வெள்ளி, 15 ஜனவரி, 2016

3.உப்பாய் இருங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

3.உப்பாய் இருங்கள்

அன்பு  தோழமைகளுக்கு வணக்கம். மீண்டும் வலைவீசும் எண்ணங்கள்  மூலம் இனிதான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் சந்திப்பதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் என் அன்பிற்கினிய உளம்கனிந்த பொங்கல்  திருநாள்  வாழ்த்துக்கள்.

இந்த உலகுக்கு நீங்கள் உப்பாய் இருங்கள். என்னடா இது எடுத்ததும் உப்பாய் இருக்கசொல்லுறேன்னு நினைக்கிறீங்களா? நீங்க நினைக்கற மாதிரி உப்பு ஒன்னும் சாதாரணமானது இல்லைங்க. பிரிட்டிஷ் ஆட்சியையே ஆட்டம் காண வச்சது தெரியும்மில்ல?

உப்பை நாம் சுய மரியாதையின் குறியீடாகவும், சுரணையின் குறியீடாகக் கண்டும் பழகியும் வந்திருக்கிறோம் என்பதை நன்கு அறிவோம். இந்த உணர்வு மக்களின் மன ஆழங்களில் வலுவாக வேரூன்றியுள்ள தன்மான உணர்வு. இதைத் தட்டி எழுப்பியதுதான் மகாத்மா காந்தியின் மேதைமை. அதைக்கொண்டு தானே அவர் வெள்ளையர் ஆட்சியை உப்பு சத்தியாகிரகம் மூலம் ரொம்பவே அசைத்துப் பார்த்தார்.

சரிங்க. அதுக்கு இப்ப என்னன்னு கேட்கறீங்களா? நாமும் உப்பின் குணத்தை நாமில் கொண்டு இருப்போம் நண்பர்களே... உப்பின் குணம் தான் என்ன? அது எங்கு சென்று சேருகிறதோ அந்த இடத்தில் எளிதாகக் கலந்து தன்னுடைய சுவை தருகிறது. உப்பானது தான் இருக்கும் இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் தன்னுடைய இருப்பை நேரிடையாக வெளிக்காட்டவில்லை என்றாலும், தன்னுடைய சுவை மூலம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இதில் நாம் எப்படி அதன் குணத்தை கொண்டிருப்பது. வாருங்கள் கொஞ்சம் பார்ப்போம்.

நீங்கள் ஒரு கூட்டத்தில் சென்றால் உப்பைப் போல அந்த கூட்டத்தில் கரைந்து விடுங்கள். தயக்கத்தில் எப்போதும் ஒதுங்கி நின்று உங்களின் வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள். கும்பலில் கலந்தால் நம்மை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது? உங்கள் சிறந்த குணத்தினாலும், சிறந்த பண்பினாலும், உங்களின் சிறந்த அறிவினாலும், உங்களின் சிறந்த திறமையினாலும், உங்களின் தனித்தன்மை கொண்ட செயலினாலும், உங்களின் கல்வியினாலும், உங்களின் சிறந்த நகைச்சுவை உணர்வினாலும், என் உங்களில் அறிவார்ந்த மௌனத்தாலும், இப்படி எப்படி வேண்டுமானாலும் உங்களை அங்கு வெளிப்படுத்தலாம். உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை தவறவிட்டுவிடாது அதைப் பயன்படுத்தி உங்களை இந்த உப்பைப் போல சுவையாக வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களை நீங்கள் நன்றாகச் செதுக்கி உங்கள் குணத்தை சீர்படுத்திக்கொண்டு, நீங்கள் இருந்தால் ஒரு நிகழ்வு சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனதில் நிலைநிறுத்துங்கள். நீங்கள் அங்கு  இல்லாதபட்சத்தில் “ ஆஹா.. அவர் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் சுவை பெற்றிருக்கும் என மற்றவர் நினைக்கும் வகையில் நீங்கள் ஒரு தவிக்க முடியாதவராக உங்களை  பண் படுத்திகொள்ளுங்கள். எப்படி உணவில் பலவகைப் பொருட்கள் பலவிதங்களில் கலந்து கண்ணைக் கவர்ந்தாலும் உப்பின்றி சுவை இல்லாது போகுமோ அதேபோல உங்களை நீங்கள் மற்றவர்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் நீங்கள் உங்களின் இருப்பை தலைவராய் இருந்து தான் காட்டவேண்டும் என்பதில்லை, ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாய் இருந்தாலும் இந்த உப்பைப்போல சுவைதரும் ஒருவராக மாற்றிக்கொள்ளலாம். உப்பு எப்படி நீரில் கலந்தால் நீரின் வடிவை பெறுகிறது, எப்படி உணவில் கலந்தால் சுவையாக மாறுகிறதோ, எப்படி ஒரு கிருமிநாசினியாய் இருக்கிறதோ அதுபோல நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு இந்த பூமியில் சிறப்படையுங்கள்.

உப்பானது ஒரு சிறந்த மின்கடத்தியும் கூட என்பது நாம் நன்கு அறிந்தது தான். சுத்தமான காய்ச்சிய நீர் கடத்தாது, ஆனால் உப்பு கலந்த நீர் சிறப்பாக மின்சாரம் கடத்தும். நாமும் இந்த உப்பை போல மற்றவர்களிடையே சிறப்பான, சரியான நடுநிலையாளராக, நல்ல உறவைப் பேணுபவராகவும், நல்ல உறவை மற்றவர்களுக்குள் வளர்பவராகவும் இருக்கலாமே?

விகடன் குழுமத்தின் ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும் வார்த்தைகள் இது : ‘‘பத்திரிகை ஆசிரியரா இருக்குறதுக்கு முதல் தகுதி என்ன தெரியுமா? சாம்பார்ல உப்பு மாதிரி இருக்கணும். சாம்பாரோட எந்தத் துளியை எடுத்து ருசிச்சாலும் அதுல உப்பு இருக்கணும். ஆனா, கண்ணுக்குத் தெரியக் கூடாது. பூசணிக்கா துண்டு மாதிரி தனியா நீட்டிண்டு தெரியணும்னு அவசியம் கிடையாது. ஒரு ஆசிரியர் தன்னையே பிரதானப்படுத்திக்கிறது - அந்தப் பத்திரிகைக்கு எந்த வகையிலும் நல்லது கிடையாது!’’. இந்த கருத்தையே நாம் கொஞ்சம் மாற்றிக்கொள்வோம். நாம் சிறந்தவராக இருக்க உணவில் கலக்கும் உப்பாய் இருப்போம்.

இதுபற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், ' நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது”. ஆம் நண்பர்களே நாம் நம்முடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை, சிறந்த திறமைகளை இழக்காதவரைக்கும் நாம் இந்த மண்ணில் போற்றப்படுவோம். எப்படி உப்பானது தன்னுடைய சுவை குன்றி சாரமற்றுப் போனால் மீண்டும் அதன் சுவை கொண்டுவருவது அரிதோ, அது போலவே நாம் நம்முடைய மாட்சிமையை இழந்தால் இந்த உலகத்தில் ஒதுக்கப்படுவோம்.

உப்பானது எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாய் வைக்கப் படுகிறதோ அந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது. ஆனால் அதில் சிறிதளவு தூசி கிடந்தாலும் உடனடியாக அதை குப்பையில் கொட்டி விடுவார்கள். சமையல் அறையில், சாப்பாட்டு மேசையில் என எல்லா இடத்திலும் மேன்மையான நிலையில் இருந்த உப்பு, தன்னிடத்தில் சிறிய தூசியை அனுமதிக்கும் பொழுது குப்பை தொட்டிக்கு செல்கின்றது, நாமும் நம்முடைய சிறந்த குணங்களை நம்மில் பாதுகாத்து அந்த உப்பைப்போல சிறப்புற்றிருப்போம்.

நம்மில் எல்லோரும் அறிந்த பழமொழி உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பானது நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக இயங்கும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய நம் உடம்பில் நீர் அதிகமாக வெளியேற அதை சமன்படுத்த தாகமெடுத்து நாம் அதிகப்படியான தண்ணீர் அருந்தவேண்டிய சூழல் உருவாகிறது. இந்த இடத்தில் உப்பு தவறுக்கு உதாரணமாக அல்லவா இருக்கிறது. நாம் உப்பின் குணத்தை கொண்டிருக்க தவறு செய்யலாமா? தவறு செய்பவர்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு உதாரணமாக அல்லவா இருக்க முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

நம்மில் பலர் உணராதிருக்கலாம். உப்பானது எதற்காக திருஷ்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தப்படுகிறது? எதற்காக நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தை உண்டாக்கினார்கள்? சில கோயில்களில் உப்பு வாங்கிக் கொட்டுவது எதற்காக? ‘பாவத்தைப் போக்குறோம்என்று சொல்லி கடலில் குளிப்பது?, கடல் நீரை தலையில அள்ளித் தெளிப்பது?, கடலோரத்தில் ஈமக்கிரியைகள் செய்வது?, கடற்கரைக்குச் சென்றால் கடலில் கால் நனைப்பது? இதற்கெல்லாம் காரணம் என்ன? யாரவது யோசித்தீர்களா? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கை என்று பலர் புறம் தள்ளிடுவார்கள். உண்மையில் அதற்குள் அறிவியல் இருக்கிறது. அந்த அறிவியல் ORA SCIENCE என்று சொல்வார்கள்.

நாம் அனைவரும் அறிந்தது தான் நேர்மறை எண்ணங்கள் (பாசிட்டிவ் எனர்ஜி), மற்றும் எதிர்மறை எண்ணங்கள் (நெகட்டிவ் எனர்ஜி). இவை இரண்டும் மனிதனின் குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. உங்களில் பெரும்பாலோனோர்க்கு தெரியாதது உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் தன்மை கொண்ட ஒரு பொருள். ஆம், அதனால் தான் நம் முன்னோர்கள் மேலே சொன்னவாறு உப்பு சார்ந்த செயல்களை மறைமுகமாக நம்மை செய்யத் தூண்டினார்கள். நீங்களும் மற்றவர்களின் எதிர்மறை சக்தியை நீக்கும் சிறந்த மனிதராக, அவர்களுக்கு உதவும் நல்ல மனிதராக இருங்கள். நீங்கள் உங்களை சார்ந்தவர்களுக்கு தேவையுள்ள, பயனுள்ள உப்பை போல இருங்கள்.


உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. நம் ஆன்மீக வாழ்விலும் உப்பானது முதற்படியாக உள்ளது. உப்பானது ஒரு நீண்ட பயணத்தை கடலிலிருந்து பூமினோக்கி பிரிந்து வருவது போல பாவங்களில் இருந்தும், தீமைகளில் இருந்தும், எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் நாமும் பிரிந்து நம்மை துய்மை படுத்தப்பட்ட உப்பைப் போல மாற்றிக்கொள்வோம். பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துசெல்லப்பட்டு கடலிலே உப்புதன்மையை நிறைப்பதை போல, ஆன்மீக வாழ்விலும் இறைவனிடைருந்து வந்த நாம் பாவ உலகில் இருந்து மீண்டு, மீண்டும் நமது தூய உருவை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு போலவே நமது ஆன்மீக வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

ஹோமர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் உப்பு தெய்வீகமானதுஎன்றும், தத்துவ ஞானியான பிளேட்டோ கடவுளுக்கு பிரியமானதுஎன்றும் கூறுவதை நாம் புறந்தள்ள இயலாது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது நம்முடைய மனதையும், வாழ்வை சிறப்பாகும்.

ஒன்றைப் புரிந்துக்கொள்ளுங்கள், உப்பு எப்போது முழுமை அடைகின்றதோ அப்போதே அது தன்னை இழக்க தயாராகின்றது. அது பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன்என்ற சொல்லாடல் ஒருவர் தான் பெற்ற நன்மையை நினைவுகூறும் வார்த்தைகளன்றி வேறென்ன?

உலகம் முழுவதும் உப்பு பல நிறங்களில் காணக்கிடைத்து மனிதனை ஒத்த அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது உப்பு எந்த நிறமாக இருந்தால் என்ன, அது தனது சுவை கொடுக்கும் தன்மையை இழக்கப்போவது இல்லை. நண்பர்களே நாமும் எந்த தேச வரைபடங்களில் பிரிந்து இருந்தாலும் அனைவரும் ஒருவரே என்ற உண்மையை மனதில் கொள்ளுவோம்.

விவேகானந்தர் சொல்லுகிறார், “ வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை”. நாம் வலிமை பெறுவோம். எவ்வளவு தான் துகளாக நசுக்கினாலும், நீரில் கரைத்தாலும் குணம் மாறாத உப்பைப்போல நாம் வலிமை பெறுவோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்என்ற வீரத்துறவியின் வார்த்தைகளை நம் மனதில் கொண்டு நம்மை கொஞ்சம் வலிமையோடு செதுக்கிக்கொள்வோம்.

உப்பை சம்பளமாக ரோம போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருக்கும்போது அதன் சிறப்பு புலப்படுகிறது: இன்றும் நாம் காண்பது, எல்லா கடைகளுக்கு முன்பதாக ஆதரவற்று இருக்கும் ஒரே பொருள் உப்பு தான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருக்கிறது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதுதான் இல்லையா?


நாம் விலையேறப்பெற்றவர்கள்; எனினும் நாம் எளிமையாய், அன்பை கண்ணீராலும், கடமையை வியர்வையாலும், தியாகத்தை இரத்தத்தாலும் அந்த உப்பின் சுவையுடன் கலந்து அளிப்பதால் நாம் இந்த உலகில் உப்பாய் இருக்கிறோம்.

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் சங்கர் நீதிமாணிக்கம்



கருத்துகள் இல்லை: