வலைவீசும் எண்ணங்கள்
4. விட்டுக்கொடுத்தலும், அனுசரணையும்
அன்பு
தோழமைகளுக்கு வணக்கம். வலைவீசும் எண்ணங்கள் தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில்
மகிழ்ச்சி.
அன்றாட வேலைகளில் நாம் பலரையும் பலவிதங்களில் அனுசரித்து
போவதினாலும், பல இடங்களில் பல காரியங்களில், பல நேரங்களில் விட்டுக்கொடுத்து
போவதினாலும் பல்வேறு பிரச்சனைகளை பெரிதாக வளராவிடாமல் சிறிதாய் இருக்கையிலேயே
தீர்த்துவிட முடிகிறது. விட்டுக்கொடுத்தலும், அனுசரனையும் நமது அடிப்படையான அகக்குணமாய்
இருப்பதை நீங்கள் அறிவீர்களா?... எப்படி....?
நம்முடன் நட்பாய் இருக்கும் ஒருவரிடம் காணும்
நமக்கு பிடிக்காத குணத்துக்காக நாம் அவரை சட்டென விலகிவிடுகிறோமா? இல்லையே.!
அவர்களிடம் இருக்கும் பல நல்ல குணத்துக்காக அந்த பிடிக்காத ஒரு குணத்தை நாம்
அனுசரித்து, ஒருசில காரியங்களுக்காக விட்டுக்கொடுத்தும் நட்பை தொடர்வதில்லையா?
வெளியிடங்களுக்கு தினந்தோறும் வேலை காரணமாக செல்கிறோம்.
அங்கெல்லாம் நாம் பல விதிகளையும் அனுசரித்து போவதில்லையா? நம்மை வெறுப்பேற்றும்
பாவனையில் செல்லும் பலரின் செயல்களை அனுசரித்து, விட்டுக்கொடுத்து போவதில்லையா? ஒரு
பொதுவாகனத்தில் பயணிக்கிறோம். யாரென்றே அறியாத, தெரியாத சகபயணிகளோடு நாம்
அனுசரித்து பயணிப்பதில்லையா?
அலுவலகத்தில் வேலை செய்கிறோம். சகபணியாளர்களோடு தினந்தோறும்
நம்முடைய வேலைகளில் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நமது பணிகளை தொடர்கிறோமா?
இல்லையா? அலுவலக வேலையாக வரும் பல வெளிநபர்களிடம் முகம் மலர, நட்புணர்வோடு
அனுசரித்து பேச முடிகிறதல்லவா?
பல இடங்களில் பல தெரியாத நபர்களுடன், பல
சம்பவங்களில், பல நாட்களில் நாம் பலவாறாக அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நம்
வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால் முக்கியமாக அனுசரிக்கவும், விட்டுக்கொடுக்கவும்
வேண்டிய இடத்தில் இந்த குணத்தை நாம் மறந்துவிட்டு ஏன் அல்லல்படுகிறோம்?
நம்முடைய வாழ்வில் விட்டுக்கொடுக்கும் பழக்கத்தையும்,
அனுசரித்து போகும் குணத்தையும் பின்பற்றினால் எந்நாளும் வாழ்வில் இனிமையான நாள்
தான். பைபிளில் வரும் ஒரு கருத்து “உன்னோடே
சண்டையிட்டு உன் ஆடையை ஒருவன் எடுத்துக் கொள்ளவிரும்பினால் அவனுக்கு உன்
அங்கியையும் கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் பலவந்தம் பண்ணினால், அவனோடு
இரண்டு மைல் தூரம் போ.” இந்த கருத்தை நம்மால் வெளியிடங்களில் எந்த
அளவுக்கு பின்பற்றமுடியும் என்று தெரியவில்லை, ஆனால் எல்லோரும் நிச்சயமாக,
கண்டிப்பாக இதை பிற்றக்கூடிய இடம் ஒன்று இருக்கிறது.
என்ன??? அந்த இடம் எது? எந்த இடத்தில் இந்த
குணத்தை நாம் மறக்கிறோம், மறுக்கிறோம்? யோசிக்கிறீர்களா! தோழமைகளே..
நம் இல்லம் தான் அந்த இடம். ஒரு கணம் யோசித்து
விட்டுக்கொடுத்தும், அனுசரித்தும் போனால் காலமெல்லாம் இன்பமான, கனிவான வாழ்க்கை
நமக்கு கிடைக்குமே? இன்பமயமாக இருக்க வேண்டிய நம் இல்லத்தில், வாழும் காலமுழுவதும்
நம்மோடு இருக்கப்போகிற துணைகளிடம் ஏன் நம்மால் பெரும்பாலான நேரங்களில் விட்டுக்கொடுத்து,
அனுசரித்து போக முடிவதில்லை? என்றாவது யாரவது கொஞ்சம் யோசித்தது உண்டா? நம்மில்
பலரும் இந்த காரியத்தில் அலட்சியமாக இருக்க காரணம் என்ன? இதனால் குடும்பத்தில்
அமைதியின்மையும், சில நேரங்களில் கணவன் மனைவி பிரிவும் ஏற்படுகிறதே?
குடும்பம் என்பது நம் உடமை என்ற அலட்சியமா? குடும்பத்தினர்
நம் உறவு என்ற இறுமாப்பா? தான் என்ற அகங்காரமா(EGO)? எந்த காரணங்களை
சொன்னாலும் அது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கமுடியும்.
வெளியிடங்களில் யார்யாருடனோ விட்டுக்கொடுத்து அனுசரணையாக போகமுடியும் என்னும்போது
எப்படி நம்மால் நம் எழிலான வீட்டிலும் அனுசரணையோடு விட்டுக்கொடுத்து போகாமல்
இருக்கமுடியும்? இது ஒரு குற்றச்சாட்டு அல்ல. ஒரு ஆதங்கம் மட்டுமே. புன்னகையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்க வேண்டிய இல்லத்தில் சின்ன சின்ன அனுசரிப்புகளும், புரிதலோடு
கூடிய விட்டுக்கொடுத்தலும் இல்லமால் நம் அழகான வாழ்க்கையை நரகமாக நம்மில் பலர்
மாற்றுகிறோம்.
ஒரு திருமணம் மூலம் கணவன் மனைவி மட்டுமல்ல... இருவேறு
மனம் கொண்ட குடும்பங்களும் இணைகின்றன. அப்படி இருக்கும்போது ஒருவருக்கொருவர்
அனுசரித்து, சில விசயங்களில் விட்டுக்கொடுத்து அன்பால் இணையும்போது அந்ததிருமணம்
மூலம் இணையும் தம்பதியரும் சரி, குடும்பமும் சரி என்றும் மகிழ்ந்திருக்கும்.
நமது வாழ்க்கையானது திருமணத்திற்கு முன்பும் சரி, பிறகும்
சரி இன்பமாக அமைய வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை எப்படி இருக்கிறதோ, அதை
அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். அதுதான் நம்முடைய மகிழ்ச்சியில் விரிசல்கள்
விழாமல் காக்கும் நற்பண்பு. நமது வாழ்க்கை அன்பு, காதல் என்று மனம் சார்ந்தது தொடங்குகிறது.
ஆரமபத்தில் பலவிசயங்களில் நாம் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து இன்பமாய் வாழும்போது
ஏன் சிலகாலம் கழித்து இந்த அனுசரிப்பு இல்லாமல் மறைகிறது. முக்கிய காரணமாய் நான்
எண்ணுவது எதிர்பார்ப்புகள் மட்டுமே.
வெளியிடங்களில் நாம் யாரிடமும் எந்த
எதிர்பார்ப்பும் கொண்டு நம் செயல்களை தொடர்ந்து செய்வதில்லை. ஆனால் குடும்ப
வாழ்க்கையில், வாழ்வு தொடங்கும் போதிலிருந்தே இருக்கும் எதிர்பார்ப்புகள் முதலில்
ஒருவர் மீது ஒருவர் கொண்ட உடல் சார்ந்த ஈர்ப்பினால் அனுசரித்துப்போகிறது. நாட்கள்
செல்லச்செல்ல உள்ளம் சார்ந்த, உடல் சார்ந்த ஈர்ப்புகள் குறையும்போது
எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மெல்ல மெல்ல தலையெடுக்கிறது. இப்படி சிறு மனவேறுபாடுகள் தலையெடுக்கும்போதே
அன்புடன் பேசி புரிதலோடு களையெடுக்கப்படவில்லை என்னும்போது இந்த அனுசரிப்பு குறைகிறது.
அதுவே பின்னர் ஒருவர் மீது ஒருவருக்கு அலட்சியத்தை உருவாகிறது.
எப்படி இல்லம் இனிமைபெற இந்த குறைகளை நீக்குவது?
எளிது.. நம் துணையின் சின்னசின்ன தவறுகளை ஏற்றுக் கொண்டு அதில் உள்ள குறைகளை போக்க
அன்பாய் பேசி தீர்க்கவேண்டும். தவறுகள் செய்யாத மனிதர்கள் யார்தான்
இருக்கிறார்கள்? குடும்பம் என்றால் அவ்வப்போது இதுபோன்ற சண்டைகள் வரும் போகும்.
நாம் தான் நல்ல புரிதலோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இதை தீர்க்க வேண்டும்.
இந்த
அனுசரணையும், விட்டுக்கொடுத்தாலும் எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும்
சரியா? குடும்பத்த்தில் எல்லோடும் நம் உறவினர்கள் என்ற முறையில் நம்
தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படாதவரையில் எவ்வளவு வேண்டுமானாலும் அனுசரித்து போகலாம்.
தப்பில்லை. ஆனால், வெளியிடங்களில்???
எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? நாம்
குட்டக்குட்டக் குனிந்துகொண்டே இருந்தால் நம்மை ஏமாளியாக்கி நம்மையே
அழித்துவிடுவார்கள். சரி அந்த எல்லை என்பது எதுவரை? அதை நாம் தான் தீர்மானிக்க
வேண்டும். எந்த எல்லைவரை விட்டுக்கொடுத்து, அனுசரித்து போவது என்பது நமது கையில்
தான் உள்ளது. ஒரு சின்ன ஆய்வு.
ஒரு தவளையை பிடித்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில்
போட்டு பாத்திரத்தை சூடாக்குங்கள். தண்ணீரின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தவளை தன்
உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும். வெப்பம் ஏற ஏற தவளையும் அந்தந்த வெப்பநிலை
உயருக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை
அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில்
இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், இதில் பரிதாபம் என்னவென்றால் எவ்வளவு முயற்சி
செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால்...
வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய்
இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
சரி. இப்போது எது அந்த தவளையை கொன்றது...? நம்மில்
பலரும் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று நினைக்கலாம். ஆனால், உண்மை
என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக
முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது".
இதே நிலைதான் நம்மில் பலருக்கும். எல்லோரிடமும்
சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால்
நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து
வைத்திருக்க வேண்டும். மன ரீதியாக,
உடல் ரீதியாக, பண
ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாம் சுதாரிக்காமல்
போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள். சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருக்கும் போதே, அவர்களிடமிருந்து
தப்பித்து விடுதல் நன்று. ஒன்று மட்டும் உண்மை "நம்முடைய
அனுமதியில்லாமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது”.
நாம் வாழ்ந்துகொண்டிருப்பது சுயநலம் நிறைந்த
உலகத்தில். காண்பதையெல்லாம் தனக்குத் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய மனிதனின்
சுபாவமாகிவிட்டது. எங்கு நோக்கிலும் பதவி மோகங்களினாலும், சொத்துக்களின்,
பொருட்களின் மீதுள்ள பேராசையினாலும் சண்டை சச்சரவுகள் பெருகிப் பல உயிர்கள்
அழிந்து கொண்டிருக்கின்றன. தேவையற்ற இதுபோன்ற மோகங்கள் மீதான விட்டுக்
கொடுக்கும் மனப்பான்மை நாம் வளர்த்துக்கொண்டால் நம் குடும்பங்களில், ஏன்
உலகிலேயே பல பிரச்சனைகள் இல்லாமலேயே போயிருக்கும்.
உண்மையில் இந்த உலகத்தில் நமக்கென்று எதுவுமே சொந்தமானதல்ல.
நாம் கொஞ்சகாலம் இந்த பூமியில் வசிக்க வந்திருக்கும் விருந்தினர்களே. “நாம்
எதைக்கொண்டு வந்தோம் கொண்டு செல்ல”
என்ற கீதையின் உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஒரு மனிதனுக்கும் அடுத்த
மனிதனுக்கும் இடையில் பிரச்சனைகள் வரக் காரணமே இருக்காது.
ஒரு வாசகம் படித்தேன், “ ஆயிரம் சந்தர்ப்பம்
கொடுத்தாவது ஒரு எதிரியை நண்பனாக்கலாம், ஆனால் ஒரு நண்பனை எதிரியாக்க ஒரு
சந்தர்ப்பம் கூட தரக்கூடாது”.
இதையே இங்கு கொஞ்சம் மாற்றிப்போட்டால். “ஆயிரம் முறை விட்டுக்கொடுத்து, அனுசரித்து
ஒரு எதிரியை நண்பனாக்கலாம், ஆனால் ஒரு நண்பனை எதிரியாக்க அப்படி ஒரு சந்தர்ப்பமே
வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்”
விட்டுக்கொடுத்தலும், அனுசரித்தலும் நம்மால்
செய்யமுடியும் ஒரு செயலே.. இதை நாம் நம்முடைய வீடுகளில் பின்பற்றும்போது வாழ்க்கை
சுகமாகும்.
வாழ்க்கை ஒரு இனிதான பூந்தோட்டம். அந்த
தோட்டத்தின் உரிமையாளரும் நாமே, தோட்டக்காரரும் நாமே, காவலரும் நாமே. அப்படி
இருக்க அந்த தோட்டத்தை நாமே அலங்கோலப்படுத்தி நமது மனதையும் ஏன்
காயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நம்முன்னே பல இனிமையான தருணங்கள் இருக்கின்றன.
ஏன் நாம் அவற்றை எல்லாம் தவறவிட வேண்டும். கொஞ்சம் நம் குடும்பத்தில்
இருப்பவர்களுக்காகவும், நம் குடும்பத்துக்காகவும், ஏன் நமக்காகவும் கூடத்தான் விட்டுக்கொடுத்தும்,
அனுசரித்தும் மகிழ்ச்சியாய் நம்முடைய
வாழ்க்கையை அமைத்துக்கொள்வோமே.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும்
வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் – சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக