களது சந்தோஷத்தையும் சரி, துக்கத்தையும்
சரி, நீங்கள் தீர்மானிப்பதில்லை… வேறு
யாரோ தான் அதை தீர்மானித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நமது வாழ்கையின் இரண்டு முக்கியமான உணர்வுகளையும்
யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு அப்படி என்னதான் வாழ்கிறீரோமோ தெரியவில்லை.
சந்தோஷம் எதில் தான் இருக்கிறது? ரொம்ப
சுலபம். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நமது எண்ணத்தில் தான் அது இருக்கிறது.
எந்த விஷயத்திலும் ஒரு பிரச்சினையை பார்க்கத்
தெரிந்த பலருக்கு, அதில் நிறைந்திருக்கும் சந்தோஷத்தை மட்டும்
பார்க்க முடிவதில்லையே அது ஏன்? காரணம் அது உங்களிடம் உள்ள ஒரு பழக்கமாக
இருக்கிறது.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஒருவர்
நினைப்பது ஒன்றும் பேராசை இல்லை. அடுத்தவரின் நிம்மதியை கெடுத்து ஆனந்தம் அடைய
வேண்டும் என்று அவர் நினைத்தால் தான் தவறு.
கவலைப்படுவதற்கான காரணிகளைத் தேடித்தேடி
கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நாம்தான் அங்கிருக்கும் சந்தோஷத்திற்கான வெளியை
மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்த
பிறகு யாரால் அதைத் தடுக்க முடியும்.
உங்கள் மனது உங்களுக்குள் தானே இருக்கிறது.
உங்கள் சந்தோஷம் அடுத்தவர்கள் வசம் இருக்கும்போது
தான் அது சாத்தியமில்லை. பல நேரங்களில் நம் மகிழ்ச்சி அடுத்தவரிடம் தானே
இருக்கிறது. எதிர் வீட்டுக்காரன் வீழ்ந்தால் மகிழ்ச்சி. நாம் வாழ்ந்தால் வரும்
மகிழ்ச்சியை விட அவன் வீழ்ந்தால் நாம் அடையும் மகிழ்ச்சி தானே நம்மிடம் அதிகமாக
இருக்கிறது.
சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை
வெளியே தேடிக் கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. வானம், நட்சதிரம், குழந்தைகள், கும்மிருட்டு, கடல், முதியோர்கள்
இப்படி இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் எல்லாமே அவனைப் பொறுத்தவரையில்
சந்தொஷத்துக்குரியவைதான். இப்படி நினைப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்று
என்னுடன் சண்டைக்கு வராமல், உங்கள் மனதுடன் மல்லுக்கு நில்லாமல் சிறிது
யோசித்துப் பாருங்கள்.
எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது இரண்டு
சக்கர வாகனத்தை யார் கேட்டாலும் கொடுத்து விடுவார். இரவு 10 மணிக்கு
மேல், தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, 4 கிலோ
மீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீடு வரை நடந்தே போவார். ஏன் உனது வண்டியை
கொடுத்துவிட்டு இப்படி கஷ்டப்பட்டு நடந்து போகணும் என்று கேட்டால், இதை
யார் கஷ்டம்னு சொன்னார்? என்று சிரிப்பார். நீங்கள் கடைசியாக காலார நடந்து
போனது எப்போது என்று எங்களை பார்த்து கேட்பார். இரவில் அந்த அமைதியான சூழலில், ஒய்யாரமாக
நடந்து போகிற சுகமே தனி. அந்த அறிய வாய்ப்பை எனக்கு வழங்கியது எனது வண்டியை
வாங்கிக் கொண்டு போன அந்த நண்பர்தான் என்பார்.
உங்களால் இந்த அளவுக்கு முடியாவிட்டாலும், எல்லாவற்றுக்குள்ளும், கவனித்துப்
பார்த்தல் சந்தோசம் இருப்பதை நீங்களும் கண்டு கொள்ளலாம்.
சந்தோசம் உங்களுக்குள் இல்லாமல் போவதால் அதை
நீங்கள் எங்கெல்லாமோ தேடிக் கொண்டு திரிவதால்தான் யார் யாரெல்லாம் உங்கள்
மகிழ்ச்சியை தீர்மானிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் எளிதில் உங்கள்
மகிழ்ச்சியை கெடுத்துவிடுகிறார்கள்.
புன்முறுவல்,
துணிவு,
நம்பிக்கை, நாணயம், ஒற்றுமை
போன்றவைகளைக் கொண்டு சிறப்பாக தொழில் செய்பவர்களையே உலகம் வியந்து போற்றுகிறது. `எல்லாம்
என் தலையெழுத்து’ என்று அழுது கொண்டு எந்த ஒரு தொழிலையும்
செய்பவர்களை யாரும் விரும்புவதில்லை. அவர்கள் முன்னேறுவதுமில்லை. எப்படி
இருந்தார்களோ, அப்படியே தான் இருப்பார்கள். நம்மிடம் எது
இல்லையோ, அதை மற்றவர்களுக்குத் தர முடியாது. அழுது கொண்டே
இருப்பவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு மகிழ்ச்சியையும் தந்து விட முடியாது.
அப்படி என்றால், மகிழ்ச்சியை யாரால் தர முடியும் என்பதை நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களுக்கும்
மகிழ்ச்சியை கொடுங்கள். மகிழ்ச்சியானவர்களால் இந்த உலகம் பெரும் மகிழ்ச்சியடைய
வேண்டும்.
உலகில் மிகச்சிறந்த கணிதமேதை ஐன்ஸ்டின்.. பேரூந்தில்
ஒருநாள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கண்டக்டர் தன்னிடம் கொடுத்த மீதிச் சில்லரையை
எண்ணிப் பார்த்துவிட்டு சில்லறை குறைவாக இருக்கிறது என்றாராம். உடனே கண்டக்டர்.. “உங்களுக்கு
எண்ணத் தெரியாது என்று நினைக்கிறேன், ஒழுங்காக எண்ணுங்கள்” என்றாராம்.
யாரைப் பார்த்து எண்ணத் தெரியாது என்கிறாய், நான்
உலகின் மிகச் சிறந்த கணித மேதை தெரியுமா? என்று அவரிடம் ஐன்ஸ்டின் சண்டைக்குப் போகவில்லை.
மனசுக்குள் சிரித்துக் கொண்டே மறுபடியும் அதை எண்ணினாராம்.
அந்த கண்டக்டர் அப்படிச் சொன்ன சமயத்தில் எனக்கு
அடக்கமுடியாத சிரிப்பு தான் வந்தது என்று அந்த சம்பவத்தை பற்றி அடிக்கடி தன்
நண்பர்களிடம் மிகவும் சிலாகித்துச் சொல்வாராம்
ஐன்ஸ்டின்.
ஐன்ஸ்டின் இருந்த இடத்தில் நாம் இருந்திருந்தால், நான்
உயர்தரத்தில் கணக்கில் எத்தனை மார்க் தெரியுமா என்று ஆரம்பித்து ஏதேதோ
பேசியிருப்போம். உங்கள் அறிவாளித்தனத்தை நிரூபிக்க அவருடன் மல்லுக்கு நிற்பதைவிட
உங்கள் சந்தோஷம் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா? ஏன்
இப்படித் தேடித் தேடி கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் சக்தியை செலவிடுகிறீர்கள்.
காரணம் உங்கள் சந்தோஷத்தை நீங்கள் நீங்கள் தீர்மானிப்பதில்லை.. அது தான்
நிதர்சனமான உண்மை.
ஒரு நாள் இப்படி செய்துப் பாருங்களேன். நான்
இன்று முழுவதும் சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்களேன்.
நான் அப்படி சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் அதற்கு என்னிடம் நிறையப் பணம் இருக்க
வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சந்தோஷ எண்ணத்தோடு சந்தோஷமாக இருக்கும் உளவியல்
பயிற்சி இது. அதற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
அப்படி முடிவெடுக்கிற நாளில், காலையில்
இருந்தே மலர்ச்சியாக இருங்கள். மன மகிழ்ச்சியுடன் இறைவனை தொழுங்கள். உங்கள் காபியை
அனுபவித்துக் குடியுங்கள். கல்லூரியோ, அலுவலகமோ உற்சாகமாக எல்லோருக்கும் சிரித்த
முகத்தோடு ஸலாம் சொல்லுங்கள். எப்படி இருக்கீங்க என்று கேட்பவர்களிடம் “ஏதோ
இருக்கேன்” என்று சோகமாக சொல்லாமல், அல்ஹம்துலில்லாஹ்… நன்றாக
இருக்கேன் என்று சந்தோஷமாக சொல்லுங்கள். மதிய உணவை நண்பர்களோடு ஒன்றாக உட்கார்ந்து
பகிர்ந்து சாப்பிடுங்கள். மாலைக்குள் உங்களைச் சுற்றி உள்ள நிறையப் பேர் சந்தோஷமாக
இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
மதியம் வருகின்ற முதுகு வலி, 3 மணிக்கு
வருகின்ற தலைவலி, எப்போதும் வெறுப்பேற்றுகின்ற நண்பர்கள் இந்தத்
தொந்தரவுகள் இன்று இருந்திருக்காது.
ஏன்?
காரணம், இன்று முழுவதும் நீங்கள் சந்தோஷத்தின் காரணிகளை
மட்டுமே கவனித்தீர்கள். உங்கள் சந்தோஷ எண்ணம் உங்களிடத்தில் ஆழமாக இன்று பதிந்து
இருந்தது.
கவலைப்பட வைக்கிற காரணிகளை கவனிக்க விடாமல்
சந்தோஷ உணர்வு உங்களை இயக்கியது. எதை தேடுகிறீர்களோ அதுதான் கிடைக்கும். சந்தோஷமாய்
இருப்பது என்பது உங்கள் விருப்பம் தான். அதை ஏன் யாரிடமோ அடமானம் வைக்கிறீர்கள்?
சந்தோஷத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்… அப்படி
வைத்திருந்தால் யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது… நீங்களும்
அந்த சந்தோஷத்தை நிறைய பேருக்கு கொடுக்கலாம்.
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக