வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

32. யாரை நம்பி உலகம்

வலைவீசும் எண்ணங்கள்

32. யாரை நம்பி உலகம்

“உலகம் பிறந்தது எனக்காக..
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்வதும் எனக்காக..
அன்னை மடியை விரித்தால் எனக்காக..”

வரிகள் இந்த இயற்கை எழில் சூழ்ந்த உலகம் நமக்காக என்று விளித்து கூறினாலும் அது ஒரு உயர்வு நவிற்சியே.. ஏனென்றல் இந்த உலகம் இருந்தது.. இருக்கிறது.... இருந்துகொண்டே இருக்கும்..ஆனால் நாம் இருக்கப்போவதில்லை.

உண்மையில் இந்த உலகம் யாருக்காகவும், யாரை நம்பியும் உருவாகவில்லை. அதே போலவே எல்லா வேலைகளும் யாரை நம்பியும் காத்திருப்பதில்லை. இந்த பிரபஞ்ச இயக்கம் நில்லாமல் நடைபெறுவது போலவே நம்மை சுற்றியுள்ள எல்லா செயல்களும் யாருக்காகவும் காத்திருக்கிறது நடைபெறுகிறது.

இந்த உலகம் யாருக்காக என சிந்தித்தால் மனதில் தோன்றும் எல்லா காரண காரியங்களும் நமக்கே நமக்காக என்று சொல்லும். ஆனால் அதில் உண்மை எந்த அளவிற்கு இருக்கிறது.

உண்மையில் நாம் இந்த உலகத்தின் விருந்தினர் மட்டுமே.

எப்படி....?

நமது இல்லத்திற்கு விருந்தினர் வந்தால் எப்படி அவர்கள் மனம் கோணாத படிக்கு அவர்கள் நமது வீட்டில் இருக்கும் வரை நமது விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி அவர்களை கவனிக்கிறோமோ அப்படியே தான் இந்த பிரபஞ்சம், பூமி, உலகம் நம்மை நடத்துகிறது. ஆனால்  நாம்  தான் இந்த கவனிப்பில் மயங்கி இந்த உலகமே நமக்கா என்று ஆனந்த கூத்திட்டு இருக்கும் கொஞ்ச காலத்தில் இந்த உலகை, இயற்கையை, இனிமையை எல்லாம் அழிக்க முற்படுகிறோம்.

நமக்கு பிறகும் இருக்கும் இந்த பூமி நமக்கு பிறகு வரும் விருந்தினரை நம்மை எப்படி மிகச்சிறப்பாக உபசரித்ததோ அதே அளவிற்கு உபசரிக்கும். ஆனால் நாமோ நமது சுயநலத்திற்காக விருந்து கொடுக்கும் குடும்பத்தையே நாசப்படுத்தி நன்றி மறந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த பூமி முழுமையாக மனிதர்களுக்காகவே மட்டுமல்ல. உண்மையை கூர்த்து நோக்கினால் இந்த உலகமும் இயற்கையும் இணைந்து உருவாக்கியதுதான் மனிதர்கள். பூமிப்பந்தின் பரிணாம வளர்ச்சியின் இன்றைய இறுதி வளர்ச்சி தான் நாம்.

ஆனால் நாமோ இயற்கையோடு இணைந்து வாழ முயற்சிக்காமல் அதனையே வெல்ல நினைத்து மெல்ல மெல்ல அதன் குரல்வளையை நெரிக்கிறோம். இந்த இயற்கையை அழிக்க முயல்வதன் மூலம், இயற்கையின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியாகிய நம்மையே அழித்துக்கொள்கிறோம் என்பதையும் மறந்து விடுகிறோம்.‌

"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும், மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்" என்ற அற்புத வார்த்தைகள் சொல்லுவது மனிதன் மேன்மையடையும் வழியை அல்லவா.

அதை விடுத்து நம்மில் பலர் தன்னால் தான் எல்லாமே நடக்கிறது. தான் அந்த இடத்தில் இல்லை என்றால் ஒரு செயலும் நடப்பதில்லை என்று தற்கர்வம் கொண்டு வாழுகிறார்கள். உண்மையில் எந்த செயலும் யாருக்காகவும் நிற்பதில்லை. அப்படியே இருந்தாலும் ஒரு நல்லெண்ணத்துக்கு நிற்குமே தவிர ஒருவரின் கர்வத்திற்கு நிற்பதில்லை. இது “சுவத்துல ஒட்டுன பல்லிக்கு தான்தான் சுவத்தை தாங்குறதா நெனப்புனு” (நன்றி: ரம்யா அருண் ராயன்) பழமொழி போலுள்ளது.

இந்த கர்வத்தில் இருந்து எப்படி விடுபடுவது....?

அது தான் “தன்னைத்தானே கவனித்து வாழும் கலை.”

ஒரு சின்ன கதையில் இதை புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த காசி அரசன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன், தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இமயம் நோக்கி ரதத்தில் பயணத்தைத் தொடர்ந்தபோது வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

"நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

"மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

"இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார் அந்த மனிதர்.

"நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்.. அது ஒரு மரியாதையின்மை தோற்றத்தை உங்கள் மனதில் உண்டாக்கி விடுமோ என்ற எண்ணத்தில் நிறுத்தினேன்" என்று பதிலளித்தான் மன்னன்.

"நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்."

மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.

மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?" என்று கேட்டான் மன்னன்.

"புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான்.

தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

இந்த தன்னைத்தானே கவனிக்கும் கலையை நாமும் நடைமுறை படுத்தினால் நம்மின் நிறைகளும், குறைகளும் புரிபடும். நம்மை நாமே சிறப்பாக செதுக்கிக்கொள்ள வழிபிறக்கும். நாம் தனித்துவமாக இருப்பவரா? இல்லை இருக்கும் கூட்டத்தில் ஒருவரா? என்பதை நம்முடைய செயல்கள் தான் தீர்மானிக்கிறது. நல்லது செய்வதாலும், கெட்டது செய்வதாலும் நம்மை தனித்து இந்த உலகத்தில் காட்டினாலும் எது சிறப்பு என்பது எல்லோரும் அறிந்தது தானே..

இந்த பூமியில் நிரந்தரமில்லாத, அற்பமான, சொற்ப கால வாழ்வைப் பெரிதாக மதித்து பல நேரங்களில் தவறான பாதையில், கெட்ட எண்ணத்தில், மூட நம்பிக்கையில், பாவமானச் செயலில் மூழ்கிவிடுகிறோம். குறுகிய ஆண்டு வாழ்வுப் பயணத்தை பல ஆயிரம் ஆண்டு வாழப் போவது போல வெறும் கற்பனையில் தவிக்கிறோம். இறைவனின் பயம் இல்லாமல் அவனுடைய படைப்புகளை கண்டு அஞ்சுகிறோம்.

சாதாரண அற்ப உயிர்களை நம்பும் அளவு கூட இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம். அற்பமான ஆரம்ப நிலையையும், இறுதியான மரணத் தருவாயையும் மறந்து விட்டு மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறோம்.

நமது வருகை எந்த நோக்கத்திற்காக? இந்த உலகம் யாருக்காக? இந்த பிரபஞ்சம் யாருக்காக? கடல் யாருக்காக? பூமி யாருக்காகப் பறந்து கிடக்கிறது? இன்னும் எளிதில் விடை சொல்லமுடியாத பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சுருங்க சொல்லின்  இந்த உலகம் யாருக்காக? இந்த உலகத்தை பொறுத்தவரை அற்பமான அதின் விருந்தினராகிய நமக்காக தானே படைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் நாம் பொறுப்பின்றி இந்த உலகை, இயற்கையை, சூழலை, மனித நேயத்தை, அன்பை, கனிவை அழித்து காணப்போகும் நன்மை தான் என்ன? அது யாருக்காக?

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: