வெள்ளி, 29 ஜனவரி, 2016

5. அலட்சியங்கள்

வலைவீசும் எண்ணங்கள்

5. அலட்சியங்கள்

அன்பு தோழமைகளுக்கு வணக்கம். வலைவீசும் எண்ணங்கள் தொடரில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

“ஒரு வார்த்தைகள் எவ்வளவு வலி தருமோ அதே அளவு வலியை சில அலட்சியங்கள் நமக்கு தருகின்றன.

படித்த வாசகம் ஒன்று இன்னும் நெஞ்சில் நின்று  யோசிக்க வைக்கிறது. “குழந்தைகளை அலட்சியம் செய்யாதீர். அது அவர்களை கொல்வதற்கு சமம். மேலோட்டமாய் பார்த்தல் அலட்சியம் எப்படி கொல்வதற்கு சமம் என்று தோன்றும். ஆனால் உங்கள் உள்மனதோடு கொஞ்சம் பேசி யோசனை செய்து பாருங்கள். ஒரு முக்கியமான நேரத்தில், முக்கியமான காரியத்தில் உங்களை யாராகிலும் அலட்சியம் செய்தால் அது உங்கள் மனதை என்ன  பாடுபடுத்துகிறது. பெரியவர்களாகிய நமக்கே இப்படி என்றால், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எப்படி அது மனதை வதைக்கும். குழந்தைகளுக்கு எல்லா நிகழ்வுமே முக்கியமானது தான். எல்லா அலட்சியமும் கொல்லுவது தான்.

குழந்தைகள் நீங்கள் சொன்ன பேச்சை அப்படியே கேட்க அவர்கள் பொம்மைகள் அல்லர். அவர்கள் சொன்ன பேச்சை கேட்பதில்லைஓர் இடத்தில் நிற்பதில்லைஇப்படி உங்கள் குழந்தைகளின் மீதான புலம்பல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. புரிந்து கொள்ளுங்கள்... துறுதுறுப்பும், சுறுசுறுப்பும்,  குறும்புத்தனங்களும் நிறைந்ததுதான் மழலைப் பருவம்.

இருந்தாலும் ஓர் எல்லை மீறி உங்கள் குழந்தை நீங்கள் சொல்லுவதை கேட்பதில்லையா? எந்த ஒரு விஷயத்திலும் முழு கவனம் செலுத்துவதில்லையா? எங்கும் ஓரிடம் இல்லாமல் எந்நேரமும் துறுதுறுவென அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா? இந்த காரியத்தில் எப்போதும் குழந்தைதானேஎன்ற நினைவில் அலட்சியமாக விட்டு விடாதீர்கள். சில சமயங்களில் அது ADHD பிரச்னையாக கூட இருக்கலாம். கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

சரி அலட்சியம் என்றால் அப்படி என்ன பெரிய சங்கதியா? ஆம், அக்கறைக் காட்ட மறுப்பதின் மறுவடிவே அலட்சியம். நீங்கள் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்று உங்களைப்பற்றியே நீங்கள் அக்கறைப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களை நீங்களே அலட்சியமோ அல்லது உதாசீனமோ செய்கிறீர்கள் என்பது தானே...

அக்கறை உங்களை சுயவுணர்வுடனும், விழிப்புடனும் வைக்கிறது. சுற்றிலும் பார்த்து சூழலை கவனிக்க வைத்து முன்னேற்றத்தை முன்னிருத்தி வளர வேண்டும் என்ற ஆசையை மேம்படுத்துகிறது. இப்படியான எண்ணங்கள் நல்ல யோசனைகளையும், தேவைகளையும் தேடுகிறது. தகுதியை வளர்க்கிறது. திறமைகளையும், பலவீனங்களையும் பகுத்து ஆராய்கிறது.

நாம் பெற்ற தகுதிகளையும் ஆற்றல்களையும் வீணாக்காமல் சரியான முறையில் அவற்றை பிரயோகிக்க வழிகளை தருகிறது. வெற்றிகள் நம்மை லட்சியங்களின் வாசலில் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அலட்சியம் செய்பவன் என்ன முட்டி மோதினாலும் எல்லா நிலைகளிலும் சிரமத்தையே சந்திக்கிறான்.  
நம்முடைய சில நிமிட அலட்சியம் பல மணித்துளிகளை விழுக்கி விடும். நம் வெளியூர் செல்லுகையில் இருக்கும் சில நிமிட அலட்சியம் நமது சேமிப்பை திருட்டுக்கொடுக்கிறது.

சாலை விதியில் அலட்சியம் உயிருக்கு எமனாகிறது. மனசாட்சியின் அலட்சியம் நிர்வாக பொறுப்பில்லாத அரசாய் நம் தலையில் விடிகிறது. வெயில் நேர அலட்சியம் மழைக்காலத்தில் நம்மை குலைநடுக்க செய்கிறது. மூத்தோர்களின் அனுவபம் மீதான அலட்சியம் நமக்கு பாடம் நடத்தி அனுபவங்களை தேட வைக்கிறது. உறவுகள் மீதான அலட்சியம் மன நிம்மதியை கெடுக்கிறது.

ஒவ்வொரு அலட்சியங்களும் நம்மை பலவழிகளில் சீரழிக்கிறது. எதனால் இந்த அலட்சியம்? சோம்பலும், இருமாப்புமா? அசட்டு தைரியமா? இல்லை அதீத தன்னம்பிக்கையா? எல்லாம் நோக்குங்கால் அழிவைத் தருவதும், ஆக்கத்தை நிறுத்துவதும், இலட்சியத்தை அடைய விடாமல் தடுப்பதும் இந்த அலட்சியம் மட்டுமே..

எதிலும் அலட்சியம்... தானாக எது நடந்தாலும் சரி என்ற அலட்சியம்... முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருக்கும் அலட்சியம்.... எந்த வழி செல்கிறோம் என்றே அறியாதிருக்கும் அலட்சியம்..... தன்னுடைய வாழ்க்கைக்கு தானே பொறுப்பேற்காமல் இருக்கும் அலட்சியம்.
.
இப்படியான பல அலட்சியங்களின் மீதான விலையும் மிகவும் அதிகமாகவே இருக்கும். அலட்சியங்கள் என்றும் எதையும் சாதிப்பதில்லை. எந்த ஒரு காவியங்களையும், மனம் மயக்கும் இசைகளையும், உயிரோவியங்களையும், அல்லது புது கண்டுபிடிப்புகளையோ தருவதில்லை. இந்த அலட்சியங்கள் பெரும்பாலும் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலேயே சாத்தியமாகின்றன.

தனிநபரின் அலட்சியம் அவரையும் கெடுத்து வீட்டையும் கெடுக்கிறது. அரசின் அலட்சியம் நாட்டையும், சமுதாயத்தை கெடுக்கிறது. சமுதாயத்தின் அலட்சியம் எதிர்கால சந்ததிகளை கெடுக்கிறது.

ஒன்று மட்டும் உண்மை. “எதையும் அலட்சியம் செய்து வாழ்பவர்கள் ஒரு நிலையில் யாருமே லட்சியம் செய்யாத கீழ்நிலைக்குத் ஒருநாள் தள்ளப்படுவார்கள். அவர்கள் வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, அவர்கள் வாழ்ந்த சுவடு இல்லாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் நாம் காட்டும் அலட்சியத்திற்கு நாம் தரும் விலைகள் மிகமிக அதிகமாகவே இருக்கும்.

இந்த அலட்சியமும் சிலநேரங்களில், சில சமயங்களில் மட்டும் நமக்கு நேர்மறை பலனைக்கொடுக்கும். எங்கே? எப்போது? உங்களிடம் வீணாக வம்பு வளர்பவர்களுக்கு நீங்கள் பதில் கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருங்கள். மலையைப் பார்த்து குலைப்பதால் மலைக்கு என்ன வலி? மலை என்ன பதில் தரும்.. அமைதி மட்டுமே தானே அதற்கு பதிலா கிடைக்கும்? உங்கள் எதிராளியிடமும் சில நேரங்களில் இந்த அலட்சியத்தை பின்பற்றும்போது உங்களுக்கு நேர்மறை பலனையே தரும். கொஞ்ச நேரம் அவர்கள் கத்திவிட்டு அமைதியாய் போய்விடுவார்கள். ஒருவர் திருப்பிக்குரைக்கும் போதும், தப்பி ஓடும்போதும் தானே அந்த எதிராளிக்கு வீரியம் வருகிறது. நீங்கள் செய்யும் அலட்சியம் அவர்களின் வீரியம் குறைத்து அமைதி தரும்.

அலட்சியங்களை கைவிடுங்கள்.. லட்சியங்கள் நமக்கு கைகொடுக்கும்..

இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும் உங்கள் அன்பை விரும்பும் – சங்கர் நீதிமாணிக்கம்.

கருத்துகள் இல்லை: