ஹாய் டாடி....! கெட்டவங்க யாரு,? என்ற
அப்பாவியாகக் கேட்ட சுரேஷின் தலையை கோதியபடி, அப்படியெல்லாம்
ஒண்ணும் இல்லைப்பா.? நல்லவங்களுக்கு அப்படியெல்லாம் யாரும் கிடையாது. பிடிச்சவங்க
பிடிக்காதவங்களை நல்லவங்க கெட்டவங்க என்று எடுத்து கொள்ளலாம் என்று விளக்கம்
கொடுக்க, கார்த்திக்கை வியப்பாக பார்த்தான் சுரேஷ்.
கார்த்திக் தன் கண்கள் விரிய, "உனக்கு
டாடியை பிடிக்கும் இல்லையா.,!" என்று கேட்க, அதற்கு
பதிலாய் புன்னகையை உதிர்த்து விட்டு, அவனை அணைத்தபடி தூங்கத் தொடங்கினான்
சுரேஷ்.
மென்மையான காற்றின் அமைதியில் அமிழ்ந்து கிடந்த இரவை உலுக்கி
எழுப்பியது போல் அந்த சத்தம் வீட்டை அதிர வைத்தது. என்னவாக இருக்கும் என்று
கார்த்திக் யூகிப்பதற்குள் யாரோ நான்கு பேர் ஓங்கி வாசற்கதவை அரைவது போல்
தட்டினர். .....!
யாரது? இவனின் குரல் அவர்களுக்கு கேட்டிருக்குமா தெரியவில்லை அத்தனை
பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிக்கொண்டு இருந்தனர். அந்த அதிரடி அவனது இதயத்தையே பிளப்பது போல
இருந்தது..
மெல்ல எல்லா விளக்குகளையும் எரியவிட்டு கதவை திறக்க தெருவே ஒரே கலவர
பூமி போல இருந்தது. அக்கம் பக்கம் வீட்டுக்கார்கள் எல்லாம் திரண்டிருந்தனர்.
என்ன ? என்று விசாரிக்கும் முன்னர் “சார்.. உங்க கார் தீயில எரிஞ்சுட்டு இருக்கு”, “நம்ம
தெருவுல வேற சில வண்டிகளும் மோட்டார் சைக்கிளும் எரியுது.. யாரோ தீயை வச்சிட்டு போயிட்டாங்க.” என்று தகவலை
சொல்லி முடித்தனர்..
வேகமாக சென்று தெருவில் நின்றிருந்த காரை பார்க்க அது முழுமையாக
எரிந்து வெறும் கூடாக நின்று கொண்டிருந்தது..
சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் பறக்க எல்லோரும் அந்த இடத்தில வந்து
தங்கள் விசாரணையை தொடங்கினர்.
எல்லா விசாரணையும் முடிய. “சார்.. நாளைக்கு ஸ்டேஷன் வந்து சம்பிரதயமா
புகார் கொடுங்க.. நாங்க இங்க வண்டி இழந்தவங்க எல்லோருக்கும் சான்றிதழ்
கொடுத்துடறோம். அத வச்சி உங்க காப்பீடு நிறுவனத்தில் இழப்பீடு வாங்கிக்கலாம்.
அப்படியே உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் வந்தாலும் சொல்லுங்க. அவங்களை
கவனிச்சு வாங்கறதா வாங்கிக்கலாம்.. இப்ப
கிளம்பறோம் என்று சொல்லி தலையை சொறிந்தார்
காவலர்.. சில நூறுகள் கைமாற தூரத்தில் இருந்து பார்ந்தான் தூக்கம் கலைந்து வந்து
வேடிக்கை பார்த்த சுரேஷ்..
மறுநாள் தெருவாசிகள் அவர்களுக்கும் இது பற்றி பேசிக்கொண்டு
இருக்கும்போது அந்த தெருவில் வசிக்கும் நம்பிராஜின் மகன் செல்வம் தான் இதற்கு
காரணம் என்று தெரியவந்தது. பலமுறை கார்த்திக்கும் பார்த்து இருக்கிறான்.
அந்த செல்வம் பிறவிலேயே சிறிது மனநிலை பிறழ்ந்தவன். அவன் நடவடிக்கை
எல்லா பிள்ளைகள் போல நன்றாக இருந்தாலும் திடீரென்று குணம் மாறி ஏதாவது முகம்
சுளிக்க செய்திடுவான். சில நாட்கள் கையில் தீப்பெட்டி வைத்துக்கொண்டு இருக்கும்
சறுக்கள், காய்ந்த மரம், குப்பைகள் போன்றவற்றில் தீ வைத்துவிட்டு ஓடிவிடுவான்.
நேற்று இரவு யாரும் அறியாத நேரத்தில் வீட்டில் இருந்து வெளியில் வந்த
அவனால் வண்டிகளுக்கு தீ வைக்கப்பட்டு விபரீதமாக முடிந்தது.
எல்லோரும் நம்பிராஜனிடம் போய் சண்டையிட.... வசதி வாய்ப்புகளில் நலிந்த
அவரால் கண்ணீர் விடுவதை தவிர ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தார்.
அப்போது மெல்ல அங்கு வந்த சுரேஷ் மெல்ல கார்த்திக்கை கூப்பிட்டு.
“அப்பா நேத்து நீங்க சொன்னீங்க எல்லோரும் கெட்டவங்க இல்லை. நமக்கு பிடிச்சவங்க,
பிடிக்காதவங்க வேணா அப்படி சொல்லாம்னு சொன்னீங்க..
அப்படின்னா இப்ப நம்பி மாமாவும், செல்வம் அண்ணாவும் நமக்கு
பிடிக்காதவங்களா? என்று பரிதாபக கேட்க.. கார்த்திக் தயங்கி நின்றான்.
அங்க பாருங்க அந்த அண்ணா எப்படி சிரிச்சுட்டு இருக்காக.. ஆனா நேத்து
ராத்திரி நீங்க அந்த போலிஸ் மாமாக்கு எதோ பணம் தந்தீங்களே அது மாதிரி அந்த
அண்ணனுக்கும் தாங்களேன்.. என்று அப்பாவியாக கேட்க.. கார்த்திக் தன்னுடைய தலையில் சம்மட்டியால்
பலம் கொண்ட மட்டும் தாக்கியது போல திகைத்து நின்றான்....
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக