வலைவீசும் எண்ணங்கள்
12. பதற்றம் தவிர்ப்போம்..
பதற்றம் நம்
வாழ்க்கையில் பலநேரங்களில் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிவிடுவதை நாமே
அனுபவித்திருப்போம். அந்த பதற்றம் பற்றி கொஞ்சம் பதற்றமில்லாமல் இந்த வாரம்
வலைவீசி பார்ப்போம்..
முதலில் மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன்
அவர்களின் சின்ன கதையை அப்படியே பகிர்கிறேன்..
அது ஒரு பள்ளிக்கூடம். ஆசிரியர்
வகுப்பில் நுழைகிறார்.
மாணவர்கள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களை அமரச்
சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.
3 & 6 & 12.
இப்படி மூன்று எண்களை
எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட்கிறார். ‘‘மாணவர்களே...
இதன் தீர்வு...’’
அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து
நிற்கிறான். ‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான்
விடை!’’
‘‘இல்லை!’’ என்கிறார்
ஆசிரியர். அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள். ‘‘ஐயா! அந்த மூன்று
எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’ ‘‘இல்லை
இல்லை!’’ மாணவர்கள் விழிக்கிறார்கள். இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.
‘‘மாணவர்களே.
நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள்.
இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி
நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’ தெளிவான
மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள். ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.
‘‘இப்போது
மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில்
எழுதினார்: 22 58 33 55. உடனே
மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.
‘‘சார், இதன்
தீர்வு என்ன?’’ ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். ‘‘இதற்கான
தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு
டெலிபோன் நம்பர்!’’ மாணவர்கள் அமைதியானார்கள்.
ஆசிரியர் பேச ஆரம்பித்தார். ‘‘மாணவர்களே!
இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க
விரும்புகிறேன்.
உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை: “கற்பனையான
பிரச்னைகளுக்கு அநாவசியமாக பதற்றம் ஆகாதீர்கள்”.
இரண்டாவது அறிவுரை: “எப்போதும் கொஞ்சம் இயல்பாக இருங்கள்.”
நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும்
அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும் தான். இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னைகளிலேயே அதிகம்
கலங்கிப் போகிறான். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.
பதற்றம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில்
மனிதர்களைப் பாதிக்கிறது. உண்மையில் பதற்றம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால்
அதை தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி
விடக்கூடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
.
நாம் மிக அதிகமாக கோபப்படும் போதும்,
உணர்ச்சிகரமான நிகழ்வுகளின் போதும், அவரச அவரசமாக நம்முடைய செயல்களை
செய்யும்போதும் பதற்றம் உருவாகிறது.
ஆனால் இந்த கோபத்தினாலோ, உணர்ச்சிப்பெருக்கினாலோ,
அவரசத்தினாலோ நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை, சாதிக்கவும் முடியாது. அப்படி
இருக்கும்போது எதற்கு இந்த தேவையற்ற பதற்றம்.
ஒரு சிலருக்கு பிறரிடம் சகஜமாக பேச முடியாது.
வேறு யாரவது நெருக்கி வந்து பேசினால் உடனே பதற்றம் தொற்றிக்கொள்ளும். இந்த
பழக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இது குழந்தைப் படுவத்திலேயே ஆரம்பமாகும்
ஒரு கெட்டகுணமாகும். இதை வளர விட்டால் படிப்பில் சந்தேகம் வந்தால்கூட ஆசிரியரிடம்
கேட்டு தெளிவு பெறமுடியாத அளவு பயத்தை உண்டாக்கிவிடும். ஒரு பாலினத்தினர் எதிர்
பாலினத்தினருடன் ஒரு சகஜமான நட்பை பரிமாற இந்த பதற்றம் தடை உண்டாக்கும். கல்வி
முடித்து வேலைக்கு செல்லும் போது நேர்முகத்தேர்வுகளில் தோல்வியை தரும் சூழலை இந்த
பதற்றம் உண்டாக்கும். குழு நடவடிக்கையை தவிர்க்க தூண்டும். இந்த பதற்றம் நமது
முன்னேற்றத்தின் தடைக்கற்களில் ஒன்று
ஆகும்.
இந்த பதற்றமான மனநிலை உடையவர்கள், தாழ்வு
மனப்பான்மைக்குள் எளிதில் விழுந்து மனச்சோர்விற்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகம்
இருக்கிறது.
நமது எண்ணங்கள்
தான் நமது வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. நேர்மறை எண்ணங்கள் நமக்கு
நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் பதற்றமான நிலையில் தோல்வியையும் உண்டாக்குகின்றன.
தவறுசெய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே
எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking)
தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை
வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive
Thinking) திருப்புங்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது
தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.
நாம்
அனைவரிடமும் எதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும். என்றைக்கும் நமக்கு எந்த
திறமையும் இல்லை என்று தாழ்த்தி எண்ணாதிருங்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி.
நீங்கள் என்னென்ன செய்ய
விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதற்றம்
அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான்
வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச்
செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற
மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை
இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ,உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு
படுத்திக்கொள்ளுங்கள்.
தனிமையை தவிருங்கள். அப்படி இருந்தால்
ஏதாவது செய்துகொண்டு இருங்கள். 'Idle
man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது
மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள்
எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு
நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலைகொடுத்துக்கொண்டே இருப்பது
அவசியம்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில்
யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன்
பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி
என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில்
பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக்
கற்பனை செய்து பாருங்கள். இவையெல்லாம்பதற்றத்தை தணிக்க உதவும் வழிகள்.
தண்ணீரில் இறங்காமல் கரையில்
நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது.
இறுதியாக இராமகிருஷ்ண
பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை.. பக்தியில் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர்
திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என் பரம
பக்தன்" என உரைத்தார்
திருமால்.
"அல்லும் பகலும் இடையறாது "நாராயணா" என உன் திருநாமத்தைச் செப்பும்
என்னை விட இந்த ஏழைக் குடியானவன் எவ்வகையில் உயர்த்தியானவன்?" என
நாரதர் வினவ திருமால் புன்னகை பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட
நடவடிக்கைகளை ஒருநாள் மட்டும் கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும்
சென்று கவனித்தார்.
அக்குடியானவன்
காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக் கடன்களை
முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான். வழக்கம்போல்
வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்..குளித்தான். தன் மனைவி மக்களோடு
உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான். இரவு படுக்கையில் படுக்கச் சென்றான்.
"ஸ்ரீ ஹரி" என்றான். உறங்கிவிட்டான்..
இது நாரதர் கவனித்த
தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம் திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும்
சிரித்தவாறே "இன்றல்ல நாரதா.என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்"
என்றுரைத்தார்.. "பின்னர் எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று
உரைத்தீர்கள்?" என நாரதர் வினவினர்.
பகவான் நாரதன் கையில்
ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து,
"நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக்
கொண்டு இதில் உள்ள எண்ணெய் ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை
சுற்றி வா. பிறகு பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார்.
"பாருங்கள்
பகவானே..ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள் ஆணையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்.
இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என பகவானிடம்
வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி வருகையில் எத்தனை
முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை உரைத்தாய்?" என
பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என் கவனமெல்லாம் இந்த எண்ணெய்
துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருந்தது.. அந்த பதற்றத்தில் ஒரு முறை
கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க இயலும்? என்
கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன். எண்ணெய்
சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க...
"இந்தச் சிறு பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட
நீ என்னை நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை. ஆனால்
அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும் காலை
எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என நாளொன்றுக்கு இருமுறை
என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா? தனது
இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது கவனங்களெல்லாம்
மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என் நாமத்தை
உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த திருமாலைக்
கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்
ஒரு வேலையை
பதற்றத்துடன் செய்ததால் தான் நாரதரால் கடவுளின் நாமத்தையே சொல்ல முடியவில்லை.
சாதாரண மனிதர்கள் நாம்.. பதற்றம் நம்மை என்ன
பாடுபடுத்தும்..
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.