வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

34. நினைவுகளின் நீரலைகள்

வலைவீசும் எண்ணங்கள்

34. நினைவுகளின் நீரலைகள்

பயணங்களின்போது ஜன்னலோர இருக்கை இதமானது. வாழ்க்கையைப்போல எல்லாமே வேகமாக நகரும்“. இலங்கை எழுத்தாளர் இன்ஸாப்.

ஒரு சிறிய கதையுடன் இந்த வாரம் வலைவீசும் எண்ணங்களை தொடர்கிறேன்..

புத்தர் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். அதில் ஒருவன் அந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? இனி வசந்தம் வருமா தெரியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டான்.

இது அவர்களின் காதில் விழுந்தது. அப்போது புத்தர் சீடர்களிடம் மனிதனின் வாழ் நாள் எவ்வளவு தெரியுமா?’ என கேள்வி கேட்டார்.

ஒரு சீடர் அறுபது ஆண்டு என்றார். இன்னொருவரோ அதெப்படி சிலர் எழுபது எண்பது ஆண்டுகள் கூட இருக்கிறார்களே என்று மறுத்தார். இப்படி ஆளாளுக்கு பதில் சொல்ல புத்தர் இடைமறித்தார்.

மனிதர்கள் தற்போது எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? சிலர் கடந்த காலத்தை சிந்தித்து கவலையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சிலர் எதிர்காலம் குறிந்த கற்பனையில் ஏங்கித் தவிக்கிறார்கள். அதனால் நிகழ்காலத்திக் கோட்டை விடுகிறார்கல். நிகழ்காலத்தில் விழிப்புடன் இருப்பவனே நிறைவுடன் வாழ்கிறான் நிகழ்காலமே அவன் வாழும் காலம் என்றார்.

ஆனால் நிகழ்காலத்தில் இறந்த காலத்தின் கனவுகளில் மூழ்கி வாழ மறப்பதும் அதன் மூலம் வருகின்ற எதிர்காலத்தை சமாளிக்க முடியாமல் திணறுவதும் இன்றைக்கு பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.

கனவுகள் ஒருவரின் எண்ணங்களுக்கு வலிமை சேர்க்கும் என்பது உண்மை, ஆனால் அந்த கனவுகள் ஏற்றம் பற்றியதாக, புதிய ஆக்கம் பற்றியதாக, புதிய முயற்சிகள் பற்றியதாக இருக்க வேண்டும். அதை விடுத்து இறந்துபோன காலத்து இனிய நினைவுகள் மீண்டு வருமா? என்ற கனவுகள் ஒருவரை எழச்செய்வதற்கு பதில் வீழ செய்துவிடும்.

கடந்துபோன காலத்தில் வாழ்க்கையின் வருங்காலத்திற்கு என்று நம்முடைய உழைப்பை முதலீடு செய்யாமல் சோம்பி திரிந்து இருப்பதும், அந்த நேரத்து சுகங்களில், கேளிக்கைகளில் செலவழித்து இன்புற்று இருப்பதும் எதிர்காலத்தை இருட்டாக்கும் வழிகளே..!

உண்மையில் நம்முடைய கடந்த கால நினைவுகள் என்பது ஒரு சுற்றுலா தலம் செல்வதற்கு ஒப்பானது. ஒருமுறை என்ன பலமுறை நினைவுகளில் மூழ்கி இன்புற்றிருக்கலாம். ஆனால் அங்கேயே தங்கிவிட முடியாது. ஒருவேளை அந்த நினைவுகளில் அங்கேயே தங்கி விடுபவர்கள் மற்றவர்கள் பார்வையில் மதிமழுங்கிய ஒருவராக, காட்சிப்பொருளாகத்தான் இருப்பர்.

எல்லா கடந்த காலமும் ஒரு காலத்தில் எதிர்காலமாக இருந்தது தானே. அந்த காலங்களில் வாழ்க்கையை சீரமைக்காமல் வாழ்ந்துவிட்டு வாழவேண்டிய நிகழ்காலத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடினால் நாம் எதிர்கொள்ள இருக்கும் காலம் நமக்கு என்றைக்கும் நரகமாக இருக்கும்.

எழுத்தாளர் நகுலன் அவர்களின் ஒரு கவிதை வரி “இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்” இது வாழ்க்கையின் நிதர்சனத்தை ரொம்பவே எளிதாக நமக்கு உணர்த்தி விடுகிறது.

உண்மையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்த காலம் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதே அந்தளவுக்கு முக்கியமற்றதாகவும் உள்ளது. நம்மை கடந்து சென்று இறந்தவிட்ட அந்த இறந்த காலதில் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்ட எல்லா நல்ல, கெட்ட நினைவுகளையும் அடக்கம் செய்து விட முடிவதில்லை.

கடந்த காலம் என்பது வெறும் நினைவுகளின் தொகுப்பு மட்டுமே.. சில நேரங்களில் அதில் பாடம் படிக்கச் முடியும், சில நேரங்களில் அதின் இன்பங்களை ரசிக்க முடியும். சில நேரங்களில் அதில் நிகழ்ந்த துன்பங்களுக்கு கண்ணீர் விடவும் முடியும். ஆனால் எதையும் நம்மால் மாற்றவே முடியாது

இலங்கை எழுத்தாளர் திரு. இன்ஸாப் அவர்களின் ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய அறிமுகம் இந்த கட்டுரை தொடர்பாக கருத்துக்கள் தேடும்போது கிடைத்தது.

அதில் ஒரு கட்டுரையில் எவ்வளவுதான் திரும்பிப்பார்த்தாலும், மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து, அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாய் நடக்கிறதுஎன்று குறிப்பிடுகிறார்.

இன்றைக்கும் நம்மில் பலரும் வாழ வேண்டிய மணித்துளிகளை வீணாக பலி கொடுத்துவிட்டு பின்னர் இறந்து போன மணித்துளிகள் பற்றிய கனாக்கண்டு கண்ணீர்விடுகின்றனர்.

வாழ்க்கையின் புரிதல்கள் என்பது வாழ்வது தானே.. எல்லாவற்றையும் பலிகொடுத்து வாழ்வதில் என்ன இருக்க முடியும். நமக்கவோ, பிறருக்காகவோ, இல்லை இந்த உலகத்துக்காகவோ பயன்னுள்ள வாழ்க்கை வாழும்போது நமது கனவுகள் எல்லோருக்குமே இனிக்கும்.

ஒரு நதி என்பது தன்னை தானே வினாடிக்கு வினாடி புதுபித்துக்கொண்டே ஓடுகிறது. வாழ்க்கையில் நாம் அப்படி இருக்கிறோமா? எப்படி கடல் புகுந்த நீர் நதியை சேராதோ அப்படி தான் நமது வாழ்க்கையின் பயணமும், நேரமும். ஒரு முறை செலவழித்தால் மீட்க முடியாது.

எல்லோர் வாழ்க்கையிலும் நேற்று என்பதை இன்றைக்கு அமர்ந்து பார்க்கும்போது பல விந்தைகளும், பல கேள்விகளும், பல நெருடல்களும், பல நல்லதுகளும், பல கெட்டதுகளும் கலந்த கலவையாகவே காட்சி தரும்.

கடந்து போன கனவின் நாட்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆசைகளுடன் திரிந்த நாம் நிகழ்காலத்தில் அவற்றில் சிலதை பெற்றிருக்கலாம், பலதை இழந்தும் இருக்கலாம், சிலவற்றுக்காக இன்னும் திரிந்து கொண்டும் இருக்கலாம். காலம் நம்மை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப்போடும்.

 “தனக்கு எல்லா வசதிகளும் வந்த பிறகு, மிகச்சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ இந்த உலகில் வாழ்க்கை எவருக்கும் எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான், வாழ்க்கையும் என்பது எழுத்தாளர் திரு. இன்ஸாப் அவர்களின் வரிகள்..

எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்து போன காலம் என்பது ஒரு மின்னலைப்போல நமது கனவிலும், நினைவிலும் வந்து செல்வதை தவிக்க இயலாது.

எல்லோருடைய வாழ்வின் மிக மகிழ்ச்சியான பொழுதுகளும், கசப்பான நிகழ்வுகளும் கடந்த காலங்களில் மட்டுமே இருப்பதாக நாம் நினைக்கையில், அதைவிடவும் பல சம்பவங்கள் நம்முடைய நிகழ்காலத்தில் நடந்து விடுகிறது.

வாழும் காலங்களில் நமக்கும், பிறருக்கும் நாம் எப்படி பயனுள்ள ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் என்பதிலேயே வாழ்கையின் முழுமையான அர்த்தம் ஒளிந்துள்ளது..

“தேன் சுரக்க மலராய் இருந்தால் போதும்” என்ற மேற்கோளுக்கு ஏற்ப நம்முடைய வாழ்வை எளிதான மலராய் மாற்றிக்கொண்டு வாழும்போது எதிர்காலத்தில் வாழும் நாளில் நம்முடைய கனவு நாட்கள் என்றைக்கும் இனிக்கும் வண்ணம் இருக்கும்.

உண்மையிலேயே நம்மில் பலருக்கும் கடந்த காலம் என்பது ஒரு அளப்பரிய பெரும் புதையலே.. அது ஒரு பொற்க்காலம் என்ற ஆனந்த கனவில் திளைக்க வைக்கிறது.

கடந்த காலம் என்பதும் வாழ்க்கையின் ஒரு பருவம் தான். அதில் இல்லாதது எதுவுமில்லை. ஆனால் வாழும் காலத்து துயர நேரங்களில் கடந்த காலத்தை நினைத்து மேலும் மேலும் கண்ணீர் சிந்துவதால் என்ன கிடைக்கப் போகின்றது?

அதில் இருந்து எதையும் நம்மால் மாற்ற முடியாது. அது ஒரு வரலாற்றுச் சின்னம் அவ்வளவே.. அதது அதனிடத்தில் இருக்கும். பார்க்கலாம், ரசிக்கலாம். என்றைக்கும் நமது செவிகளில் ஒலிக்கும் ஒரு இனிய பாடலாகவே அந்த கனவின் நாட்கள் இருந்து கொண்டிருக்கும்.

இந்த கடந்த காலம் ஒரு பெரிய ஆலமரம் போன்றது. அந்த பிரமாண்டமே நிகழ்காலமாக நம் முன்னால் இருக்கிறது. அந்தப் ஆலமத்தின் வேர்கள் சென்ற பாதைகள், கிளைகள் விரிந்த நிலைகள், மெல்ல பூமியில் வீழ்ந்த விழுதுகள் இன்றைக்கு அந்த ஆலமரத்தையே தாங்கும் வேராகவும் மாறி இருக்கலாம். நாம் பார்த்து வியக்கலாம், மாற்ற முடியாது.

இந்த வளர்ச்சியில் நாம் பெற்ற காயங்கள், நாம் கொடுத்த காயங்கள் போலவே இன்பங்களும் இனிமைகளும்.. அந்த நிகழ்கால நினைவுகளை கொண்டாடுவோம்.

உண்மையில் மறப்பதும் மன்னிப்பதும் தானே காலம் நமக்கு கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய வாழ்க்கைப்பாடம். எத்தனை வலிகளை நமது சொந்தங்கள் தந்தாலும் அந்த வலிகளை மறந்து அணைத்துக்கொள்ளும் வலிமையை தருவதும் காலம் தானே.

“வாழ்க்கையில் நீரலைகள் இனிமைகள் தரலாம் ஆனால் அவை நீடித்து நிலைப்பதில்லை”.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: