வலைவீசும் எண்ணங்கள்
31. ஆணென்ன பெண்ணென்ன
இன்றைக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இந்த சமூகத்தில்
அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களா? ஆண்களா? என்பதே.! வெளிப்படையாகவே தெரியும்
உண்மை பெண்கள் என்பது. இதை மறுக்கவும் முடியாது. பெண்களால் உருவாக்கப்பட்ட இந்த
சமூகம் பின்னர் மெல்ல மெல்ல ஆண்களில் பிடியில் சிக்கி அவர்கள் சார்ந்து அவர்களின்
தேவைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டது. அதுகாறும் தனித்து இயங்கிய பெண்கள் ஆண்களை
சார்ந்து இயங்கவும், பின்னர் மெல்ல மெல்ல ஆண்களை அண்டி வாழும் அடிமை போலவும்
மாற்றப்பட்டது.
முதலில் பெண்களை போற்றும் தெய்வம் என்று சொல்லி வீட்டில் பூட்டி வைத்த
ஆண்களின் சமூகம் பின்னர் மெல்ல மெல்ல பெண்களை தங்களின் போகப்பொருளாக மாற்றி
தங்களின் அடிமையாக, கைப்பாவையாக மாற்றியது.
அப்படி இருந்த சூழலிலும் பெண்கள் பொங்கி எழுந்ததும், ஆண்களை எதிர்த்து
செயல்பட்டதும் பல சான்றுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. அழிக்கும் கடவுளாக
காட்டப்பட்டுள்ள சிவன் தன்னில் பாதியை சக்திக்கு கொடுத்து சமத்துவம் பேசினாலும்
அது எல்லா இடங்களிலும் நிலைநிற்கவில்லை.
இன்றைக்கு மிக அதிக அளவில் பேசப்படும் பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற
சொற்றொடர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த உலகத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. பல்வேறு
இடங்களிலும் பேசப்படுகின்றன.
எல்லா நிலைகளிலும் இந்த சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம்
வகிப்பவர்கள். பெண்களை தவிர்த்து இந்த சமுதாயத்தை நம்மால் பார்க்க முடியாது. இந்த
சமுதாயமும் இயங்க முடியாது. சுருங்க சொன்னால் அது சமுதாயம் என்றே சொல்ல முடியாது.
இன்றைய நிலையில் பெண்களுக்கான நீதி சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? பெண்ணுக்குரிய
உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்று கேள்விகள் கேட்டால் பெண்களின் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்ட
பலரால், பெண்களின் மீது மதிப்புக்கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்
காரணமாக பல சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டியதும்,. வீரமங்கை
வேலுநாச்சியார், ஜான்ஸிராணி தோன்றி ஆண்டதும் இந்த சமூகமே. ஆனாலும் பெண்களுக்கு இந்த
சமூகத்தில் முழுமையான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்றால் “ஆம்” என்று சொல்லிவிட முடியாது.
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்'
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்'
என்று சொல்லும் காப்பியம் அதே பத்தினி தன்மையை ஆண்களுக்கு அவசியம்
வேண்டும் என்று அடித்து சொல்லவில்லை என்பதும் ஒப்பு நோக்க வேண்டும். பெண்மையை
போற்றும் இடத்தில் ஆண்களுக்கும் அந்த நீதியை வலியுறுத்தி சொல்லவில்லை.
பிறன்மனை நோக்கத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு..
என்பதிலும் எல்லா எல்லா ஆண்களும் என்று சொல்லாமல் நீ சான்றோனாய்
இருந்தால் பிறன்மனை நோக்குவது சிறந்ததல்ல என்று சொல்லி விட்டுவிடுகிறார்.
கிடைத்துள்ள வரலாறுகளின் அடிப்படையில் பார்க்கையில் ஆதிகாலத்தில் ஆண்
பெண் இருபாலரும் சமமாகவே கருதப்பட்டனர். இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல
படையெடுப்புகள் பெண்களை பொத்திப்பாதுகாக்கும் முறையை கொள்வதாக சொல்லி மெல்ல மெல்ல
பெண்களை அடிமைகள் ஆக்கி விட்டது.
ஆண்களால் அடக்கி வைக்கப்பட்ட இந்த பெண்கள் சமூகம் சென்ற நூற்றாண்டில் மெல்ல
விடுதலை பெற்றி வெளியில் வர தொடங்கியது. அதே நேரத்தில் ஆண்களும் மெல்ல மெல்ல
தங்களை மாற்றிக்கொண்டு பெண்களுக்கு தேவையான உதவிகளை மனமுவந்து செய்ய
தொடங்கினார்கள்.
பெண்களில் ஒரு சாரார் இந்த விடுதலையை ஆண்களின் விட்டுக்கொடுத்தலை
அடங்குதல் என்று எண்ணி சட்டம் அவர்களுக்கு கொடுத்த பாதுகாப்புகளை தவறான முறையில்
பயன்படுத்தி ஆண்களை துன்புறுத்தும் போக்கு இன்றைக்கு அதிகரித்துள்ளது என்பதும்
மறுக்க முடியாது.
ஆண்கள் என்றைக்கும் குடும்பம், அதின் சந்தோசம், முனேற்றம் என்ற
நோக்கில் உழைத்துகொண்டு இருக்கும் நிலையில் அதிகாரங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டு
குடும்பம் நிர்வாகிக்கப்படுகிறது. குடும்பத்தில் பெண்களின் கருத்துக்கு பெருமளவு
மதிப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் சமுதாயம் என்று வீட்டை விட்டு வெளியில்
வரும்போது பெண்களுக்கான முழுமையான விடுதலை இன்னும் கிட்டவில்லை.
'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்'
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்'
என்று பாரதி சொன்னாலும் அவர்களுக்கு தடைகளும், தடங்கல்களும் இன்னும்
தீரவில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றல் பெண்களின் பல
முன்னேற்றங்களுக்கு மதத்தின் அடிப்படைவாதத்தில் ஊறியும், பழமையில் இருந்து
முழுமையாக விடுபட முடியாமலும், சடங்கு சம்பிரதாயம் என்ற பிடியிலும் மீள முடியாமல்
இருக்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை.
ஒரு பக்கம் பெண்ணடிமை என்று பேசும் பெண்கள் மறுப்பக்கம்
குடும்பத்திற்குள் ஆண்களை அடிமைப்படுத்தி, அடக்கியாண்டு, கேவலப்படுத்தும் போக்கும்
இன்றைக்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் சட்டம் கொடுக்கும் பலமும், குடும்பம்
சிறக்கவும், சமுதாயத்தில் தன்னுடைய பெயர் சீரழியக்கூடாது என்ற எண்ணத்தில்
விட்டுக்கொடுக்கும் ஆண்களின் பலவீனும் ஒரு காரணமாக இருக்கிறது.
உண்மையில் ஒரு குடும்பம் என்னும்போது அங்கு ஒருவரை ஒருவர் அடிமையாகும்
எண்ணத்தில் தங்களுடைய ஆளுமையை செலுத்தும்போது அங்கே நிம்மதி என்பது இருக்காது, அதே
நேரத்தில் அந்த குடும்பத்தின் வாரிசு அங்கு சிறந்ததை கற்கவும் முடியாது.
இந்த அடக்குதலும், அடங்குதலும் இல்லாமல் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர்
விட்டுக்கொடுத்து நம் குடும்பம், நம் வாழ்வு, நம் மக்கள் என்று புரிந்து கொண்டு
வாழ்கையில் குடும்பவாழ்வு என்பது என்றைக்கும் இனிமை தரும் பூந்தோட்டமே.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக