ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

6. நினைப்பதெல்லாம்...

திசையறியா பாதையிலே

6. நினைப்பதெல்லாம்...


அன்றைக்கு ஏனோ ஒரே குழப்பமான மனநிலை. பல பழைய நினைவில், பழைய நிகழ்வுகள் மனதில் மீண்டும் மீண்டும் சுற்றி சுழன்று மனதை அமைதி இல்லாமம் செய்தது.

என்றோ ஒருநாள் நிகழ்ந்த நிகழ்வில் இன்றைக்கு நாம் நினைக்கும் மாறுதலுடன் இப்படி நிகழ்ந்திருந்தால் இன்றைக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்?”, அன்றைக்கு நமது மனதில் இன்றைக்கு தோன்றும் கேள்விகள் தோன்றி, கேட்டு, தெளிவு பெற்று, அந்த நிகழ்வே வேறு மாதிரி இருந்தால்? எப்படி இருக்கும்..

எல்லாமே முடிந்து போன செயலில் மாற்றி நடந்து இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற மனவருத்தம், ஏக்கம், கவலை எல்லாம் மனதை துவைத்து, அலசி, காயப்போட்டு அமைதியில்லாமல் பிழிந்துகொண்டிருந்தது.

இதை போல மனநிலை எனக்கு மட்டுமல்ல.. உங்களில் பலருக்கும் தோன்றி இருக்கலாம். வாழ்க்கையில் வாய்ப்புகள் அவ்வப்போது வராது? வாய்ப்பு வரும்போது பயன்படுத்திகொள்ள வேண்டும். தவறவிட்டுவிட்டால் மீண்டும் அதே போல ஒரு வாய்ப்பு உங்களில் வாழ்வில் மீண்டும் வரவே வராது.

வேறு வாய்ப்புகள் வேறு நேரங்களில் வேறு சூழலில் வரலாமே தவிர முதல் வாய்ப்பு வாய்த்தது போல இருக்காது. அதற்குள் நமது பயணம் நெடுந்தொலைவு கடந்து இருக்கும். மீண்டும் திருப்பி சென்று திருத்த முடியாத பாதையில் நாம் வந்துவிட்டிருப்போம்.

என் தந்தை மறைவின் போது தொழில் தொடங்குவது சார்ந்து சில வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. இளவயது. சரியாக யோசிக்காது, துணிந்து செய்யவேண்டிய செயல்களை சந்திக்க பயந்து அந்த வாய்ப்பை தவறவிட்டேன். இன்றைக்கு நினைத்தாலும் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இப்போது தவறவிட்டுவிட்டோம் என்று என்னும்போது வரும் மனவருந்தம் சொல்லி மாளாது.

என்றைக்குமே நாம் நினைப்பது எல்லாமே நடப்பது இல்லை. அதற்காக நினைப்பது நடக்காது என்றும் இல்லை. நடக்கும். அதற்கான வாய்ப்புகள் வரும்போது நாம் தவறவிடாமல் இருக்கவேண்டும்.

இப்படி வாய்ப்புகள் தவிர்த்து சில நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் சில நேரங்களில் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்ற எண்ணமும் சமயங்களில் தோன்றும்.

ஆம். இங்கேயும் என் தந்தையின் மறைவு பற்றியே எண்ணம் மீண்டும் எனக்கு வருகிறது. அன்றைக்கு அவருடைய முடிவு நிகழாமல் இருந்திருந்தால், சில காலங்களில் வந்த மாற்றம் அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்பார்த்த சில நல்ல நாட்களை அவருக்கு தந்திருக்குமே? என்னுடைய அண்ணனின் திருமண நிகழ்வு நடக்கும்போது “எவ்வளவோ பேருக்கு தன்னுடைய சொந்த வீட்டு திருமணம் போல முன்னின்று நடந்திய அவரால் தன்னுடைய மகனின் திருமணத்தில் மகிழ்வுடன் ஓடியாடி எதையும் செய்து இன்புராமல் இருக்கும் நிலையை: நினைத்து மனதில் வருத்தம் இருந்ததை மறுக்க முடியாது”.

அதேபோலவே நாம் மட்டும் ஒரு சிலரை சந்திக்காமலே இருந்திருந்தால் மிகவும் நல்லதாக இருந்திருக்குமேஎன்ற எண்ணம். இதுவும் நமக்கு வருவது தான். ஒரு சிலரால் நாம் அவ்வளவு துன்பம் அடைந்திருப்போம். அந்த நிகழ்வில் நம்முடைய கவனக்குறைவும் இருந்தாலும் பெரும் பங்கு அந்த நபருடையதாகவே இருக்கும்.

நினைத்து பார்க்கும்போது எல்லோருக்கும் இப்படியான நினைவுகள் சில நேரங்களில் மனதில் மின்னலென வந்து போவதுண்டு. அது மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கலாம். மனதின் சுமைகளை கூட்டுவதாகவும் இருக்கலாம்.

பெரும்பாலான நேரங்களில் நமது குழப்பமான மனநிலையிலும், சோகமான தருணங்களிலும், கையறுநிலையிலும் இப்படியான நினைவுகள் வந்து நம்மை மிகவும் சிந்திக்க வைக்கும், ஆனால் எதுவும் செய்ய முடியாத வகையில் எல்லாமே முடிந்து இருக்கும்.

வாய்ப்புகள் வரும்போது சிந்தித்து தைரியமாக அதை பயன்படுத்துவோம், நட்புகள் நெருங்கும்போது பொறுமையுடன் அணுகி நல்ல நட்பை போற்றுவோம், சில நேரங்களில் அவசரப்படாமல் பொறுமையாக பேசி “சொற்கள் பயன்படுத்துவதால் வரும் வேண்டத்தகாத விளைவுகளை” தவிர்ப்போம்.

வாழ்க்கை என்பது நாம் வாழும் வரை குதூகலத்துடன். அமைதியாக, நிம்மதியாக, மனநிறைவுடன் வாழ்வதற்கே.

இன்னும் பயணிப்போம்..

என்றும் உங்கள் அன்பை விரும்பும் -  சங்கர் நீதிமாணிக்கம்


கருத்துகள் இல்லை: