வலைவீசும்
எண்ணங்கள்
9. நேர நிர்வாகம்
ஒரு சின்ன புதிருக்கான கேள்வி:
ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வருபவரை ஒருவர் முந்தினால் முந்தியவர் எந்த இடத்தில்
இருப்பார்?
ஓயாது அலை வீசிக்கொண்டிருக்கும் எண்ணக்கடலில் வலை வீசும் நமக்காக
சுற்றும் பூமியும் நிற்பதில்லை, மெல்ல நகரும் நேரமும் காத்திருப்பதில்லை.
யாரிடமும் வாங்க முடியாத, நம்மிடம் இருந்து யாருக்கும்
கொடுக்க முடியாத ஓர் உன்னதமானது “நேரம்”. அந்த நேரத்தைப் பற்றி நாம் கொஞ்சம் நேரம்
பார்ப்போம்.
இந்த நேரம் தவறாமை என்பது ஒரு
அற்ப காரியமாக பலருக்கு தோன்றினாலும், ஒரு பெரிய பாறையையும்
பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நீங்கள் மகத்தானவராக மாற வேண்டுமானால் முதலில் நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்..
நேரம் தவறாமல் இருக்கும் நபரையே பிறர்
மிகவும் மதிப்பார்கள்.
எவர் ஒருவர் தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்து வைத்துள்ளாரோ அவரே நேரம்
தவறாமையை சிறப்பாக கடைபிடிப்பார்.
நேர நிர்வாகத்திற்கு மிகச்சிறந்த வாழ்வியல் எடுத்துக்காட்டு நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களே. இடுப்பிலேயே
எந்நேரத்திலும் கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தவர். அவர் நேர மேலாண்மை பற்றி
ரத்தின சுறுக்கமாய் சொன்ன வார்த்தை: “நேரத்தை வீணாக்குவது
என்பது வேண்டாத செயலை செய்வது மட்டுமல்ல, வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும்தான்”.
மேன்மையானவர்கள் நேரந்தவறாமையை மிகவும் கண்டிப்புடன் கடைபித்தனர். 'மூன்று
மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச்
சிறந்தது' என்ற
ஷேக்ஸ்பியர் வரியே
சாட்சி.
நமக்காக யாரும் காத்திருப்பது நல்லதல்ல, யாருடைய
நேரத்தையும் நாம் வீணடிப்பதும் நல்லதல்ல. 'நாம் ஒரு நபரையோ அல்லது அவருடனான சந்திப்பையோ
முக்கியத்துவம் வாய்ந்தது' என்று உணர்த்த நினைத்தால் அவர்களிடம் காலம்
தவறாமையை கடைபிடித்து காட்ட வேண்டும். அந்த செயலே அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை புரியவைத்துவிடும்.
நமக்கு இயற்கையாக தினந்தோறும் செலவுக்கு வழங்கப்படும் தொகை 86400 மணித்துளிகள். அதை அன்றன்றைக்கு செலவு செய்திட வேண்டும். சேமிக்க முடியாது. நமக்கு வழங்கப்பட்ட அந்த மணித்துளிகளை அப்படியே பணமாக மாற்றுபவர் மிகச்சிறந்த நேர நிர்வாகி. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் அதில் நூறில் ஒரு பங்கையாவது தனது சிறந்த நிர்வாகத்தின் மூலம் மாற்றி சேமிப்பவர் வாழ்வில் சிறப்படைகிறார்கள்.
இந்த பூவுலகத்தை மானுடர்கள் ஆட்சி
செய்யத் துவங்கி காலத்தை கணக்கிட தொடங்கியதிலிருந்து இப்போது வரை ஒரு நாளைக்கு 24 மணி
நேரம்தான். ஆனால், வெகு சமீபகாலமாகத்தான் ‘எனக்கு நேரமில்லை’. ‘நான்
மிகவும் வேலையாய் இருக்கிறேன்
’, ‘பிறகு பார்க்கலாம்’ என்கிற
வார்த்தைகள் நமது காதுகளில் பரவலாக விழுகிறது.
நன்றாக யோசித்துப் பாருங்கள், நமது முன்னோர்கள் என்றைக்காவது
எனக்கு நேரமில்லை என்று சொல்லியிருக்கிறார்களா?
நவீன சாதனங்கள் ஏதும் இல்லாத நாட்களிலேயே அவர்களுகு பல வேலைகளை செய்ய நேரம் இருந்திருக்கும் போது, இன்றைய
கால கட்டத்தில் நமது நேரத்தை குறைக்கும் சாதனங்கள், கருவிகள், தொழிற்நுட்பங்கள்
வந்தும், நமது பணியை அவை மிகச் சுலபமாக்கி நம் நேரத்தை மிச்சமாக்கியும் நேரமில்லை என்று சொல்லுவது ஏன்?
ஒப்பீட்டு அளவில் இப்பொழுது நமக்கு
அதிக நேரமல்லவா இருக்க வேண்டும்? ஏன் நமக்கு நேரமே
இல்லை என்று சொல்லுகிறோம்?
நமக்கு இருக்கும் இந்த நேரம் ஏன்
போதவில்லை?
ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்... நம்து விடுமுறையில்
வீட்டின் மின்சாரத்தை நிறுத்திவிட்டும், கைபேசியை அணைத்து வைத்தும், தொலைக்காட்சி பெட்டியை இயக்காமலும், மடிக்கணினியை மூடி வைத்தும், வலைத்தளங்களுக்கு விடுமுறை கொடுத்தும் பார்த்தால் என்ன ஆகும்?
கொஞ்சம் நினைத்து பாருங்கள். நாம் பலநாட்களாக, செய்யத்
திட்டமிட்டிருந்த பல பணிகள் நமது நினைவிற்கு வரும். அவை பக்கத்து தெருவில் இருக்கும்
நமது நெருங்கிய உறவினர் சந்திப்பு.... குடும்பத்டுடன் கொஞ்சம் அரட்டை.. தோட்டத்தில் கொஞ்சம்
வேலை...
நமது வியாபார
மேம்பாட்டிற்கான புதிய திட்டங்களின் உருவாக்கம்... என எல்லாமே
சாத்தியப்படும்.
இவ்வளவு பணிகளைச் செய்த பிறகும் நமக்கு நிறைய
நேரமிருக்கும். என்ன ? புரிகிறதா நண்பர்களே.... ! நாமக்கான நேரங்கள் எவைகளில் காணாமல் போகிறது
என்று?
இங்கு நான்
நேர நிர்வாகம் பற்றி யாருக்கும் போதிக்க வரவில்லை. ஆனால் நேர நிர்வாகம் பற்றி சிறிதளவு சொல்ல விரும்புகிறேன்.
நமது நேர
நிர்வாகம் இரண்டே செயல்களில் இருக்கிறது. ஒன்று
நாம் எல்லோரும் செய்யும் வழக்கமான
செயல்பாடுகள்(Routine Activities). மற்றொன்று நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மேம்பாட்டு
செயல்பாடுகள் (Business Development
Activities).
பொதுவாக நாம் அனைவரும் வழக்கமான
செயல்பாடுகளுக்கு 60 சதவீத நேரத்தையும், நமது
மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 சதவீத
நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆனால் நாம் செய்யும் தவறு என்ன? உண்மையில்
என்ன நடக்கிறது? நமது தவறான நேர ஒதுக்கீட்டுத் திட்டமிடல் காரணமாக நமது பெரும்பாலான நேரத்தை வழக்கமான
செயல்பாடுகளுக்கு ஒதுக்கி விட்டு நமது மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு நேரமின்றி தவிக்கிறோம். பிறகு
எப்படி நாம் நமது வளர்ச்சியைப் பற்றி யோசிப்பது, திட்டமிடுவது?, செயல்படுவது?
நமது ஒரு
நாள் என்பதை ஒரு காய்கறிக் கூடையாகக்
கற்பனை செய்துகொள். அதில் நாம் எல்லாவற்றுக்கும் இடம் தருவது முக்கியம் தான்.
ஆனால் எதை முதலில் வைக்க வேண்டும், எதைக் கடைசியாக வைக்க வேண்டும் என்ற நுட்பத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அந்த கூடையில் ஒரு முட்டையை
முதலில் வைத்துப் பிற பொருட்களை வைத்தால் நமக்குத்தான் இழப்பு. முட்டைகளை மேலே
வைத்தால்தான் அது உடையாமல் இருக்கும். அவ்வளவு தான். நமது செயல்பாடுகளில் முக்கியமான
காரியங்களுக்கு முதலில் இடம் கொடுத்து அதை முதலில் செய்து முடிக்க வேண்டும்.
அதைத் தள்ளிப்போட்டால் முட்டை உடைவதைப் போல நமக்கு வாழ்வில்
பெரிய நஷ்டம் ஏற்படும்.
ஒன்றைப்புரிந்து கொள்வோம். நாமே நமது அனைத்து செயல்களுக்கும் உந்து
சக்தி.. நாமே நமது அனைத்து செயல்களுக்கும் தடை.
இந்த மாற்றங்கள் நமது
ஆழ்மனம் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ
அதைப்பொறுத்தே நிகழ்கிறது. இவற்றை நல்ல பயிற்சிகள் மூலம் நமது
வசமாக்க முடியும்.
குறித்த நேரத்தில் செயலை முடியுங்கள். குறித்த நேரத்தில் சந்திப்பை
உறுதி படுத்துங்கள். நீங்கள் மிகசிரந்தவராக மாற முதல் படி நேரத்தை சரியாக
கையாளுவது மட்டுமே.. ஒருவர் தங்களுடைய சொந்த தவறுகளின் காரணமாக தங்களின் கண்களுக்கு
முன்னால் வீழ்வது தான் வாழ்க்கையில்
மிக மோசமான பின்னடைவு.
டயானா டிலோன்சர் எனும் எழுத்தாளர்
'நெவர் பி லேட் எகைன்' எனும்
நூலை எழுதினார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து 'நேரம்
தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும்
தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ,
எங்குமே அவர்களால் சரியான நேரத்தில்
இருக்கவே முடிவதில்லை' என்கிறார்.
'என்றைக்கும் ஒரு நிகழ்ச்சியில் சரியான
நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும்' என நினைக்க வேண்டாம். நம்மால் முடிந்தவரை ஒரு பத்து
நிமிடங்களாவது முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான
நேரத்திலாவது நாம் அங்கே இருக்க முடியும்.
எப்படி திரைப்படங்களுக்கு செல்ல நாம் முன்னுரிமை கொடுத்து சீக்கிரமே திரையரங்கம் சென்று காத்திருக்கிறோமோ அதே போல நமது எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம்.
நாம்மில் பலருக்கு சீக்கிரமே
போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் பல வேளைகளில் தாமதத்தை உருவாக்கிறது என்று நினைக்கிறேன். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என
யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட நம்மை நாமே
உற்சாகம் அடையச்செய்யும் செயலாக இருக்கும். ஒரு வேலை சீக்கிரம் செல்வது சில புதிய நட்புகள் மலர பெரும் உதவி செய்யலாம்.
எந்த ஒரு
முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும்
பின்னும் பிற முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள். அப்போதுதான் முக்கியமான
நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்
நாம் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நுண்வினாடியும் (மில்லி செகண்ட்) மிகவும் முக்கியமானது ஆகும்.
ஆம், நீங்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர் என்றால் அந்த வருடத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். ஒரு நாளின் முக்கியத்துவத்தை தினக்கூலி வேலை செய்யும் நபர் நன்கு உணர்ந்திருப்பார். ஒரு மணியின் அருமை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதம் காரணமாக வேலை வாய்ப்பை இழந்தவரை கேட்டுப்பாருங்கள். ஒரு மணித்துளியின் அருமையை ஒருமுறை இரயிலை தவறவிட்டுப்பாருங்கள் நீங்களே உணருவீர்கள். ஒரு வினாடியின் அருமையை நாம் எதேனும் விப்பத்தில் இருந்து தப்பும்போது உணரலாம். ஒரு நுண்வினாடியின் அருமையை உலகத்தார
ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் வந்தவரை பார்த்து நாம் அறியலாம்.
என்றைக்குமே நம்முடைய அரசியல்வாதிகள் போல
தாமதமாய் வருவதை சிறப்பு தகுதி என்று நினைக்க வேண்டாம். அப்படி வருவது
தான் பெரிய ஆட்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால்
நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப்படுவீர்கள் என்றோ, நீங்கள் மிகவும் பரபரப்பாக வேலை பார்ப்பவர் என்று மற்றவர்களுக்கு காட்டவேண்டும் என்றோ
தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில் நேரம்
தவறாமைதான் உங்களை தலைமைப் பண்பு உடையவராய் சித்தரிக்கும். பல வாய்ப்புகளின்
கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும்.
நம்முடைய நேரம் தவறுவதால் பிறருக்கு நாம் செய்யும் தவறுகளையோ, இழப்புகளையோ நாம் பெரும்பாலும் உணர்வதே இல்லை. அந்த தவறுகள் நம்மை
காயப்படுத்தும்போதுதான் நாம் அதன் வலிகளை புரிந்துகொள்கிறோம். நம்மையும் மாற்றிக்கொள்ள முயல்கிறோம். இந்த உலகத்தில் நமது பிறப்பின் சிறப்பு நாம் எல்லோரும்
சமமாக பிறந்துள்ளதில் இருந்தாலும், நமது இறப்பின் சிறப்பை நமது செயல்பாடுகளே
தீர்மானிக்கிறது ஒருவர் தங்களுடைய நேரத்தை பிறர் மத்தியில் மதிக்கத்தவறும் போது
அவநம்பிக்கை பிறக்கிறது. இது தொடரும்போது ஒருவர் மீது தவறான எண்ணம் வேரூன்றி
செழித்துவிடுகிறது.
இந்த நேர
நிர்வாகத்தை சிறுவயதிலிருந்தே
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத்தான் எதையும்
கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது
என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நாமே குழந்தையை
பள்ளிக்கூடத்துக்கு தாமதமாய் கொண்டு விட்டோம் என்றால் குழந்தையும் அதையேதான்
கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள்!
நாம் எப்போதும் வேலையும் வாழ்கையும்
சமமாக பார்க்க வேண்டும். முழு நேரம் வேலைக்காக செலவு செய்வதன் மூலம் பலன் ஏதும்
இல்லை. நமது வேலையை ஒரு பழக்கமாக உருவாக்க வேண்டும். வேலை பளுவை நிர்வகிக்க கற்று
கொள்ள வேண்டும்.
நேரத்தையும் அதன் மதிப்பையும் போற்ற வேண்டும். இறுதியாக, தேவையின்றி யாருக்காகவும்
காத்திருந்து நமது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.
ஒரு கல்லூரியில் தத்துவ வகுப்பு பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும்
போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார். மாணவர்களிடம்
எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ்
ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை
ஜாடி நிரம்பும்வரை போட்டார்.
மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”
“ஆம்” என்றனர் மாணவர்கள்.
அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப்
பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார். கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின்
நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.
பேராசிரியர் மறுபடியும் கேட்டார். “ஜாடி நிரம்பி
இருக்கிறதா?”
மாணவர்கள் “ஆம்” என்று தலை அசைத்தனர்.
பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள்
கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.
தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.
பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2
கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில்
ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.
அப்போது பேராசிரியர் கூறினார்: “இந்த
ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான
குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம்,
நண்பர்கள், பிடித்தமான
பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன.
வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான்
உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”
சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்: “கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த
வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”
சிறிது யோசியுங்கள். முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால்
என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது.
நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம்
முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு
நேரம் இருக்காது.”
“அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம்
ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்;
ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள்.
மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம்
ஒதுக்குங்கள்.”
“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச்
செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம்
இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை
முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள். மற்றவை
மணலை போன்றவை.”
மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை
வயப்பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து
நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”
பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே
என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”
“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச்
சென்றுக்கொண்டிருந்தாலும், நமது
நேரத்தை சற்று சரியாக
செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான்
காப்பி காட்டுகிறது”
கடைசியாக, நேரம் தவறாமையை நாம் பழக்கப்படுத்திக்
கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நாம் வென்று
விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும்
உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.
சரி. முதலில் சொன்ன புதிருக்கான விடை
இதுதான். “அவர் இரண்டாவது இடத்தில் தான் இருப்பார். ஏனெனில்.
இரண்டாமவனை முந்தித்தான் அந்த இடத்துக்கு வந்தார்.”
இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.