ஞாயிறு, 10 ஜனவரி, 2016

உலகம் அனுபவம்

ஓர் ஊரில் ஓர் அரசர் இருந்தார். அவர் நல்ல கலைவாணர்களை ஆதரித்து வந்தார். கவிஞர்களுக்குப் பரிசுகள் அளித்து அவர்களுக்கு உற்சாகமளித்து வந்தார். அவருடைய புகழ் கேட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்து நாள்தோறும் கலைஞர்களும், கவிஞர்களும், அறிவில் சிறந்த பெரியோர்களும் வந்து தங்கள் திறமைகளைக் காட்டிப் பரிசுகள் பெற்றுச் சென்றனர்.

ஒருநாள் ஐந்து பெரும் புலவர்கள் அவருடைய அரசவைக்கு வந்தனர். அவர்களில் ஒரு தருக்க நூலைக் கரைத்துக் குடித்த மிகப் பெரிய தருக்கவாதி. தருக்க சாஸ்திரத்தில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் கிடையாது.

மற்றொருவர் வியாகரணம் என்ற வடமொழி நூலில் மிகுந்த புலமை பெற்றவர். வடமொழி இலக்கணம், இலக்கியம் முதலிய பல துறைகளிலும் நன்கு பயின்றவர். மூன்றாமவர் சோதிடக் கலையின் வல்லவர். நான்காமவரோ இசைக் கலையிலும் நாட்டியக் கலையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றவர். ஐந்தாமவர் மருத்துவக் கலையில் வல்லவர். இவர்கள் ஐந்து பேரும் அந்த அரசனிடம் தங்கள் திறமைகளைக் காட்டினார்.

அவர்களுடைய திறமைகளைக் கண்டு வியந்த மன்னர் "உண்மையிலேயே இவர்கள் சிறந்த மேதைகள் தான்' என்ற தீர்மானத்துக்கு வந்தார். எனினும் அவர்கள் ஐவரும் கல்வி அறிவுடன் உலக அறிவும் பெற்றிருக்கிறார்களா? என்று அவர்களைச் சோதிக்க எண்ணினார்.

""உங்கள் திறமையை மெச்சினேன். நீங்கள் ஐவரும் இன்று இவ்வூரில் தங்கியிருந்து நாளை வாருங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் ஐவரும் ஒன்றாகத் தங்கியிருந்து நீங்களே சமைத்துச் சாப்பிட்டு விட்டு வர வேண்டும்,'' என்றார் அரசர்.

பண்டிதர் ஐவரும் சென்றதும் அவர்களைக் கண்காணிக்கச் சில ஒற்றர்களை அவர்கள் பின்னால் அனுப்பினார் அரசர். ஐவரில் நாட்டியக்கலை வல்லுனர் சமையல் செய்யும் வேலையை மேற்கொண்டார். தருக்க நூலில் பாண்டித்தியம் பெற்றவர் நெய்வாங்கி வரக் கடைத்தெருவுக்குச் சென்றார். இலக்கணப் பண்டிதர் தயிர் வாங்கச் சென்றார். சோதிட நூல் வல்லுனர் இலை பறித்துவரச் சென்றார். வைத்தியர் காய்கறி வாங்கிவர கடைத் தெருவுக்குச் சென்றார்.

நாட்டியக்கலை நிபுணர் அடுப்பில் உலை வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டு பாட ஆரம்பித்து விட்டார். உலை நீர் கொதிக்கும்போது "தளதள' வென்ற சப்தம் கேட்டது. அதற்குத் தக்கவாறு நாட்டியக்கலை நிபுணர் தொடையில் தாளம் போட ஆரம்பித்தார். அவருடைய தாளத்துக்கும் கொதிக்கும் உலைநீர் ஓசைக்கும் ஒத்து வரவில்லை. உடனே, கோபமடைந்து உலைப் பானையைத் தூக்கித் தொப்பென்று தரையில் உடைத்து விட்டார்.

நெய் வாங்கச் சென்ற தருக்க நூல் பண்டிதர் தொன்னையில் நெய் வாங்கிக் கொண்டு வரும்போது அவருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது.

"தொன்னைக்கு நெய் ஆதாரமா அல்லது நெய்க்குத் தொன்னை ஆதாரமா?' என்று.

வெகுநேரம் ஆராய்ச்சி செய்து பார்த்த அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியில் சோதனை செய்துதான் பார்த்துவிடுவோமே! என்று தீர்மானித்தவராய் தொன்னையைக் கவிழ்த்துப் பார்த்தார். நெய் பூராவும் தரையில் கொட்டி மண்ணோடு கலந்து விட்டது. "இப்போதுதான் புரிந்தது. தொன்னைக்கு நெய் ஆதாரமில்லை. நெய்க்குத்தான் தொன்னை ஆதாரம். ஆஹா! எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன்' என்று மகிழ்ந்தவாறே வெறும் கையுடன் திரும்பினார் தருக்க நூல் பண்டிதர்.

தயிர் வாங்கச் சென்ற இலக்கணப் பண்டிதர் தயிர்க்காரி "தயிரோ.....ஓ....தயிர்' என்று நீட்டி முழக்கிக் கூவிக்கொண்டு வருவதைக் கண்டார்.

இதைக் கேட்டதும் அவருக்குக் கோபம் வந்து விட்டது. தயிர்க்காரி இலக்கணத்தை மீறி இலக்கணப் பிழையுடன் கூவியது அவருக்குப் பிடிக்கவில்லை. தாம் வந்த காரியத்தை மறந்துவிட்டுத் தயிர்க்காரியுடன் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

""தயிரோ என்பதில் வரும் கடைசி, "' காரத்துக்கு இலக்கண வரம்பை மீறிப் பத்து மாத்திரையளவு நீட்டிக் கூறலாமா? இரண்டு மாத்திரையளவு தானே நீட்டிக் கூற வேண்டும்,'' என்று தயிர்க்காரியுடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

""எனக்கு இலக்கணம் கிலக்கணம் எதுவும் தெரியாது. சம்மதமிருந்தால் தயிர் வாங்கு இல்லாவிட்டால் போய்யா!'' என்றாள் தயிர்க்காரி.

இலக்கணப் பண்டிதர் தயிர்க்காரியிடம் போட்ட சண்டையில் வந்த காரியத்தை மறந்து விட்டுத் தயிர் வாங்காமலேயே வீடு திரும்பினார்.

சோதிட நூல் வல்லுனர் இலை பறிப்பதற்காக ஒரு மரத்தில் ஏறினார். பாதி மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது மரத்தில் இருந்த பல்லி ஒன்று "கீச்கீச்' என்றது.

இதைக் கேட்ட சோதிடப் புலவர் மேற்கொண்டு மரத்தில் ஏறாமல் அப்போது பல்லி சொன்ன பலனை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்.

நீண்ட நேரம் கணக்குப்போட்டுப் பார்த்த சோதிடப்புலவர், தாம் மேற்கொண்டு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பல்லி சொன்ன பலன் சரியில்லை என்பதை அறிந்துக் கொண்டார். இதன் காரணமாக மேலே ஏறாமலும் கீழே இறங்காமலும் பாதி மரத்திலேயே தொத்திக் கொண்டிருந்தார்.

இப்போது காய்கறி வாங்கச் சென்ற மருத்துவரைப் பார்ப்போம். கடைத்தெருவுக்குச் சென்ற மருத்துவர் ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து அதன் குண நலன்களை ஆராய்ச்சி செய்து, அது வாயுவைத் தரும், இது சூட்டைத்தரும், இது குளிர்ச்சியைத் தரும் என்று எல்லாவற்றையும் ஒதுக்கிட்டு வீடு திரும்பினார்.


இந்த ஐந்து பண்டிதர்களையும் பின்தொடர்ந்து சென்ற ஒற்றர்கள் அவர்கள் செய்தவைகளைப் பற்றி ஒன்று விடாமல் அரசரிடம் கூறினர். ஒற்றர்கள் கூறியதைக் கேட்ட மன்னர், "அவர்கள் வெறும் ஏட்டுப் படிப்புத்தான் படித்திருக்கின்றனர். உலகம் அனுபவம் துளிக்கூட கிடையாது' என்பதை உணர்ந்தார்.

கருத்துகள் இல்லை: