வெள்ளி, 1 ஜனவரி, 2016

1. வாழ்க்கை

வலைவீசும் எண்ணங்கள்

1. வாழ்க்கை

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================

வாழ்க்கையின் அர்த்தமென்ன? அதன் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? வாழ்க்கை நிறைவேறுதல், வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு தமக்குள் திறமையிருக்கிறதா? என்று நம்மில் பலர் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்?

மனித சமுதாயத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அநேகர் ஈடுபடும் முயற்சிகளில் சில -   வியாபாரத்தில் வெற்றி, செல்வம் தேடுதல், நல்ல உறவை பராமரித்தல், பொழுதுபோக்கு, நற்காரியங்கள் செய்தல் மற்றும் பாலின காரியங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் போன்றவைகள். இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடைவது போல காணப்பட்டாலும், வாழ்க்கை என்பது  அதுமட்டுமா?... கண்டிப்பாக இல்லை.. இந்த  வானத்திற்கு கீழே நாம் படும்பாடுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல.. எல்லாமே ஒரு மாயை தான். எல்லாமே வெறுமை தான்.

வாழ்க்கை என்பது நம்முடைய அழுகையிலும் மற்றவர்களின் சிரிப்பிலும் ஆரம்பித்து நாம் இந்த உலக வாழ்வை விட்டுக் கடந்துபோகையில் எத்தனை உள்ளங்களை அழவைத்துப் போகப்போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது. ஆம்.. நாம்முடைய வாழ்க்கைப்பாதையில் எத்தனை எத்தனை உள்ளங்களுக்கு அமைதியும், சந்தோசமும், ஊக்கமும், ஆக்கமும், வழிகாட்டுதலும் தந்து அந்த மனங்களை கொள்ளைகொண்டு இந்த உலகத்தில் நம்முடைய  வாழ்க்கையையும் வாழ்ந்து பின் கடந்துபோகிறோம் என்பதில் தான் உண்மையான வாழ்வின் அர்த்தம் பொதிந்திருக்கிறது.

பல லட்சம் அணுக்களின் போராட்டத்தின் மூலம் தொடங்கும் நம்முடைய வாழ்க்கை பயணம் அனுதினமும் ஒரு போராட்டக்களத்தை கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது. அதுவும் இன்றைய சூழலில் போராட்டம் இல்லாத உயிரே இல்லை.

நமது வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகள் கொண்ட இந்த நிலையும் மாறும் என்ற ஏக்கம் கொண்ட சாதாரண வாழ்க்கை - இது அமுதா அக்கா ஒரு பதிவில் இட்டுள்ள கருத்தீட்டின் சாரம். எவ்வளவு எளிமையாய் வாழ்க்கையை சொல்லிவிட்டார்  பாருங்கள். நம்மில் பலருடைய வாழ்க்கையும் இப்படிதான் இருக்கிறது.

வாழ்க்கை என்பது திடீர் திருப்பங்களும், சுவாரசியமான நிகழ்வுகளும், எதிர்பாராத அதிர்ச்சிகளும், வருத்தங்களும், வேதனைகளும், வெற்றிகளும், தோல்விகளும், நகைச்சுவைகளும், கொண்டாட்டங்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த அடுத்து என்ன நிகழும் என்று அறிய முடியாத சுவாரசியமான ஒரு திகில் நாவலுக்கு இணையானது.

வாழ்க்கையில் நாம் ஒரு பட்டாம்பூச்சியாய் பறக்கிறோம். நமக்காக இந்த உலகில் தேனோடு பல பூக்களும், தேனின்றி நம்மை மயக்கும் வெற்று மலர்களும் மலர்ந்து காத்துக்கொண்டு இருக்கிறது. நாம் எந்த மலரில் அமர்ந்து தேன் எடுக்கப்போகிறோம் என்பதே நம் வாழ்வின் இன்பத்தையும், துன்பத்தையும் தீர்மானிக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு முகம்காட்டும் கண்ணாடி போன்றது. நீங்கள் எந்த முகம் கொண்டு வாழ்க்கையை  பார்க்கிறீர்களோ அந்த முகத்தையே உங்களுக்கு திருப்பிக்காட்டும். வாழ்க்கை நச்சுக்கொடிகள் மண்டிக்கிடக்கும் மோசமான பாலைக்காடோ அல்லது நறுமணங்களை நாளும் பரவவிடும் பூக்களின் நந்தவனமுமோ அல்ல. இரண்டும் கலந்திருக்கும் ஒரு அற்புதமான பயணப்பாதை மட்டுமே. நமக்கு என்ன தேவை என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம்.

இயற்கையானது நமக்கு வாழ்க்கையில் பல பற்றுக்கோள்களை தந்திருக்கும் அற்புதமான ஒன்றாகும். நாம் அந்த பற்றுக்கோளில் முதன்மையாக கொண்டிருப்பது கடவுள். நம்மில் அனைவரும் கடவுள் என்ற சொல்லை எப்படியாகிலும் உச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறோம். கடவுள் உண்டு என்று நினைபவர்கள் அவனுடைய பல நாமங்களை சொல்லியும், கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் தன்னம்பிக்கை என்ற அருவுருவில் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று பொத்தாம் பொதுவாக கடவுளை நினைத்தும் தங்கள் வாழ்க்கையை இந்த புவியில் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடவுளைத் தாண்டியும் இந்த மண்ணில் நாம் வாழ பல அழகான விசயங்கள் உண்டு.

உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரனாய் இருந்தாலும் ஒரு பயிற்சியாளர் தேவைப்படுகிறார். ஆனால் பயிற்சியாளர் அந்த வீரரை விட சிறந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் சிறந்த கண்காணிப்பாளராக இருக்கவேண்டும். வீரரின் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து தன் வீரரை வழி நடத்தினால் போதுமானது. நாமும் நமது வாழ்வில் நம்மைவிட மிகச்சிறந்த, நம்மைவிட மேன்மையான ஒரு நல்ல கண்காணிப்பாளரை கொண்டிருக்கிறோம். அதுவே கடவுளும், தன்நம்பிக்கையும்.

கடவுளை நம்புகிறவர்களுக்கு அவன் மேலான நம்பிக்கையும், அவனின் உபதேசங்களும் ஒரு பயிற்சியாளரின் வேலையை செய்கிறது. அப்படி எனில் கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதருக்கு யார் இருப்பர்ஏகலைவனுக்கு துரோணர் போல உலகின் மேன்மையான ஒருவரை உங்கள் மானசீக பயிற்சியாளராக கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கைப்பாதையை வென்றெடுங்கள்.

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையைத் தவிர வேறொரு அழகான வாழ்க்கை இல்லை என்பதை  மனதில் கொண்டு ஒருவன் தனது வாழ்க்கையை நேசிப்பதுதான் அவனது சாதனை அல்லது கடவுளைச் சென்றடையும் வழி. இருக்கும் வாழ்வை உண்மையாக ஏற்றுக்கொள்வதுதான் உத்தமம்.

நம்மை, நம் வாழ்வை சிறப்பிக்கும் பற்பல காரணிகள் நம்மைச் சுற்றி எங்கும் வியாப்பித்திருக்கிரது. வாழ்க்கை வாழ்வது என்பது நேற்றைய தினத்திலும் இல்லை, வரப்போகிற நாளைய தினத்திலும் இல்லை. இன்றே இப்பொழுதே வாழ்வது தான் நம் வாழ்க்கை. அடுத்த நொடி என்று ஒன்று நமக்கு இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. எனவே நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு இன்பமாய், அமைதியாய் வாழ நம்மை பழகிக்கொள்வோம். கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கையல்ல. கொடுத்தலும், பகிர்தலும், புரிந்துகொள்ளுதலும் தான் ஒரு இனிய வாழ்க்கை.

நம் தேவைகளை விரிவாக்கிக்கொள்ள நமக்கு தடையேதும் இல்லை. ஆனால் நம்முடைய விருப்பங்கள், ஆசைகள், தேவைகள் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க நாம் அனுமதிக்க கூடாது. ஏனென்றால் நாமும் அதே நம்பிக்கையில் தானே, விருப்பில் தானே இங்கே வாழ்கிறோம்.

நமக்கு நாளை என்ன பக்குவம் வருமோ அதை மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து பெற்று இன்று நாம் வாழ்க்கையை வாழ்வோம். என்றென்றும் நேர்மறை எண்ணங்கொண்டு இன்புற்று வாழ்வோம். அதுதான் இந்த உலகில் அனைவருக்கும் தேவையானதும் ஆகும்.

உலகில் எப்படி மாற்றம் என்பது நிரந்தரமோ அதுபோலவே வாழ்விலும் மாற்றங்களை நம்மால் மாற்றமுடியாது. நறுமணங்களை சுமந்து வரும் காற்று போல திசையின்றி, மனம் செல்லும் பாதையில் நல்ல எண்ணங்களுடன் நாமும் பயணம் செய்தால் வாழ்வு என்றும் இனிமை தானே...

இந்த உலகில் அச்சமின்றி வாழ்வது தான் வாழ்க்கை. அந்த அற்புதமான வாழ்க்கையை நாமும் பிறருக்கு அச்சம் எதுவும் அளிக்காமல் வாழ வழி செய்வதே ஒரு சிறந்த வாழ்க்கையாகும்.

பிறரை வாழவைத்து நீங்கள் வாழ வேண்டும் என்பதில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து பிறரையும் வாழ விடுங்கள். அதுவே இன்றைய நாளில் மிகச்சிறந்த வாழ்க்கை.

வாழ்தல் இனிது. அதிலும் பிறருக்கு உதவிசெய்து வாழ்தல் இனிதினும் இனிது.

ஓஷோ சொல்லுகிறார் “வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு. நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது. இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.””

இப்படியான  சுதந்திரத்தை நாம் வாழ்க்கையில் பயன்படுதிக்கொள்கிறோமா?

பெர்னார்ட்ஷா கூறுவது என்னவெனில், “சிறந்த நோக்கமென நீங்கள் நினைக்கும் ஒன்றிக்காக நீங்கள் பயன்படுத்தப்படுவது தான் உங்கள் வாழ்வின் உண்மையான அர்த்தம். நாம் வாழும்வரை நம்மால் கூடியமட்டும் அதற்காக உழைப்பது சிறந்ததும் நம் பாக்கியமும் ஆகும். நாம் பிரியும்போது அந்த சிறந்த நோக்கத்தில் முழுமையாக கலந்திருக்க வேண்டும். எவ்வளவு கடினமாக அந்த சிறந்த செயலுக்காக நாம் உழைக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நாம் இந்த பூமியில் வாழ்கிறோம். வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தியல்ல.. அது ஒரு சிறந்த தீப்பந்தம். இக்கணத்தில் அது நம் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் அதை நம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்லும் முன் அதை இன்னும் பிரகாசமாக்க மாற்றவேண்டும். நாம் மிகச்சிறந்ததை உருவாக்கிவிட்டுப் போவதன் மூலம் நமது வாழ்க்கை நமக்குப்பின்பும் உயிர்ப்புடன் இருக்கும்.

முடிவாக ஒன்று. வாழ்க்கையில் மகிழ்ச்சியை சென்றடைய என்று தனியாக வழிகள் எதுமில்லை. நாம் மகிழ்ச்சியாக வாழ்வது தான் அந்த வழி.

வாழ்க்கையின் மகிழ்ச்சி சின்ன சின்ன செய்கைகளில் இருக்கிறது. புரிந்துகொண்டு வாழ்க்கையை இனிமையாய் வாழ்வோம்.

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.



கருத்துகள் இல்லை: