வலைவீசும் எண்ணங்கள்
35. காரணமும், கற்பிதங்களும்
வாழ்க்கையில் மாறி மாறி சோதனைகளை சந்திக்காத மாந்தர்கள் இந்த
உலகத்தில் மிக மிக குறைவு. அதே போலவே குறைகள் இல்லாத மனிதர்களும் இந்த பூமியில்
இல்லை.
இன்றைக்கு உலகில் ஒருவரைப்பற்றிய அளவீடுகள் பெரும்பாலானவர்களால் பணத்தை
அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. பணம் தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய
பலம், பெரிய பாக்கியம். அந்த பணத்தை வைத்திருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள்
என்று பலரும் எண்ணலாம்.
ஆனால் பணம் வைத்திருப்பவர்களை கேட்டால் தங்களிடம் இல்லாத அல்லது
நிறைவேறாத ஆசைகள் பற்றி ஒரு பெரிய அட்டவணையே போடுவார்கள்.
மனம் எப்போது போதும் என்று திருப்பதி நிலையை அடைகிறதோ அப்போது மகிழ்ச்சி
நம்மை தேடி வருகிறது.
இன்னும் இன்னும் வேண்டும் என்று தேடி தேடி பணத்தில் பின்னால் அலைபவர்கள்
என்றைக்கும் அவர்கள் தேடும் அமைதியையும், நிம்மதியையும் அடைவதில்லை.
தூரத்தில் இருந்து பார்க்கும் சிலர் சொல்லாம் அவர்களைப்போல பணம்
இருந்தால் நான் நினைத்தை எல்லாம் சாதிப்பேன்?. எல்லாவற்றையும் வென்று முடிப்பேன்
என்று.?
உண்மையில் பணத்தைக்கொண்டு எல்லாம் வாங்கலாம் என்று நினப்பவர்கள் அப்பழுக்கற்ற
அன்பை, பரிபூரணமான நம்பிக்கை, நேர்மையை என்றைக்கும் ஒருவரிடம் இருந்து பெற
முடியாது.
இப்படி இருக்கையில் பணத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை கொஞ்சம்
மனிதன் மீதும், மனிதத்துவத்தின் மீதும் வைப்போமே.
இறைவைனை நம்புகிறவர்கள், இறைவனே இல்லை என்று சொல்லுபவர்கள்,
இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி வாழ்க்கை அமைதியாக இருந்தால் போதும் என்று
எண்ணுகிறார்கள் என மக்களில் பல மனநிலை கொண்டு வாழ்கிறார்கள் இருக்கின்றனர்.
கடவுளை நம்புகிறவர்கள் வாழ்க்கையில் துன்பம், சோதனைகள் வரும்போது, “எல்லாம்
கடவுள் செயல், நம்முடைய பூர்வ ஜென்மத்து பாவம்” என்று ஏற்று அமைதியாக கழிப்பவர்கள்
சில வகை.
நமக்கு மட்டும், “ஏன் இந்த
கடவுள் இத்தனை துன்பங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் தருகிறான்” என்று எண்ணி
அந்த நேரத்தில் கடவுளை தூற்றுகிறவர்கள் சில வகை.
இந்த துன்பங்கள், வேதனைகள் எதனால் வந்தது?, எப்படி தீர்க்கலாம்?.
இதில் இருந்து மீள வேறு வழிகள் இருக்கிறதா? என்று ஆராய்பவர்கள் சிலர்.
இப்படி மனித மனங்கள் பல சூழலில் பல வழிகளில் தங்களின் வாழ்க்கை
நிகழ்வுகளைப்பற்றி எண்ணியும், அதை அனுபவித்தும், சிலர் மற்றவர்மேல் பழியை போட்டும்
வாழ்ந்து கழிக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது எப்போதும் நிலையானதும் இல்லை. எப்போதும் நேரானதும்
இல்லை. எப்போதும் இன்பமானதும் இல்லை. அது ஒரு அலைகடல் போன்றது.
உலகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்த உலகத்தின் விருப்பு, வெறுப்புகளை
தங்களுக்குள் சுமந்து அதில் சமாளிக்க முடியாமல் மேலோட்டமான வாழ்க்கை வாழ்த்து
தத்தளிப்பவர்களின் வாழ்க்கை பொங்கி எழும் அலைகடலின் கரை அருகில் படகில் பயணம்
செய்வதை போன்றதாகும்.
வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பவர்கள் நடுக்கடலில் கொஞ்சம்
பாதுக்காப்பாக கப்பலில் பயணிப்பவர்கள் போல பெரிய அளவு அலைகளில் சிக்காமல் மெல்ல
அசைத்து அசைத்து பயணிக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
வாழ்க்கை பற்றிய எந்த பற்றுதலும் இல்லாமல் எதோ வந்தோம் வாழ்கிறோம்
என்று வாழ்க்கையை கழிப்வர்கள் நிலை கடலின் கரையில் நின்றுக்கொண்டு வரும் அலைகளை
ரசித்தும், அலைகளால் ஒவ்வொரு வினாடியும் தாக்கப்பட்டு நிலைகுலைந்து விழும் ஒரு
நிலையில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
கடவுளின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களுக்கு ஒரு சந்தேகம்
இருக்கலாம். ஏன் இறைவன் நமக்கு இந்த துன்பங்களையும், சோதனைகளையும் தருகிறான்?
ஒரு சிறிய கதை.. சிலர் ஏற்கனவே படித்து இருக்கலாம்..
குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.
ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை
சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.
“நல்ல கேள்வி!. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.
மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன.
இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.
“தெரியவில்லை."
"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே
மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன்
வெளியேவந்தது.
மற்றொரு ஜாடியை கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.
“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன்,
அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை
உங்களுக்கு தெரியாது. வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே
தெரியாமல் இருந்தது.
"இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை
சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை
சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே
வருகிறது."
"நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.
“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒன்றை நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”
அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!
தேன் ஜாடியை மட்டும் நீங்கள்வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?
”கெட்டவர்களுக்கும், சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும்” பெரிய
வித்தியாசம் இல்லை, ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களுக்கு அவன்
செவிசாய்ப்பதில்லை.
இறைவன் நம்மை சோதிப்பதும் அதற்குத்தான். நாம் நமது உண்மையான குணத்தை அறிந்து
நம்மை நாமே மாற்றிக்கொண்டு நமது செயல்களில் அன்பும், நேர்மையும், பிறருக்கு உதவும்
குணமும் கொண்டு சிறந்தவர்களாக மாறவும் மட்டுமே இந்த சோதனைகள்.
நம்மை பற்றி இறைவன் அறிந்துகொள்வதற்கு அல்ல.
நம்மை நாம் எப்போது அறிந்து கொண்டு திருத்திக்கொள்ள கிடக்கும்
சந்தர்ப்பங்களில் நம்மை செம்மைபடுத்தி கொண்டு வாழ்கிறோமே எந்த கணத்தில் நாமே
இறைவனுடன் ஒன்றி இறைவனாகிறோம்.
ஆம்.. நம்மை நாமே புரிந்துகொண்டு எல்லாவற்றையும் கடந்து செல்வது தானே
கடவுளை அடையும் வழி.
உலக வாழ்க்கை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும்
நமக்கு போதித்துக்கொண்டே இருக்கிறது.
கூர்ந்து நோக்குபவர்கள் அதில் இருந்து பாடங்கள் படித்து நல்வழியை
அடைந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.
தவற விட்டவர்கள் தடுமாற்றத்துடன் இந்த பூமியில் இருக்கும் உயிர்களுள்
ஒருயிராய் வாழ்ந்து மடிகிறார்கள்.
நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் கையில்
மட்டுமே? இதில் மற்றவர்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்... அவர்களே
காரணமாக இருக்க முடியாது.
யாரையும் காரணமும், குறையும் சொல்லாமல் பயணிக்கும் வழியில் வீசப்படும்
குப்பைகளை சுமந்தாலும் கடலில் கலந்து தன்னை தூய்மைப்படுத்தி ஆழியின் அடிமடியில்
துகிலும் ஆறுகள் போல மெல்ல பயணித்து வாழ்க்கையில் வரும் வெல்லவும் முடியும்.
பிறரை கைநீட்டி அவர்தான் காரணம், அவரால் தான் என் நிலை இப்படி என்று
குறை சொல்லி நின்ற இடத்தில் குப்பையை சேர்த்து சாக்கடையாக தேங்கும் ஒரு
குட்டையாகவும் வாழ்க்கையில் தோல்வியை ஏந்தும் ஒருவராகவும் இருக்கலாம்.
காரணங்களும், கற்பிதங்களும் நமது மனதின் எண்ணங்கள் மட்டுமே. வெற்றிபெற
வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அவைகள் ஒரு தடையாக என்றைக்கும் இருப்பது
இல்லை.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக