வெள்ளி, 1 ஜனவரி, 2016

எலி பிடிக்க பூனையாய் இரு

சாமுராய் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல தேசங்களை வென்றவன். மிகப்பெரிய
வீரன். ஒருநாள் தன் அரண்மணையில் உலாவிக்கொண்டிருக்கும்போது எலி ஒன்று சென்றது. உடனே அரசன் தன் உறைவாலை எடுத்து வீசினான். எலி தப்பித்து சென்று விட்டது.  மீண்டும் சில வால்களை எடுத்து எலியை நோக்கி வீசினான். அனைத்திலும்
தப்பிவிட்டது. சாமுராய்க்கு மனச்சோர்வு வந்துவிட்டது. தன்னையே அவன்  வெறுத்தான். மனதில் தாழ்வு மனப்பாண்மை தோன்றியது.


அரசனின் மனக்கவலையைக் கண்ட அரசி "அரசே! ஏதோ மனக்கவலையில் இருப்பது போல் தெரிகிறதே! தங்கள் மனக் கவலைக்கு என்ன காரணம் ?" என்று வினவினாள்.


"பல தேசங்களை நான் வென்றிருக்கின்றேன். அப்படிப்பட்ட என்னால் ஒரு எலியை
வீழ்த்த முடியவில்லை. இதை நினைத்துதான் மனக்கவலையாக இருக்கின்றது." என்றான். 

"மன்னா இதற்க்கு ஏன் கவலைப்படுகிறீர்கள்?. அது தன்னைக் காத்துக்கொள்ள
தப்பிக்கிறது. நீங்களோ அதனிடம் உங்கள் வீரத்தை நிரூபிக்க நினைக்கின்றீர்கள்!
தப்பிச் செல்வது எலியின் சுபாவமான திறன் ... இதற்க்காக கவலை கொள்ளாதீர்!.
வேன்டுமானால் ஒரு பூனையை விட்டால் பிடித்துவிடும்" என்றாள் அரசி.
 
மன்னன் மனம் தெளிந்தவனாய் ஒரு பூனையை கொண்டுவர உத்தரவிட்டார். இன்னொரு இராஜாவின் அரண்மணையிலிருந்து ஒரு திடகாத்திறமான பூனை ஒன்று கொண்டுவரப்பட்டது. பூனைக்கு விருந்து சிறப்பாக பறிமாறப்பட்டது. ஆனால், அந்தப்பூனையால் எலியைப் பிடிக்க முடியவில்லை.

ஒரு ஏழை வீட்டிலிருந்து ஒரு பூனை கொண்டுவரப்பட்டது. அதற்க்கும் விருந்து
உபசரிப்பு நிகழ்ந்தது. அந்தப் பூனையாலும் எலியைப் பிடிக்க முடியவில்லை.

மந்திரி சொன்னார் "மன்னா! எலியைப் பிடிக்க ..எலிபிடிக்கும் தந்திரம் தெரிந்த
பூனை வேண்டும். எனக்கு தெரிந்த குடியானவன் வீட்டில் அப்படி ஒரு பூனை எலியைப்
பிடித்து தின்பதைப் பார்த்தேன்." என்றார். உடனே அந்தப் பூனையை கொண்டு வருமாரு
மந்திரியை பணிந்தார் அரசர்.

மந்திரி பூனையிடம் சென்று "பூனையாரே! ஒருநாள் நீ எலியைப் பிடித்து
தின்பதைப்பார்த்தேன். அது எப்படி உன்னால் முடிகிறது?" என்று வினவினார்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எலி வந்தால் பிடித்து தின்பேன்.. அவ்வளவுதான்
எனக்குத் தெரிந்தது." என்று சொல்லி பூனை கண்களை மூடிக்கொண்டது.
"சரி, அதன் தந்திரம்தான் என்ன?" என்று கேட்டார்.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு எலிபிடிக்கும் உண்ணுவேன். பூச்சியினங்கள்
பிடிக்கும்.. உண்ணுவேன். தேள் பூரான் பாம்பும் கூட பிடிக்கும், உண்ணுவேன்.
அவ்வளவுதான். தந்திரம் பற்றி எதுவும் தெரியாது." என்றுமறுபடியும் கண்களை
மூடிக்கொண்டது பூனை.
"சரி. அரண்மணையில் எலி ஒன்று உள்ளது. என்னுடன் வருகிறாயா? " என்று கேட்டார்.
"பிடிக்கும் எலி எனக்கே தருவதாக இருந்தால் வருகிறேன்" என்று பூனை சொன்னது.
"சரி" என்று வாக்குறுதி கொடுத்ததும் உடன் சென்றது பூனை.

இந்தப் பூனைக்கும் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. ஆனால் பூனை உண்ணவில்லை. எலியைத் தேடித் தேடிச் சென்று எலியுடன் வந்தது. மன்னருக்கு ஆச்சர்யம். மற்றஅனைவருக்கும் ஆச்சர்யம். மற்ற இரண்டு பூனைகளுக்கும் கூட ஆச்சர்யம். ஒரு பூனைக் கேட்டது "உன்னால் மட்டும் எப்படி எலியை பிடிக்க முடிந்தது." என்று .. ,"நீ! முதலில் பூனையாக இரு! அப்புறம் எலியைப் பிடிக்கச் செல்!" என்று
சொல்லி எலியைத் தின்ன துவங்கியது குடியானவன் பூனை.

நாமும் இப்படித்தான் இருக்கின்றோம். இராஜாவாக இருந்துகொண்டு பூனையின் செயலை செய்கின்றோம். உலகில் அனைத்து ஜீவராசிகளும் அதனதன் குணத்துடன் இருக்கின்றன. மனிதனான நாம் மட்டும்தான் மனிதனாக இல்லாமல் பாம்பைப் போல சீறவும், நாயைப் போல குரைக்கவும், தேளைப் போல கொட்டவும் பேயைப்போல கத்தவும் செய்கின்றோம். விலங்குகள், தான் ஒரு விலங்கு என்று தெரியாமலேயே அந்த விலங்காகவே இருக்கின்றன். மனிதன், தான் மனிதன் என்று தெரிந்தும் மனிதனாக இருப்பதில் சிரமப்படுகிறான்.

மனிதன் என்றால் (மனம்+இதன்) மனதினை இதமாக வைத்துக் கொண்டிருப்பவன் , என்று முன்னோர்கள் பொருள் சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலோனோர் அப்படி இருப்பதாக தெரியவில்லை. பூனை பூனையாக இருப்பதால்தான் எலியைப் பிடிக்க முடிகிறது. நாமும் மனதினை இதமாக வைத்திருக்க பழக்கி மனிதனாக வாழ்வோம். அனைவரையும் மனிதனாக வாழ வைப்போம்.

கருத்துகள் இல்லை: