வலைவீசும் எண்ணங்கள்
33.முடியாதது எதுவுமில்லை
நம்மில் பலரும் சின்ன சின்ன தோல்விக்கு எல்லாம் மனம் உடைந்து “என்னடா வாழ்க்கை”
என்று சோர்ந்து போவதுண்டு. உண்மையில் சோகமே வாழ்க்கையாய் கொண்டவர்கள் எல்லாம்
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் அளவு இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து
நமக்கு இன்றைக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள். இப்படி வாழ்ந்தவர்களின்
இன்னல்களை ஒருசில வினாடிகள் நாம் நினைத்தாலே நமது துன்பங்கள் எல்லாம் பெரியதில்லை
என்று உணர முடியும்.
ஒருவரின் முயற்சியால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. இது பலருக்கு
தெரிந்தும் இதெல்லாம் நம்மால் முடியுமா என அவநம்பிக்கையின் விளைவால் தாழ்வு
மனப்பான்மை கொண்டு அந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விரக்தி அடைந்து கடைசியில்
விபரீத முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
“பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன்.
ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்” என்ற பைபிள் வரிகளை
கொஞ்சம் மனதில் கொண்டால் இப்படியான தவறான முடிவுகளை எடுக்காமல் தன்னுடைய உணர்ச்சிகளை
தவறான திசையில் திருப்பி பலியாக்காமல் எண்ணத்தில் வலிமை கொண்டு சாதிப்பார்கள்.
எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் அதை எல்லாம் வென்று ஏற்றங்கள் பல
கண்டு சீர்மிகு சிறப்பு வாழ்வு வாழ முடியும் என்று துணிந்த நெஞ்சுடனும், மாறா உள்ள
உறுதியுடனும் ஓயாது உழைத்து வரலாற்றில் தனிச்சிறப்புடன் வாழ்ந்து காட்டியவர் ஹெலன்
கெல்லர்.
19-மாத குழந்தையாக இருந்தபோது கடுமையான விஷக் காய்ச்சலால் தாக்கப்பட்டு, நிரந்தரமாகப் பேசுகிற, கேட்கிற, பார்க்கிற திறன்களை
பறிகொடுத்துவிட்டு தனது வாழ்க்கை முழுவதையும் அதே நிலையில் கழித்த ஹெலன் ஒரேயடியாய்
செத்துபோய்விடலாம் என்று பலமுறை எண்ணியிருக்கிறார்.
உண்மையில் நமக்கு எல்லாம் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருந்தால் அதை
உணர்ந்த நொடியில் மனமுடைந்து வாழ்க்கையில் ஒன்றுமேயில்லை என்று
முடங்கிப்போயிருப்போம்.
ஆனால் 12-வயதானபோது வாழ வேண்டும் என்ற எண்ணம் ஹெலன் கெல்லர் மனதில் உயிர்
கொண்டது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் போராடிப் போராடி முன்னேறியே
தீர்வது என்ற உறுதியை ஏற்றார். அவரது காதுகளும், வாயும் கண்களும் முழுமையாகப் பழுதுபட்ட பிறகு அவரது மூக்கின் திறன்
பன்மடங்கு அதிகரித்தது. மணத்தை மட்டும் வைத்துப் பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை
இயற்கை அவருக்கு ஊட்டியது.
“பலமுறை நான் வழுக்கி விழுந்திருக்கிறேன், மீண்டும் எழுந்து
நின்றுவிடுவேன். மறைந்திருந்த தடைக்கற்களின் விளிம்பைக் கடந்து முன்னேறினேன். சில
நேரம் பொறுமையை இழந்து மறுபடியும் சுதாரித்துக்கொள்ளும் நான், மறுபடியும்
உற்சாகமடைந்துவிடுவேன். நான் மிகவும் சிரமப்பட்டு, சிரமப்பட்டு, அங்குலம், அங்குலமாக முன்னேறினேன்.” என்கிறார் ஹெலன் கெல்லர்.
இந்த வார்த்தைகள் நம்மை சுடக்கூடும். நமக்கு அளிக்கப்பட்டுள்ள
வாய்ப்புக்கள் மற்றும் திறன்களின் அருமை தெரியாமல், அவற்றை நாம் எவ்வாறு நழுவ விட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை இவரின் வாழ்க்கை
நமக்கு உணர்த்தும்.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு
வாழும் வாழக்கை. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
ஹெலன் கெல்லர் போலவே எத்தனை எந்தனை மாந்தர்கள் நம்மிடையே வாழ்ந்து
மறைந்து இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எல்லாமே நமக்கு மிக சிறந்த பாடங்கள்.
சோர்ந்து வீழும் நேரத்திலும், மனம் சோகத்தில் விழும் நேரத்திலும்
இவர்களின் வாழ்க்கைப் பற்றி நினைத்தாலே நமக்கு வந்திருக்கும் எதுவும் மலையளவு
துன்பமல்ல.. வெறும் சிறு துகள் என்பதை நம்மால் உணர முடியும்.
போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட ப்ரிடா கஹ்லோ வலி மற்றும் துன்பங்களை
பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்து வெகுவாக மக்களை கவர்ந்தவர். 20ம் நூற்றாண்டில்
இவரது ஓவியம் சிறந்த ஓவியமாக தெரிவு செய்யப்பட்டு மெக்ஸிகோ சர்வதேச
அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.
இரண்டு கண்களை இழந்த எழுத்தாளர் வேத் மேத்தா இந்தியாவில் பிறந்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகத்
திகழ்பவர்.
தனக்கு ஒரு கை இல்லா விட்டாலும் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி
பெண்கள் பலருக்கு அமுதசாந்தி தான் தன்னம்பிக்கை தரும் ஊன்று கோல். சாதிக்க
நினைப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பார்கள். அதற்கு அக்மார்க் உதாரணம்
அமுதசாந்தி. தடைகளை கடந்து, தான் சாதித்தது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி
பெண்களுக்கும் நம்பிக்கை கீற்றாய் தெரிகிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அருணிமா சின்கா ஒரு விபத்தில் தனது
வலது காலை இழந்தார். பின்னர் செயற்கை கால் பொருத்தப்பட்டது சாதனை படைக்க வேண்டும்
என வெறியுடன் இமயமலை ஏறுவதற்கான பயிற்சிகளில் அருணிமா சின்கா ஈடுபட்டார்.
இவர் 2013ம் ஆண்டு மே மாதம் இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை
படைத்தார். எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்திய மாற்று திறனாளி என்ற பட்டத்தையும், உலக அளவில்
எவரெஸ்ட்டை தொட்ட முதல் பெண் மாற்று திறனாளி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பிறப்பால் அவருக்குக் கால்கள் கிடையாது. கைகளோ முழங்கை வரை
தான் இருந்தன. ஆனால் அவர் தனக்கு உடல் ஊனம் இருப்பதாக எண்ணாமல் ஆரோக்கியமாகவுள்ள
பலரும் செய்யாத காரியங்களைச் செய்துள்ளார். அவர் அனு ஜெய்ன். இவர் ஓர் ஓவியர், புகைப்படப்
கலைஞர், வடிவமைப்புக் கலைஞர்.
“ஒரு நாள் என் தாய் என்னிடம் ஒரு தூரிகையைக் கொடுத்து படம் தீட்டச் சொன்னார். மெல்ல மெல்ல என் ஆர்வம் கூடியது. நான் வீட்டிலேயே ஓவியம் பயின்றேன்.
என் ஓவியங்கள் என் எண்ணங்களின் வெளிப்பாடுகளாகவே இருக்கும் என்கிறார் அனு ஜெய்ன்.
‘லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை
அடைவதற்காக நடத்தும் போராட்டம் இருக்கிறதே,
அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன’ என்கிறார் மில்னஸ்.
உண்மை தானே.. தன்னுடைய எளிய வாழ்க்கையாலும், நேர்மையாலும், யாருக்கும்
வளைந்து தராத பண்பாலும், மனமெல்லாம் அன்பு கொண்டிருந்தாலும் அந்த அன்புக்கு
அடிமையாகாமல் நாட்டு மக்களுக்காக மட்டுமே உழைத்து உயர்ந்தவர் தமிழ்நாட்டின் பொற்கால
முதலமைச்சர் காமராஜர்.
தச்சுப் பட்டறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஆபிரகாம் லிங்கனின் விடாமுயற்சியின் தொடர் போராட்டம் தான் அமெரிக்க ஜனாதிபதி
பதவியை அவருக்கு தந்தது.
எங்கோ ஒரு மூலையில் ஏழைக் குடும்பத்திலே பிறந்த நீதியரசர் முத்துச்சாமி
அவர்கள் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறினார். படிப்படியாக உயர்ந்து
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தக
மூட்டையைத் தலையிலே சுமந்து ஆற்றைக் கடப்பதற்குத் தினமும் நீந்தி கடந்து பள்ளிக்குச்
சென்று படித்து சிறந்த மாணவனாக திகழ்ந்து தனது நேர்மையான செயலாலும், அயராத
உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து ”பாரதப் பிரதமர்” என்ற உன்னதமான பதவியை அடைந்தவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
இப்படி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலந்தியிடம்
பாடம் கற்ற ராபர்ட் ப்ரூஸ், பதினேழு தோல்விகள் கண்டும் முயற்சியில் தோல்வி அடையாத கஜினி,
ஆயிரம் தவறிலும் சோராமல் மின்விளக்கு கண்டுபிடித்த எடிசன், எத்தனையோ ஒவ்வொரு வகுப்பிலும்
பலமுறை தோல்வி கண்டாலும் தளராது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பள்ளியில்
பத்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்த எங்கள் ஊர் அண்ணன் சந்திர சேகர்.. இப்படி
இன்னும் எவ்வளவோ பேர்கள்..
இதில் சுவாரசியமானது என்னவெனில் நான் குறிப்பிடும் அண்ணன் சந்திர
சேகர் நான் மூன்றாம் வகுப்பு பயிலும் போது ஆறாம் வகுப்பு பயின்றார். பின்னர் மீண்டும்
அதே வகுப்பில் படிக்க அடுத்த ஆண்டு என் உடன்பிறந்த அண்ணன் அவர் வகுப்பு சென்றார்.
அவருக்கு மீண்டும் தோல்வி.. இடையில் நான் ஐந்தாம் வகுப்பு
வந்துவிட்டேன். அடுத்த வருடங்களில் எப்படியோ தேர்ச்சி பெற்று மெல்ல முன்னேறி
ஒன்பதாம் வகுப்பு சென்று விட்டார். நானும் மெல்ல மெல்ல அவரை நெருங்க.. அவர்
ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்த போது நான் அவருடைய வகுப்பில் இணைந்தேன். பின்னர்
இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்றாக எழுதினோம்..
தன்னை விட மிகக்குறைந்த குறைந்த வயதுடையவன் தன்னை துரத்தி வந்து
தன்னுடன் பயின்றது பற்றி கவலை கொள்ளலாம் எந்த தயக்கமும் இல்லாமல்என்னிடம் சந்தேகம்
கேட்டு மெல்ல மெல்ல தமிழ் சிறப்பாகவும், எழுத்துக்கள் கூட்டி ஆங்கிலம் கொஞ்சம்
தடுமாற்றத்துடனும் படிக்க தெரிந்து கொண்ட அவர் இன்றைக்கும் எனக்கு மறக்க முடியாத
ஒரு உதாரணமாக இருக்கிறார்.
வாழ்க்கையில் முடியாதது என்பது எதுவுமில்லை என்பது தான் உண்மை.. தண்ணீரை வலையில் பிடிக்க முடியா? என்று கேட்டால்
தன்னம்பிக்கை இல்லாதவன் எப்படி முடியும்? என்று கேள்வி எழுப்பி
வேடிக்கைப்பார்ப்பான்..
வாழத்தெரிந்தவனும், வாழ்க்கையின் மீது பிடிப்பு கொண்டவனும் இந்த
கேள்விக்கு என்றைக்கும் முடியாது என்று சொல்ல மாட்டான். கொஞ்சம் பொறுமை கொண்டு
தண்ணீரை பனிக்கட்டியாக மாற்றி வலையில் அள்ளி வருவான். இது தான் செயல்.. இது தான்
நம்பிக்கை. இது தான் வழிமுறை.
எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. ஆனால் தேடப்படாத விடைகளும்,
கேட்கப்படாத கேள்விகளும் எங்கும் எப்போதும் நம்மை சுற்றி விரவிக்கிடக்கிறது.
நமக்கு தேவையான கேள்வியை எடுத்து அதற்கு விடை கண்டுபிடிக்கும்போது பெரும் நிலை
தான் வெற்றி.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எங்கும் எந்த தடைகளும் இல்லாத வாழ்க்கை
அல்ல, எல்லா தடைகளையும் வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
இந்த உலகத்தில் நாம் வாழ்கையில் எப்போதும் எங்கேயும் எல்லோருக்கும் ஒரு
கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் தான்
பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை
தவறவிடுகிறோம்.
வாழ்க்கையில் பறக்க விரும்புபவனால் தரையில் படர முடியாது. உயரப்பறக்க
வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் ஆகாயமே எல்லையாக இருக்க முடியும். தரையில் வேர்கள் ஊன்றினாலும்
வளர்ச்சி என்பது ஆகாயத்தை நோக்கி இருக்கும் பெருமரமாக மட்டுமே நமது எண்ணங்கள்
என்றைக்கும் இருக்க வேண்டும்.
ஒருமுறை கெல்லரிடம் “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள்”
என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கெல்லர் “இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடுதான்
படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன்.
அப்போது நான் அதுகுறித்து மகிழ்வேன்” என்று கூறினார்.
இன்றைக்கு நீங்கள் நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? ஏதோ ஒரு மனச்சுமை
உங்கள் தோள்களில் பெரும்பாரமாக கனக்கிறதா? தீராத மன உளைச்சலில் இருக்கிறீர்களா?
இதோ ஹெலன் கெல்லர் எழுதிய அற்புதமான கவிதை:
இருட்குகையான பூமிக்குள்ளே
புதையுண்டிருந்தாலும் கூட
உச்சிமரத்தின் கொண்டாட்டப் பரவசத்தில்
பங்கேற்கின்றன, வேர்கள்.
சூரிய ஓளியையும்,
விசாலமான காற்றையும்
இயற்கையின் கருணையால்
அனுபவிக்கின்றன, வேர்கள்,
என்னைப் போலவே!
இப்போது ‘முடியாதது எதுவுமில்லை” என்ற உண்மையை ஒரு மந்திரமாக மனதில் சொல்லிப்பாருங்கள்...!!!.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக