திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சில நேரங்களில் சில வெட்கங்கள்..!



என் வெட்கங்கள் என் வார்த்தைகள் போலவே
கூடப் பிறக்காதவை...
எனக்கும் உண்டு வெட்கங்கள்..
அறியாப்பருவத்தில் பெண்களுடன் பேசுவதே
வெட்கப்படும் செயலாய் வளர்ந்தவன்..
கொஞ்சம் வளர்ந்த பருவத்தில்
பொய்யாய் பல பொய்கள் சொல்லி விளையாடினாலும்
உண்மையாய் பொய்கள் பேச வெட்கப்பட்டேன்..
வாழ்க்கையை அறிந்த பருவத்தில்
பொய்களை உண்மையாய் பேசும் நிலை வந்தபோது
என் செயலை எண்ணி வெட்கப்பட்டேன்..
முதன் முதலில் கை நீட்டியொருவனுக்கு மறுக்காமல்
கையூட்டு தந்தபோது என் நிலையெண்ணி வெட்கப்பட்டேன்..
இன்றைக்கும் மாற்றமுடிய செயல்களை கண்டு
தலைகுனிந்து கடந்து செல்வதில்
என் வெட்கமும் கூடவே பயணிக்கிறது...
தோல்விகளுக்கு நான் என்றும் வெட்கப்பட்டதில்லை..
ஆனால் தோல்வியிலிருந்து எழாமல் இருப்பதில் வெட்கப்பட்டேன்..
இங்கோ வெட்கப்பட வேண்டிய
செயலுக்கு வெட்கப்படாத கூட்டமும்..
வீராப்பாய் செய்ய வேண்டியவற்றை
வெட்கத்தோடு கடந்து போவதும்
புது நியதியாய் மாறியதைக்கண்டு

வெட்கியே போகிறேன்....

கருத்துகள் இல்லை: