வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

6. பிடிவாதம் எனும் மனோபலம்

வலைவீசும் எண்ணங்கள்

6. பிடிவாதம் எனும் மனோபலம்


மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி  நண்பர்களே.. ஆனால் மீண்டும் மீண்டும் உங்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்பதில் எனக்கு வைராக்கியம் இல்லவே இல்லை. என்ன  உங்களுக்கு  அதிர்ச்சியாகவும்  கோமாகவும் இருக்கிறதா?

நாம் தவறாக அர்த்தம் கொள்ளும் பல வார்த்தைகளில் இந்த வைராக்கியம் என்ற  வடமொழி சொல்லும் ஒன்று என்று தெரியுமா? வைராக்கியம் என்ற சொல்லின்  உண்மையான பொருள் எதன் ஒன்றின் மீதும் பற்றில்லாமை என்பதாகும்.

வைராக்கியம் என்பது உலக இன்பங்களில் ஆசைப்பட்டு, அதில் அடைபட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருக்கும் மனப்பக்குவமே என்றும் சிலர் கூறுவார்.

தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். வைராக்கியம் என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. இது சந்நியாசிகளுக்கு இருக்க வேண்டிய முதல் குணமாகும். இந்த வைராக்கியம் நமக்கு இப்போது சாத்திமில்லை என்று சொல்லமுடியாது என்றாலும் குடும்ப பாசத்தில் வாழும் நமக்கெதற்கு?

ஒரு சிலர் வைராக்கியம் என்பதற்கு பிடிவாதம் என்றும் தவறாக பொருள் கொள்கின்றனர். விவேகம் அடைந்தவர்களுக்கு வைராக்கிய குணம் எளிதில் அமையும். பற்றற்ற மனப்பக்குவமே வைராக்கியம் .

இப்ப சொல்லுங்க.. உங்களை சந்திப்பதில் எனக்கா வைராக்கியம் (பற்றின்மை) இருக்கும்?

சரி.. இந்த வைராக்கியம் என்பதற்கு நாம் எடுத்த தவறான பொருள் என்ன?.. தெளிவான பிடிவாதம், கோபமற்ற உறுதி, விடாமுயற்சி என்பது தானே?

பிடிவாதம்விடாமுயற்சி பார்க்க ஒரே வார்த்தை போல இருந்தாலும் நான்  இந்த இரண்டு சொல்லுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாய் எண்ணுகிறேன். பிடிவாதம் ஒரு  கொள்கையில் பிடிப்பு. விடாமுயற்சி ஒரு காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் பிடிவாதமான தொடர்முயற்சி.

அது சரி, இந்த பிடிவாதம் சரியா? தவறா?

இந்த பிடிவாதம் என்பது பல சமயங்களில் சரியாக இருக்கலாம். பிடிவாதம் என்கிற மனவலிமையை நாம் ஆக்க செயலுக்காகத் திருப்பி விட்டுவிட்டால் போதும் நாம் நினைத்த, நம்மால் முடிகின்ற எல்லா காரியத்தையும் செய்து முடிக்கலாம்.

அதற்காக நிலவில் இருந்தும் கனிகள் பறிக்கலாம்! உலகத்தின் தலைவிதியை மாற்றிக் காட்டலாம்! என நான் நினைக்கவில்லை (இது இப்போதைக்கு வீண் பிடிவாதம் மட்டுமே).

“ஒவ்வொரு மனிதனும் உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை என்ற லியோ டால்ஸ்டாய் கூற்றுப்படி தங்களை மாற்றிக்கொள்ளாத யாரும் இந்த மண்ணில் சாதிக்க முடிவதில்லை.

இந்த வீண்பிடிவாதத்தை தான் சிலர் தவறாக வைராக்கியம்என்கிறார்கள். நான் நினைப்பது தான் சரி! நான் சொல்வதுதான் வேதவாக்கு! நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்! என்ற வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் பலரை நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் பார்க்கிறோம். ஏன் இவர்களுக்கு இத்தனை பிடிவாதம் என்று எண்ணுகிறோம், குமுறுகிறோம்!

ஆனால் உளவியல் பார்வையில் ஒரு சிறந்த, நல்ல, முடிக்கக்கூடிய செயல்களின் மீதான பிடிவாத குணம் என்பது ஒரு வலிமையான மனோபலமாகவே நோக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அடுக்கடுக்காய் துன்பங்கள் அணிவகுத்து வந்தாலும், அகிம்சையை ஒருபோதும் கைவிடமாட்டேன், உண்மையை விட்டுவிடமாட்டேன், நேர்மையில் இருந்து விலகமாட்டேன் என்ற தன் கொள்கையில் கொண்ட பிடிவாத குணம்தான் மோகன்தாஸை மகாத்மாவாக நம்மிடையே வாழவைத்திருக்கிறது.

சாதாரண வீரனாய் இருந்த மராட்டிய சிங்கம் வீர சிவாஜி தன் வீரத்தின் மேல் கொண்ட அளவிடமுடியாத நம்பிக்கையாலும், தன்னுடைய வீரர்களை திறம்பட பயிற்சி கொடுத்து தன்னோடு வைத்துக்கொண்டதாலும், தான் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தளராத நம்பிக்கையாலும், பலரும் முடியாது என்று பலவீனப்படுத்தும் சொற்களின் மூலம் தடை போட்டாலும் தன்னுடைய பிடிவாத குணத்தை விட்டு விடாது போராட்டத்தில் வென்று தனக்கான ஒரு அரசை நிறுவிக்கொண்டு சிறப்பு பெற்றார்.

ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் தனது இடைவிடாத முயற்சியாலும், தன்னுடைய தீராத பிடிவாத குணத்தையும் வைத்துக் கொண்டுதான் பலமுறை தேர்தலில் தோற்றாலும், வெற்றியை விரட்டிப் பிடித்தே தீருவேன் என்ற தீவிர முனைப்பில் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை எட்டிப்பிடித்து கறுப்பின மக்களை அடிமைகளாய் விற்கும் கேவலச்செயலை வலுவான சட்டம் மூலம் நிறுத்தி வரலாற்றில் அழியாப்புகழையும் பெற்றார்
.
அடுக்கடுக்காய் தோல்விகள், ஆராய்ச்சிக்கூடம் தீக்கிரையானது என்று பல சோதனைகள் வந்தபோதும் இரவுக்கும் ஒளி தரும் தன்னுடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்த தன்னம்பிக்கையுடனான பிடிவாத குணம்தான் தாமஸ் ஆல்வா எடிசனின் சிறந்த படைப்பான மின்சார விளக்காக இன்று பலவண்ணங்களில் ஒளிர்கிறது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப்பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம்தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக  நிலைநிறுத்தியுள்ளது.

ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடிபோல வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்திற்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம், ஆனால் அவை எல்லால் வெறும் கருப்புப்பக்கங்களே!. எப்படி இருக்கக்கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.

சுயநல லாபத்திற்கும்,  வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி  திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல் அழிவார்கள்.

“வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான் என்ற எண்ணத்துடன் நாம் ஒரு சிறந்த லட்சியத்தில் பிடிவாதத்துடனும், உறுதியுடனும், செயல் ஊக்கத்துடனும் இருக்கும் போது வெற்றி நிச்சயம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! உங்கள் பிடிவாதம் நல்ல செயலுக்காகவே அதுவும் ஒழுக்கத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். ஒழுக்கம் இல்லாதவன் உயர்வு நூலறுந்த பட்டம் போன்றது.

தன்னுடைய திறமையினால் ஒருவன் மிக உயரத்தை அடைந்தாலும் சுய ஒழுக்கம் இல்லை என்றால் எந்த உயரத்திலும் நிற்க முடியாது என்ற உண்மையை நாம் உணரவேண்டும்.

எல்லாம் சரி.. பெரியவர்கள் கொள்கை பிடிப்பு, லட்சியம், உண்மை போற்றவற்றில் பிடிவாதமாய் இருக்கிறார்கள். குழந்தைகளின் பிடிவாதம் எந்தகையது?

‘‘பொதுவாக சின்ன சின்ன பிடிவாதம் பிடிப்பது குழந்தை பருவத்தின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக்காக என்றைக்கோ ஒருநாள் பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து நாம் பயப்படத் தேவையில்லை. அது குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

ஆம்எல்லா பிடிவாதமும் குழந்தைகளின் இயல்பான குணம் என்று நாம் நினைக்கக்கூடாது. இப்படி எடுத்ததிற்கெல்லாம் அவர்கள் பிடிவாதம் பிடித்தல் நிச்சயம் அது எல்லாமே வீண் பிடிவாதம் தான்.

சரி அது எப்படி வருகிறது? பெற்றோர்கள் கொடுக்கும் மிதமிஞ்சிய செல்லம் தான் அடிப்படைக் காரணம்.

தவழும் வயதில் ஒரு குழந்தை விளையாடினால் நாம் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்கிறோம், நாமும் நம் போக்கில் வேலை பார்க்கிறோம். அதுவே எழுந்து நடைபோடும்போது தவறி விழ்ந்து அழுதால் நாம் பதறி மிதமிஞ்சிய பய உணர்ச்சி கொண்டு பதட்டத்தோடு நம் முழு கவனத்தையும் அந்த குழந்தையின் மீது வைக்கிறோம். இப்படி குழந்தையின் அழுகைக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான கவனமே வளர வளர, அழுதால் எல்லாம் கிடைக்கும், கவனம் நம் மீது வரும் என்ற மன எண்ணத்தை வளர்த்து வீண் பிடிவாத குணமாக மாற்றுகிறது. சில சமயங்களில் விபரீதங்களிலும் முடிகிறது.

மேலும் இக்கால குழந்தைகள் எல்லோரும் கூட்டுக்குடும்பம், சகோதர, சகோதரிகள் இல்லாமல் தனியாக வளர்வது போன்ற காரணத்தினால் மிகவும் மெல்லிய மனவுணர்சி கொண்டவர்களாக வளர்கிறார்கள்.

என் குழந்தை ஒரு விஷயத்தை நினைச்சுட்டா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்/ள் என்று குழந்தைகளின் பிடிவாதத்தை என்றைக்குமே பெருமையாக நினைக்கவேண்டாம்.

களிமண் போல நாம் பிடிக்கும் உருவமாகவும், வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராகவும் இருக்கிற குழந்தையின் மனதில் வீண் பிடிவாதம் வளர்க்கும் விதமாக எதையும் செய்யவேண்டாம். உங்களுக்கு எவ்வளவு தான் வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் கேட்டதும் உடனே கிடைக்கும்படி செய்யாதீர்கள்.

சேமிப்பு மூலமோ அல்லது ஒரு வாரம் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளாவது கடத்தி பின்பு வாங்கி தாருங்கள். உங்கள் சிறுவயதில் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் உடனே உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்படி செய்து அவர்களிடம் வீண் பிடிவாத குணத்தை வளர்க்காதீர்கள்.

நம்முடைய குழந்தைக்கு “இல்லை என்கிற ஒரு வார்த்தையையும் “ஏமாற்றம் என்னும் உணர்ச்சியும் இந்த உலகில் இருக்கிறது என்பது மனதில் அழுத்தம் திருத்தமாகச் பதியும் படி வளருங்கள்.

எந்தக் ஒரு குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.... அந்தக் குழந்தை மனதைரியம், தோல்வி தாங்கும் குணம் இல்லாமல் வளரும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்த குணங்கள் இல்லாமல் வளரும் குழந்தைகள் தான், அவர்கள் நினைத்த எந்த ஒரு சிறு விஷயத்தை அடைய முடியாத நிலையில் மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை என்றும் சொல்லமுடியாது, “ஆம் என்றும் சொல்லமுடியாது? அது ஒருவரின் சூழலை பொறுத்தே இருக்கும்.

“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பகும் என்று சொல்லும் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் கூற்றின் படி இளமைக்காலத்தில் ஏற்படும் பிடிவாதம் ஏதாவது ஒருநிலையில் மாறிவிடுகிறது.

நாம் இழந்துவிட்ட கூட்டுக்குடும்பத்தில் பிடிவாதம் கொண்டோர் நிச்சயம் இருக்க மாட்டார்கள். அங்கு விட்டுக்கொடுக்கும் குணமே மிகுந்திருக்கும்.

கணவன் மனைவி பிடிவாதம் தவிர்க்க வேண்டியது. அப்படியே ஆரம்ப நாட்களில்  இருந்தாலும் இருவருக்குமான நெருக்கம் மற்றும் தேவைகளினால் சரியாகிவிடும். நடுத்தர  வயதில் ஏற்படும் பிடிவாதம் மனமுறிவையே ஏற்படுத்துகிறது.

தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும், தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தொலைத்துவிடும்.

“தோல்விகள் கண்டு என்றும் துவண்டதில்லை
வெற்றியை தேடி வேகமாக விரைகிறேன்
விடாமுயற்சியாகிய பிடிவாதத்துடன்!
வென்றே தீருவேன் என்ற
நம்பிக்கையின் பிடிவாதத்துடன்!“

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.



கருத்துகள் இல்லை: