ஞாயிறு, 10 ஜனவரி, 2016

2. நீங்களே சிறந்தவர்

அன்பு  தோழமைகளுக்கு வணக்கம். மீண்டும் வலைவீசும் எண்ணங்கள்  மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.


நீங்களே சிறந்தவர்.. உண்மைதான். உங்களை விட சிறந்தவர் யாருமில்லை. இந்த எண்ணம் என்றாவது உங்களுக்கு மனதில் தோன்றியதுண்டா? எப்படி நீங்கள் சிறந்தவராக  இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? உங்களின் பிறப்பே நீங்கள் சிறந்தவாராக இருப்பதால் தான் நிகழ்ந்துள்ளது. பல மில்லியன் அணுக்களுடனான போட்டியில் வென்றதனால் தான் நீங்கள் இந்த உலகில் உயிராக பிரவேசித்தீர்கள். அப்படிப்பட்ட சிறந்த உங்களை நீங்களே என்றாவது சிறப்பாக உணர்ந்ததுண்டா? வேதனைகளும், சோதனைகளும், உங்களை தாக்கும்போது நீங்கள் இதுபற்றி சிந்தித்தது உண்டா?. நம்மால் முடியாது என்று சோர்ந்து அமரும்போது இது பற்றி சிந்தித்தது உண்டா?


உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். உங்களை விட சிறந்தவர் யாருமில்லை. வாழ்க்கை நமக்கு பல வழிகளில் சோதனை தந்தாலும் அதில் எல்லாம் வெல்லும் திறமை அனைத்தும் நம்மில் மறைந்தே உள்ளது. அனுமனுக்கு அவனுடைய சக்தி தெரியாதாம். சாபத்தில் மறந்து போனதாம். பிறர் அதை அனுமனுக்கு நினைவூட்ட அனுமனின் சக்தி அவனக்கு தெரிவது புராணம். உங்கள் சக்தியும், உங்கள் சிறப்பும் உங்களிடமே மறைந்துள்ளது. நினைவு கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களை சீராக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தன்னம்பிக்கையை பெருக்கிக்கொள்ளுங்கள். “உங்களால் எல்லாம் முடியும்”, “உங்களுக்கு சாத்தியப்படாதது ஒன்றுமில்லை என்ற மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் வெல்ல நீங்கள் நல்லவராக மட்டுமல்ல வல்லவராகவும் இருக்கவேண்டும். நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல உங்கள் கடின உழைப்பு மட்டுமல்ல, உங்கள் திட்டமிட்ட உழைப்பும் வேண்டும். உங்கள் திட்டமிட்ட உழைப்பு உங்கள் குறிக்கோளை நோக்கியதாக இருக்கட்டும். “ செய்யப்படக்கூடாத ஒரு விஷயத்தை அதிகத் திறமையுடன் செய்வதைக் காட்டிலும் பயனற்றச் செயல் ஏதுமில்லை என்று பீட்டர் டிரக்கர் என்பவர்  கூறுகிறார்.

நீங்கள் கும்பலில் ஒருவராக இருந்து காலம் காலத்தை கடத்த என்றும் நினைக்காதீர்கள். நீங்கள் இருக்கும் குழுவில் சிறந்தவராக ஒருவராக இருக்க முயற்சி செய்யுங்கள். உலகின் சிறந்தவாரான நீங்கள் ஏன் எல்லோரும் செல்லும் வழியில் பயணப்பட்டு அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். நீங்கள் சிறந்தவர் என்ற நம்பிக்கை எப்போது உங்கள் மனதில் நிலைகிறதோ அப்போது உங்கள் பயணம் மாறுபட்டு புதியதாய் இருக்கும். உங்களை நீங்களே அறிந்துகொள்ளுங்கள். அதுவரை உங்கள் சிறப்பு உங்களுக்கு புரியாது.


ஒரு சின்ன கதை. உங்களில் பெரும்பாலோர் படித்திருக்கலாம். ஒரு எலி தன்னுடைய மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டி ஒரு முனிவரிடம் சென்று அவரை சிறந்த மாப்பிள்ளையை பரிந்துரைக்க சொன்னது. முனிவர் நான் அறிந்தவகையில் சூரியனே சிறந்தவன், பலவான். அவனை உன் மகளுக்கு மணமுடித்து வை என்று வாழிகாட்டினார்.

அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்ட எலி சூரியனிடம் சென்று மிகவும் சிறந்தவனே, பலசாலியே நீ என் மகளை திருமணம் செய்துகொள் என்று வேண்டிக்கொண்டது. சூரியனோ நான் உகந்தவன் அல்ல. என்னையே அந்த மேகம் மறைத்துவிடுகிறான். அவனே சிறந்தவன், அவனே பலசாலி. அவனை மணமுடித்து வை என்றது.

எலி மேகத்திடம் கேட்க, மேகமோ நான் செல்லும்போது என்னையே வழிமறித்து, என்னையே கலைத்துப் போடும் திறன் பெற்றது அதோ அங்கே ஓங்கி நிற்கும் அந்த மலை. உன் மகளை அதற்கு திருமணம் செய்துவை. நன்றாக வாழ்வாள் என்றது.

எலி பின்னர் மலையிடம் சென்று உலகில் சிறந்தவனே, பலவானே நீ என் மகளை திருமணம் செய்துகொள்வாயா? என்று வேண்டியது. அது கண்டு வெடித்து குலுங்கிக்குலுங்கிச் சிரித்தது மலை. இதனால் கோபம் கொண்ட எலி மலையைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது? எலியாரே.. நீர் என்னை சிறந்தவன், பலசாலி என்று சொல்லி உன் மகளை திருமணம் செய்துகொள்ள சொல்கிறாய். ஆனால், என்னையே குடாய்த்து என்னை பலவீனனாக்குபவன் ஒருவன் இருக்கிறான். அவன் கொடுக்கும் குடைச்சலை என்னால் தாங்க முடியவில்லை. நீ உன் மகளை அவனுக்கே திருமணம் செய்து கொடு. நலமாய் வாழ்வால் என்று சொன்னது. அது கேட்ட எலி யார் அந்த சிறந்த பலசாலி என்று கேட்க, மலை சொல்லிய பதிலைகேட்ட எலி வெட்கப்பட்டு நின்றது. மலை யாரை சொல்லியது என்று நினைக்கிறீர்கள்? மலையை குடைந்து அதற்கு குடைச்சல் தருவது ஒரு எலி தானே?

தன் பலத்தை, தன் சிறப்பை இந்த எலி போலவே நம்மில் பலர் அறிவதில்லை. அறிந்துகொள்ளுங்கள் நட்புக்களே.. உங்களை விட சிறந்தவர் இந்த உலகத்தில் யாருமில்லை. நீங்களே சிறந்தவர்கள். நீங்களே உயர்ந்தவர்கள். உங்களால் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்றால் வேறு யாரால் முடியும்? நம்புங்கள் சிறந்தவர்களே? வாழ்க்கை என்றும் இனிதானதே.

நீங்கள் பேசும் பேச்சுக்கள் மற்றவர்களை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சிறந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றவர்களின் நல்லதுக்காக தான் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் கருத்துக்களை மற்றவர் மனம் புண்படும்படியாக நேரிடையாக ஒருபோதும் சொல்லவேண்டாம். மனிதர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் அல்லர். அவர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். நீங்கள் வெளிப்படையாக சொல்லும் கருத்தை அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்கொண்டு மனம் வெதும்புவார்கள்.

அப்படி என்றால் உண்மையான, தேவையான நல்ல கருத்துக்களை எப்படி நாம் சொல்லுவது. இருக்கவே இருக்கிறது நம் முன்னோர்களின் மருந்துக்குழம்பு. எப்படி? எந்த மருந்தையும் நேரிடையாக எடுத்துக்கொள்ள நம்மில் பலர் விரும்புவதில்லை. அதனாலேயே நம்முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள பொருட்களை குழம்பில் கலந்து சுவைபட பரிமாறுவார்கள். சுவைக்கு சுவையும் ஆச்சு, மருந்தும் உடம்பில் கலக்கும். இந்த வழி தான் நாம் மற்றவர்களுக்கு நம் கருத்தை சொல்ல சிறந்த வழி.

உங்கள் முயற்சிகள் வெற்றிபெறாமல் உங்களை சோர்வடைய வைக்கும் போது “இன்னும் கொஞ்சம் என்று சொல்லி முன்னேறுங்கள். ஏனெனில் பெரும்பாலானவர்களின் வெற்றி அடுத்தப்படியில் இருக்கும்போது அவர்கள் சோர்ந்து போய் இந்தப்படியிலேயே தங்கள் முயற்சியை முடித்துக்கொண்டு தங்கள் வெற்றிக்கனியை தவற விட்டுவிடுகிறார்கள்.

உங்கள் மனம் தான் உங்களின் சக்தி. உங்கள் மனோபலத்தை நீங்கள் என்றும் இழந்துவிட வேண்டாம். வெற்றிக்கான பயணத்தில் உங்கள் மனோபலம் மிக அதிக அளவில் சோதிக்கப்படும். பலவீனமான மனதிற்கு வெற்றி நெருங்காமல் விளையாடும். நீங்கள் சிறந்தவர் எனில் காத்திருக்க வேண்டும். காத்திருத்தல் அவசியம் என்பது உண்மையாயிருக்கும்போது ஏன் மன அமைதியின்றி இருக்க வேண்டும். உணவுக்காக உணவகத்தில் காத்திருக்கும்போது மனஅமைதி இழந்தால் உணவு சுவைக்காது. நீங்கள் கொடுத்த ஆணைப்படி உணவு கட்டாயம் உங்களுக்கு பரிமாறப்படும் என்னும்போது நீங்கள் மனஅமைதியின்றி இருப்பது எப்படி சரியாகும். உங்களுக்கு விதிக்கப்பட்ட வெற்றியும் அதுபோன்றது தான். நீங்கள் மன அமைதியோடு உங்கள் வெற்றிக்கு உழைத்துக்கொண்டிருங்கள். உழைத்துக்கொண்டே வெற்றிக்காக காத்திருங்கள்.


உலகின் சிறந்தவரே.. கொஞ்சம் சிந்தியுங்கள். நீங்கள் தான் மிகச்சிறந்தவர். நீங்கள் தான் மகாபலசாலி. நீங்கள் தான் மனோதிடம் மிக்கவர். நீங்கள் தான் சிறப்பாக உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துபவர். நீங்கள் தான் மிக அமைதியாக இயல்பாக வெற்றியை எதிர்கொள்பவர். நீங்கள் தான் மிகச்சிறந்தவர். உங்களை நீங்கள் நம்புங்கள். எல்லாம் இனிமையாகும். ஒரு இத்தாலியப் பழமொழி இப்படி சொல்லுகிறது உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகளைப் போலவே உங்கள் துயரங்கள் அனைத்தும் விரைவில் மறைந்து போகட்டும். உங்கள் மனவுறுதி இப்படியான புத்தாண்டு வாக்குறுதி போல இல்லாமல் என்றும் நிலைத்து நிற்கட்டும்.


இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் – சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: