திசையறியா பாதையிலே
5. நீ தானே எந்தன் புன்னகை
மன்னன்...
வளைந்து நெளிந்து ஓடும் பாம்பு போல வயலின் ஊடே புரண்டு
செல்லும் பாதை தாண்டி பயணப்படுக்கொண்டு இருந்தேன் நான்.. நிமிர்ந்து
எட்டிப்பிடிக்க கூடிய தூரத்தில் சின்னஞ்சிறு மலையும் மலையடிவாரம் ஒட்டி செல்லும்
வீதியும் அங்கே உயர்ந்து நிற்கும் நீர்த்தேக்க தொட்டியும்..
மனம் முழுக்க பாரம் சுமந்து வழியிலேயே நடந்து கொண்டிருந்தேன்.
எப்போதும் மகிழ்ச்சியோடு துள்ளி வேகவேகமாக நடக்கும் நடையில் ஒரு தளர்வு. கூடவே
துணைக்கு சில நண்பர்கள்..
உற்சாகமாய் சிரிந்து என்றைக்கும் மனதில் பெரும் சக்தியாய்
இருந்து என்னை வழிநடத்திய உயிர் அங்கே வெறும் உடலாய் இருப்பதை பார்க்க மனமின்றி
மெல்லவே நடக்கிறேன்..
துக்கம் நெஞ்சில் இருந்தாலும் அழாமல் மனபாரத்தோடு நடந்த என்னை
ஊருக்குள் நுழைந்தவுடன் பார்த்து பரிதாபத்துடன் பேசியவர்களின் வார்த்தைகள் செய்த
மாயத்தில் பெருக்குண்ட கண்ணீரை அடக்கமுடியாமல் வெம்பி வெடிக்க வைத்தது..
வீட்டில்... புன்னகையுடன் பார்த்த அந்த முகம் கறுத்து புன்னகை
வற்றி பார்க்க முடியாமல் கிடத்தப்பட்டிருக்க.. சில நிமிடங்களில் வெளியே வந்து
வீட்டின் எதிரில் இருந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழிருக்கும் சிமென்ட் பலகையில்
வந்து அமைதியாக படுத்துவிட்டேன்...
நேரம் கூடக்கூட நெருங்கிய உறவுகள் ஒவ்வொருவராக தேடி வந்து
ஆறுதல் சொல்லுகிறேன் என்று தந்தையின் அருமை பெருமைகளை கூற அடக்கிவைத்த
துக்கமெல்லாம் அணை உடைந்து பாயும் வெள்ளமாக கொட்டித்தீர்ந்து அடங்கும் வேளையில்
தான் வேறு ஒருவர் வந்து மீண்டும் துக்கத்தை கிளறி விடுவார்.
நம்மால் எவ்வளவு வேண்டுமானாலும் துக்கத்தை மனதில் அடக்கி
தனிமையில் இருந்துவிட முடிகிறது, ஆனால் உற்றார், உறவினர், நட்பு, நெருங்கியவர் என
அருகில் வந்து மறைந்தவர் பற்றி சொல்ல தொடங்கும்போது வெடித்து அழத்தொடங்கி
விடுகிறோம்.
நம்முடைய துக்கத்தை தாங்க ஒரு தோள் இருந்தால் நாள்
முழுக்கக்கூட அழுதுகொண்டே இருக்கலாம் அவ்வளவு சுகமாக மனதிற்கு இருக்கிறது அந்த
தோளின் அணைப்பு.
நினைத்துப்பார்க்கையில் வெளிப்படுத்தும் துக்கம் தொலைந்து
போகிறது. வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
அன்றைக்கு என் தந்தையின் முகத்தை முழுதாக பார்க்கும்
திராணியற்ற ஒருவனாகவே நான் இருந்தேன். என்றைக்கும் என் தந்தையின் புன்னகை முகம்
மட்டுமே என் மனதில் சிற்பமாய் நிலைத்து நிற்கிறது.
புன்னகை கொண்ட அந்த முகம் எனக்கு போதித்தது தான் இன்றைக்கும்
என்னை பெரும்பாலான நேரங்களில் தடுமாறாமல் நிலைக்க வைக்கிறது என்று சொன்னால்
மிகையாகாது.
எவ்வளவோ இக்கட்டான சூழலில் எங்களை வளர்த்தெடுத்தாலும்
என்றைக்கும் அவரின் புன்னகையை விட்டுக்கொடுத்ததில்லை. அவரின் கால் தூசுக்கு கூட
நானெல்லாம் சமமாக மாட்டேன். மற்றவர்களுக்கு உதவும் குணத்தில் நானாவது சில
தயக்கங்கள் கொண்டு தடுமாறுவேன், அவரோ யோசிக்காது உதவும் மிக சிறந்த மனம் கொண்டவர்.
இருந்தாலும் அவரிடம் இல்லாத ஒரு உறுதி என்னிடம் இருப்பதாக
நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்றாலும்
அதைப்பற்றி என்னை நன்கு அறிந்த உறவுகள் அறிவர்.
வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி தான் முக்கிய
உறவுகளை இழந்து தவிக்கும் நிலையை கடந்து வந்திருப்போம்.
இழப்புகள் சில நம்மை சோர்வடைய வைக்கலாம், சில நிம்மதியடைய
வைக்கலாம், சில நமது மனவுறுதியை கூட்டி இருக்கலாம், சில சொல்லமுடியாத குழப்பத்தில் ஆழ்த்தி சென்றிருக்கலாம்.
இழப்புகள் என்பது தவிர்க்க முடியாதது என்பதில் எந்த
மாற்றமுமில்லை. ஆனால் எதிர்பாராத நேரத்தில் வரும் இழப்புகள் நிச்சயம் நம்மை தடுமாற
வைத்துவிடும்.
எல்லா நிலையிலும் மெல்ல மெல்ல முன்னேறி வந்தாலும் வாழ்க்கை
பாடம் என்றைக்கும் எளிதானது இல்லையே. விட்டுக்கொடுத்தலும், தட்டிக்கொடுத்தலும், கொஞ்சம் விலகி இருத்தலும்
தான் மனதின் பாரத்தை அதிகரிக்காமல் வாழவைக்கும் முக்கிய குணம் என்பதை அதிலே நான்
படித்தேன்.
பெரும்பாலும் இதுபோன்ற நிலைகளில் நம்மை தூண்டி தூபம்
போடவென்றே சிலர் இருப்பர். அவர்களின் வார்த்தைகள் எல்லாம் மிகவும் சரியானது போலவே
இருக்கும், ஆனால் அவர்களின் வார்த்தைகளுக்கு நாம் செவிடர்களாக இருந்து விட்டால்
பிழைத்தோம், இல்லையெனில் அழிவுப்பாதையை தேர்ந்தெடுத்த ஈசலாகிப் போவும்.
கடினமான வாழ்க்கையின் பாடங்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ளும்
போது மிகமிக எளிதான ஒன்றாக மாறிப்போகிறதே அது பேரதிசயம்.
இன்னும் பயணிப்போம்..
என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக