வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

7. அனுபவம் சொல்லும் பாடம்

வலைவீசும் எண்ணங்கள்

7. அனுபவம் சொல்லும் பாடம்


மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே..

அனுபவங்கள் ஆசான்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த ஆசான், ஆனால் அதற்கான கட்டணம் தான் அதிகம்என்ற அறிஞர் கார்லைல் மேற்கோளை வைத்து இந்த வாரம் வலைவீசுவோம்.

நாம் அனைவருமே அனுபவம் பற்றி பலர் பலவிதமாக சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு எதற்கு.. நாமே பல அனுபவக்கதைகள் சொல்லுவோம்.

நம்மில் பலரும் நல்லமனதோடு நம்முடைய மோசமான அனுபவங்களை " கடவுளே.. என் எதிரிக்குக் கூட இப்படி ஒரு கடினமான நிலையை தந்துவிடாதே" என்று சொல்வதுண்டு.

“துன்பம் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது கற்றுத்தந்த  அனுபவப்பாடத்தை மறக்கவேண்டாம் என்ற பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்களின் வார்த்தைகளை இங்கு நினைவுகொள்ளலாம்.

ம்ம்.. ரொம்ப இலேசா சொல்லிட்டீங்க. அனுபவிச்சவனுக்குத் தான் தெரியும் வலியும், வேதனையும்.பிரசவ வேதனை பற்றியும், பிற துயர அனுபவங்கள் பற்றியும் வரும் வார்த்தைகள் இது.

அந்த எழில் கொஞ்சுடும் மலை மேலே இயற்கை அழகை பார்த்துக்கொண்டே பயணம் செய்வது நல்ல இனிய சுகமான அனுபவம். என்பது பயணம் பற்றிய சுகானுபவம்.

அந்த சில நொடிகளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது இது பந்தயத்தில் வென்ற நொடிகள் பற்றிய அனுபவ வார்த்தைகள்.

இப்படி தான் நாம் அனைவரும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் இனிமையான ஒன்றாக அமைந்தால் உள்ளமும் உடலும் குதூகலிக்க மனம் லேசாகி, வானத்தில் பறப்பது போன்ற உணர்வில் மகிழ்கிறோம்,

அதுவே நம்முடைய அனுபவம் ஒரு தோல்வியாகவோ, துன்பமாகவோ அமைந்து விட்டால் உலகையே நாம் இழந்துவிட்டது போலவும், வாழ்வதில் எந்த உபயோகமும், அர்த்தமும் இல்லை என்பதாகவும் துவண்டு விடுகிறோம்.

இப்படி கிடைக்கும் துன்ப அனுபவங்கள் நமக்குப் பாடம் புகட்ட வந்த ஆசான். அதுவே நாம் காணப்போகும் வெற்றிக்கான ஒரு குரு என்று எடுத்துக்கொள்வது நலம்.

ஒரு அறிஞர் சொல்கிறார், “நம்முடைய கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்திலிருந்து விளைகிறது. நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து விளைகிறது, அப்படி இருக்க ஒவ்வொரு அனுபவத்தையும் நாம் வரவேற்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரம் பிறருடைய சிறந்த அனுபவப்பாடங்களை நாம் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

பொதுவாக அனுபவம் எனும் ஆசிரியர் எல்லோருக்கும் நேரிடையாக பாடம் கற்பிக்க நினைக்கிறார். அதனால்தானோ என்னவோ ஒவ்வொரு மனிதனும் தானாக அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் வரை யார் சொல்லியும் கேட்பதில்லை. மற்றவர் அனுபவங்களைப் பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை. அதுதான் “பட்டுத் தெளிவது புத்தி. கெட்டுத் தெளிவது ஞானம்என்பது..

 அனுபவம் என்றுமே ஒரு கடுமையான ஆசிரியராகத்தான் இருக்கிறது, காரணம் அது முதலில் பரீட்சை வைக்கிறது. பிறகு தான் பாடமே சொல்லிக் கொடுக்கிறதுஎன்கிறார் வெர்னன் ஸெண்டர்ஸா எனும் மேலை நாட்டு அறிஞர்.

இந்த அனுபவங்களை எந்த  ஆசிரியனும் கற்றுக்கொடுக்க  முடியாது. அதற்கு பல தோல்விகளும், சில துரோகிகளும் மட்டுமே  தேவை..

 
வாழ்க்கையில் முன்னேறிய பலரின் அனுபவங்களைப் புத்தகங்கள் வாயிலாக அறியலாம். நம் இளைய தலைமுறையினரிடமும் இது பற்றிச் சொல்லி அனுபவ அறிவைப் புகட்டலாம்.

வீட்டுப் பெரியவர்களை மதித்து நடந்து அவர்களது அனுபவங்களைக் கேட்டாலே பாதி உலகஅறிவு வந்துவிடும். வயது முதிர்ந்த அவர்களுக்கு எத்தனையோ அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். நம் நிகழ்கால சம்பவங்கள் அவர்களது கடந்த கால அனுபவங்கள். அதனால் வீட்டுப் பெரியவர்களின் அனுபவ அறிவை உதாசீனப்படுத்த வேண்டாம். அதையும் கொஞ்சம் கேட்டு  உங்கள் கருத்தோடு வைத்து சீர்தூக்கி பார்த்து நல்ல முடிவுகளை எடுக்கலாமே.

ஒரு சொலவாடை உண்டு. "மனிதன் நனைந்து போகும் வரை அவன் ஒரு குடிசை கட்டிக் கொள்ள மாட்டான். அவன் தலை இடித்து வீக்கிப் போகும் வரை குனிந்து, வளைந்து செல்லக் கற்க மாட்டான்".

ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய மைதானம். அதில் ஒரு தொழிற்சாலை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக பெரிய அலுவலர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழில் அதிபர்களும் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

தொழிற்சாலை வாசற்பகுதி என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஒரு மிகப் பெரிய பாறாங்கல் இருந்தது. இதை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று யோசித்தனர். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றிய யோசனையைச் சொன்னார்கள். ஒரு என்ஜினியர் ஒரு டைனமைட் வெடிகுண்டு வைத்துப் பாறாங்கல்லை வெடித்து சிதற வைத்து அப்புறப்படுத்தலாம் என்றார்.

ஒருவர் பெரிய பெரிய துண்டுப் பாறைகள் ஆக்கி கிரேன்மூலம் தூக்கி அப்புறப்படுத்தலாம் என்றார். இவர்கள் சொன்ன யோசனைக்கு நேரமும், பொருள் செலவும் அதிகமாக இருந்தன. நேரமோ போய்க்கொண்டே இருந்தது. அவர்களால் ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியவில்லை.

அந்த நேரம் அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், என்ன எல்லோரும் பேசிக்கிறாங்க என்று வினவ, பாறாங்கல்லை அகற்றுவது பற்றிப் பேசுவதாகச் சொன்னார்கள். அதற்கு இவர் இதற்கு ஏன் இவ்வளவு யோசனை? பக்கத்திலேயே, பெரிய அளவில் பள்ளம் தோண்டி கல்லைத் தள்ளிவிட்டு, மண்ணால் மூடிவிட வேண்டியதுதானேஎன்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருந்தார். யோசிக்காமல் டக்கென்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்தால் வியந்தனர். இதுதான் அனுபவ அறிவுஎன்பது.

நம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்கு அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதைப் போல, பிறருடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும் பாடங்கள் கற்கலாம்.

அரிச்சந்திரா நாடகமும், ராமாயணமும் தந்த மாற்றமே, தன்னுடைய எல்லா சிறுசிறு தவறுகளுக்காக வருந்தி இனிமேல் அந்தத் தவறுகளைச் செய்வதில்லை என்று சபதம் எடுத்து அதன்படி வாழ வைத்து காந்தியை மகாத்மாவாக மாற்றியது. இதை அவரது சுய சரிதை நூல் மூலம் அறியலாம்.

ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைப் புத்தகம் வாயிலாக அறிந்த ஒரு இளைஞனின் மனதில் அமெரிக்காவில் கருப்பின அடிமை முறையை தகர்த்தெறிய வேண்டும் என்னும் வைராக்கியம் பிறந்தது. பிற்காலத்தில் அதற்காகப் பாடுபட்டு வெற்றி கண்டவர் தான் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன்.

ஹோமர் எழுதிய புத்தகம் நெப்போலியன் போனபர்ட்டை உருவாக்கியது.

காரல் மார்க்ஸ் எழுதிய தாஸ் கேபிடல்கம்யூனிஸ புரட்சி எண்ணத்தை லெனினின் மனதில் விதைத்தது.

நீங்கள் சாதனை புரிய விரும்பினால் வேதனையான அனுபவம் நிகழ்ந்து விடுமோ என்று எதிர்மறை கற்பனையில் எந்த ஒரு காரியத்திலும் பின் வாங்காதீர்கள். எந்த ஒரு முயற்சியும் ஒன்று வெற்றியில் முடியும் அல்லது நல்ல அனுபவத்தில் முடியும்.

உலக வரலாற்றில் உங்கள் பெயர் சாதனையாளர்என, அழியாத வண்ணம் பொறிக்கப்பட வேண்டுமென்றால் அனுபவம் எனும் உளியின் அடிகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

“அனுபவம் என்பது உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதல்ல. உங்களுக்கு
நிகழ்வதை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் உண்மையான அனுபவம் என்ற ஆல்டோஸ் ஹக்ஸ்லி.
உதாரணத்திற்கு நாம் எல்லொரும் சந்திக்கும் ஒரு நிகழ்வையே எடுப்போமே! நாம் வீட்டிற்கு ஒரு குறிப்பட்ட நேரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நேரம் சென்று வருகிறோம் என்று கொள்வோம். அது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் கணவனோ/மனைவியோ “இது தங்களை அலட்சியம் செய்வதாகவும், தங்களை மதிக்கவில்லை எனவும் எடுத்துக்கொண்டு, “இதுவே அலுவலக வேலையானால் இப்படி தாமதம் நேருமா? என்று மனதில் கேள்வி எழுந்தால், “நான் ஒன்றும் உங்கள் மிதியடி இல்லை என்றும் நினைத்தால் என்னாவது? நடந்தது என்னவோ தவிர்க்க முடியாத நிலையினால் கொஞ்சம் தாமதம் மட்டுமே. ஆனால் எதிர்மனமோ தம்மை மதிப்பதில்லை என்றும், அலட்சியப்படுத்துகிறோம் என்றும் அர்த்தப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது? உண்மை அது இல்லையே? அது நம் மனதில் கொள்ளும் கண்ணோட்டமே. அதாவது உண்மைக்கு நாம் கொடுத்துள்ள வேறு தப்பர்த்தம். இது தான் “அனுபவம் என்பது நமக்கு நிகழ்வதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதாக இருக்கிறது என்று ஹக்ஸ்லி சொல்லியது.

“நமக்கு ஏற்படும் சம்பவம் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வை நாம் எவ்வாறு எடுத்து அர்த்தப்படுத்திக்கொள்கிறோம், உள்வாங்கிக்கொள்கிறோம், கருதுகிறோம் என்பதே நமது அனுபவமாக மாறுகிறது. தென்னாப்பிரிக்காவில் காந்தி ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டது ஒரு நிகழ்வு. ஆனால் காந்தி அந்த நிகழ்வை உள்வாங்கி, தன் கருத்தை கொண்டு, அதை அர்த்தப்படுத்தும் விதமாக அவர் தெரிந்தெடுத்த அகிம்சை என்ற ஆயுதம் அவரை ஒரு மாபெரும் தேசத்திற்கு திருப்புமுனையாக மாறியது. இதையே மிக எளிதாக “நிகழ்வுகள் கடவுளின் பொறுப்பு. அனுபவமோ மனிதனின்  பொறுப்பு என்கிறார் மஹாத்ரயாரா.

அனுபவம் என்பது ஒரு விளக்கு. அந்த விளக்கின் ஒளி கொண்டு தான் வாழ்க்கைப் பாடத்தை நமக்கு விளக்குகிறார் இறைவன்எனும் ஆசிரியர். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் இறைவன் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்:

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
பிறந்து பார்என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
இறந்து பார்என இறைவன் சொன்னான்.
மனையாள் சுகம்யாதெனக் கேட்டேன்.
மணந்து பார்என இறைவன் பணித்தான்.
அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
“இறைவா நீ ஏன்?” என்றேன்.
-இறைவன் சற்றே அருகில் வந்து
அனுபவம் என்பதே நான் தான்என்றான்.

இனி நாமும் நம்முடைய, பிறருடைய  ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்வோம்.


இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.


கருத்துகள் இல்லை: