வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

8. மேம்படுத்துங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

8. மேம்படுத்துங்கள்

உங்களால் முடியும்என்று நீங்கள் உறுதியாக நம்பினால்உறுதியாக உங்களால் முடியும்என்பதும் உண்மை, உங்களால் முடியாது என்று நீங்கள் கொஞ்சம் தடுமாற்றத்துடன் எண்ணினால் உங்களால் முடியாதுஎன்பதும் உண்மைஹென்றிஃபோர்ட் அவர்களின் வார்த்தைகளோடு இந்த  வாரம்  வலைவீசுவோம்.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு விளம்பரம் வந்தது. தினம் நாம் உபயோகிக்கும் பொருள் தான். கொஞ்சம் வடிவமைப்பு மாற்றி புதிய மேலுறையுடன் "இதோ வந்துவிட்டது புதிய, மேம்படுத்தப்பட்ட, சிறப்பு குணங்கள் கொண்ட" உங்கள் அபிமான பொருள் என்பதான வாசகத்துடன்.

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள் சந்தையில் நல்ல முறையில் விற்றுக் கொண்டிருக்கும் பொருள் தான். ஆனாலும் அந்த பொருளை தொடர்ந்து சந்தையில் முன்னனியில் நிலை நிறுத்த அந்த நிறுவனம் அந்த பொருளின் குணங்களை மேம்படுத்திக்கொண்டே வருகிறது?

தினம் தினம் மாறி வரும் இந்த உலகின் மாற்றத்தை எதிர் கொள்ளவும், போட்டியாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஒவ்வொரு  நிறுவனங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபடி இருப்பதைத்தான் புதிய”, “மேம்படுத்தப்பட்ட”, “முன் எப்போதும் இல்லாதபோன்ற சொற்கள் வெளிப்படுத்துகின்றன. நிறுவனங்கள் இதற்கென்று ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு (ஆர்.அண்ட் .டி) ஒன்றை வைத்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.

நீங்கள் யாராவது சிந்தித்துப்பார்த்தது உண்டா?

நீங்கள் தற்போது இருக்கும் வேலையில் இணைந்த பிறகும், குடும்ப பொறுப்புகள் பெருகிய  பிறகும் உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள என்றாவது நினைத்திருக்கிறீர்களா?

ஒரு பொருளுக்கே மேம்பாடும், திறன் கூட்டுதலும், சிறப்புகளை பெருக்குவதும் தேவைப்படும்போது நமக்கு அது அவசியம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

இந்த மேம்பாடு என்பது ஒரு தொடர் பயணம். எங்கும் தேக்கமில்லா ஒரு ஆற்றின் பயணம் போன்றது. எந்த ஒரு பயணமாக இருந்தாலும் சரி. முதல் அடி எடுத்து வைத்துக் கிளம்பிய பின்புதான் பயணமே தொடங்குகிறது. அந்த முதலடிக்குப் பெயர்தான் முழு ஈடுபாடும் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வதும்!

இந்த உலகின் நெடும் பயணத்தில் குரங்கிலிருந்து தோன்றிய மனித இனம் கூன் நிமிர்ந்து நடை பயின்று காடுகளில் மரவுறி தரித்து பின் குகைகளில் தங்கி வேட்டையாடி, பயிர் செய்ய கற்று, பருத்தி ஆடை உடுத்தி, உறவுகளை மேம்படுத்தி ஒரு சிறந்த சமுதாயத்தை படைக்க எந்த அளவு தன்னை மேம்படுத்தி இருக்கிறது.

ஆரம்ப கால கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு இன்னிங்ஸ்கள் ஆடி முடிக்க எவ்வளவு நாள் தேவையோ, அவ்வளவு நாட்கள் விளையாடின. அப்புறம் ஆட்டம் ஆறு நாட்களுக்கு வந்தது. நடுவில் ஒருநாள் ஓய்வு நாள். பிறகு 5 நாட்கள் என முடிவு செய்தார்கள். பின்னர் 60 ஓவர்கள் ஆட்டத்தை அறிமுகம் செய்தது. அப்புறம் 50 ஓவர்கள். இப்போது 20 ஓவர் ஆட்டங்கள், உற்சாகப்படுத்தும் ஆடல் அழகிகள், அதிரடிக்கான பவர் ப்ளே என்று காலத்துக்கேற்ப மாறி கிரிக்கெட் தன்னைக் காத்துக்கொண்டது.

ஒரு விளையாட்டு பிழைத்திருப்பதற்கே இவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது! இப்போது இருப்பது முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட,முன் எப்போதும் இல்லாத கிரிக்கெட்!

அதேபோல இப்போது இருப்பது முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட, முன் எப்போதும் இல்லாத தியேட்டர்கள்!

சொல்லிக்கொண்டே போகலாம். டீக்கடைகள், அரசியல், பத்திரிகைகள், கருத்துகள், வாழ்க்கை முறைகள்... எதுவுமே முன்பு இருந்தது போலில்லை!

யாராவது என்றாவது இந்த மேம்பாட்டின் அவசியத்தை கைவிட முடியுமா? நாளுக்கு நாள் வெளிவரும் புதிய புதிய தொழில் நுட்பங்களை நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால் நாம் இந்த நவீன உலகத்தில் நிலைபெற முடியுமா?

மேம்பாடு என்பது தொழில் நுட்பம் மட்டுமா? நமது திறமைகள், நமது குடும்ப உறவுகள், அரசின் அயல்நாட்டு உறவுகள் இப்படி பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அன்றைக்கு கைகளால் செய்த பல வேலைகளை இன்று கருவிகள் எளிதாக்கியுள்ளன. இந்த மாற்றங்கள் வேண்டாம் என்பவர் சமுதாயத்தில் நிலைக்க முடியாது. அவருக்கு உரியதான மதிப்பு வழங்கப்படாது.

அன்றைக்கு இருந்த தொலைக்காட்சி பெட்டி தொழில் நுட்பம் இப்போது மாறிவிட்டது. தொலைக்காட்சி பழுது பார்க்கும் துறையில் இருப்பவர் தற்போதைய நுட்பத்தை பழகவில்லை என்றால் இன்னும் சில வருடங்களில் அவரால் அதே துறையில் நீடிக்க முடியாது. அவருக்கு அவர் தொழில் சார்ந்த மேம்பாடு மிகவும் அவசியம்.

சரி. நம்மை நாம் மேம்படுத்திக்கொள்வது எப்படி?

நம்மை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே முதல் படி.

பூமியின் மேலுள்ள தாவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நிலையிலும் தன்னிடம் உள்ள இலைகளை உதிர்த்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. நாமும் நம்மை ஒவ்வொரு நிலையிலும் புதுப்பித்து மேம்படுத்தும் செயலானது நமது வாழ்க்கையை செழிப்பாக்க உதவும்.

"நான் அறியாதது எதுவுமில்லை. எனக்கு எல்லாம் தெரியும். என்னால் எதையும் செய்ய முடியும். நான் செய்வது எல்லாம் சரி. நான் சொல்வதெல்லாம் சரிஇப்படி தன்னகந்தையுடன் கூடிய (“Over confidence” என்று சொல்லலாமா?) முட்டாள்தனமான நம்பிக்கை கூடாது. இந்த உலகில் யாருமே எல்லாம் அறிந்தவர் இல்லை. எல்லோருமே எதோ ஒன்றை கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் மாணவர்களே...

அதே சமயத்தில் என்ன பாவம் செய்தேனோ என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. எனக்கு மட்டும், ஏன்தான் இப்படி நிகழ்கிறது? நான் இருக்கிற நிலைமைக்கு இதையெல்லாம் எங்கே செய்ய முடியும்? அப்படியே செய்தாலும் எனக்குத் தோல்விதான் வரும்என்று தாழ்வு மனப்பான்மையிலும், சுயபச்சாதாபத்திலும் நம்மை நாமே அலட்சியப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

"என்னுடைய எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் என்ற உணர்வு உங்களுக்கு வரும்போது, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், எல்லா வழிகளும் இன்னும் தீர்ந்து விடவில்லை" என்ற ராபர்ட் ஷீலர் அவர்களின் கூற்றை மனதில் கொள்வோம்.

நாம் உணர வேண்டியது ஒன்றே ஒன்று தான். "என்னிடம் நிறையும், குறையும், பலமும், பலவீனமும் கலந்துள்ளது. என் நிறைகளையும், பலத்தையும் மேலும் மேலும் கூட்டிக்கொள்வேன். என் குறைகளையும், பலவீனங்களையும் படிப்படியாக நீக்கிக்கொள்வேன்" என்ற உறுதியான மனது.

தவறு செய்யாதவர்கள் என்று யாருமில்லை? தோல்வியை பார்க்காதவர்கள் என்று யாருமில்லை? நாம் ஏன் நம்முடைய பலவீனங்களை நினைத்து சோர்வடைய வேண்டும்.
நம்மை நாமே அறியும் பயிற்சிகளையும், நம்முடைய பலவீனங்களை நீக்கவும், நம்முடைய தோல்விகளின் கறைகளை நீக்கவும் தொடர் முயற்சி செய்வோம்.

நாம் எல்லோரும் நற்குணங்களையும், நற் பழக்கங்களையும், வெற்றியைக் கொடுக்கும் வெற்றிப் பழக்கங்களையும் அதிகரிக்க அதிகரிக்க தீயகுணங்களின் ஆற்றலும், தோல்விப்பழக்கங்களின் ஆற்றலும் குறையும்.

நம்முடைய உறவுகளை மேம்படுத்துவது எப்படி?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு.

மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள் தான். நல்ல தன்மைகளும் கெட்ட தன்மைகளும் கலந்தவர்கள்தான் மனிதர்கள். குற்றமற்றவர்கள் என்று உலகில் யாருமில்லை. எனவே, ஒவ்வொரு தனிமனிதர்களை அப்படியே அவர்களின் இயல்பான குணங்களுடன் நாம் ஏற்றுக் கொள்வோம். உடன்பாட்டுத் தன்மைகளுக்கு அங்கீகாரம் கொடுப்போம். அதே நேரம் அவர்களின் எதிர்மறை தன்மைகளோடு எச்சரிக்கையாய் இருப்போம்.

ஜேம்ஸ் ஆலன் என்பவர் சொல்லுவது போல "தாங்கள் சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால், தங்களை மேம்படுத்திக் கொள்ள முடிவதில்லை. எனவே, சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்."

பலவாறான குறைகள் மனிதர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக மனிதர்களை வெறுக்க வேண்டாம். ஏனென்றால் நம்மிடமும் குறைகள் உண்டல்லவா?

நமக்கு நெருக்கமாக உள்ள மனிதர்களைப் புரிந்து கொள்ள அவர்களின் நிறைகளையும் பார்க்க வேண்டும். அதீத நம்பிக்கை கொண்டு உள்ளுக்குள்ளே சில உள்நோக்குகொண்டு முற்றிலும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ பார்த்து எடை போடக்கூடாது. இரண்டும் உண்டு என்ற பார்வையில் பார்த்து விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளும்போது ஏமாற்றம் வராது.

உங்களைக் காலத்தின் மாறுதலிருந்து காப்பாற்ற உதவும் ஆய்வகம் உங்கள் மனதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

மனதில் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவைப் பராமரிக்கக் கண்களைத் திறந்து, சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழு விழிப்புடன் பார்த்தாலே போதுமானது! அவை நிச்சயம் புதிய, முற்றிலும் புதிய, மேம்படுத்தப்பட்ட, சிறப்பான வாழ்க்கை முறைகளுக்கும் சிந்தனைகளுக்கும்வழி காட்டும்!

"நேற்றைய நாட்கள் என்னிடம் இல்லை. காலம் அவற்றைக் கவ்விக் கொண்டு ஓடிவிட்டது. நாளைய நாட்களும் என்னிடம் இல்லை. காரணம், அவை உறுதியில்லை!ஆனால், இதோ என்னிடம் உறுதியாக இருப்பது இன்றைய நாள்! இன்றைய நாளை நான் வீண்டிக்க மாட்டேன்என்ற பெர்லீ ஈயேதன் அவர்களின் மேற்கோளை மனதில் கொண்டு நம்மை நாமே மேம்படுத்தி சிறப்படைவோம்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.




கருத்துகள் இல்லை: