வலைவீசும்
எண்ணங்கள்
30. உங்கள் பார்வையில்
நம்முடைய பார்வைகள் எப்போதும் ஒன்று போல இருப்பதில்லை. காரண
காரியங்களுக்கு ஏற்ப செயல்களில், முடிவுகளில் நமது பார்வைகள் மாறுபடுகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளின் மீதான பார்வைகள் மாறுபட்டே இருக்கும்.
எப்படி நல்லவர்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதை கண்டு
சொல்லுவார்களோ அதே போலவே குறை சொல்லுபவர்களுக்கு எவ்வளவு சிறந்ததாக ஒரு படைப்பு
இருந்தாலும் ஏதாவது ஒரு குறையை அதில் கண்டுபிடித்து திருப்தி அடைவார்கள்..
இன்றைய நாளில் ஒரு சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அதை கண்ணால்
கண்டவர்களின் தகவல்களே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டதாக இருக்கும். காரணம் அந்த
நிகழ்வின் நொடியில் இவர்களின் மனம் எந்த சிந்தனையில் இருந்ததோ அது சார்ந்து அவர்களின்
கருது அந்த சம்பவம் மீது வெளிப்படும்..
பார்த்தவர்களே இப்படி
சொல்லும்போது ஊடகங்களின் பார்வை எப்படி இருக்கும்? அவர்களின் பார்வையில் அந்த
சம்பவத்தின் தாக்கம் அன்றைக்கு ஊடகங்களின் ஒட்டுமொத்த பார்வையில் பொருட்டு மாறும்.
நம்மையே எடுத்துக்கொள்ளுவோமே.. நாம் ஒரு கடைவீதிக்கு செல்கிறோம் என்று
வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பார்வையில் அந்த கடைவிதியில் சட்டென்று தெரிவது அல்லது
நான் தேடுவது என் தொழில் சார்ந்த நிறுவனமாகவே இருக்கும். ஏதாவது ஒரு இடத்திற்கு
வழி சொல்வதாக இருந்தாலும் என்னுடைய தொழில் சார்ந்து மருத்துவமனை அல்லது
மருந்துக்கடை இப்படி தான் அடையாளப்படுத்துவேன். இது மனிதரின் இயல்பு.
இப்படி ஒரு சம்பவமும், செயலும் ஒரு மனிதரின் தொழில் சார்ந்து, அந்த
நேரத்திய மனம் சார்ந்து, தனிமனித குணம் சார்ந்து மாறுபடுகிறது.
இந்த பார்வை மாறுபாடுகளே மனிதனின் சுயம் சார்ந்த பிரச்சனைகளிலும்
வெளிப்படுகிறது.
இந்த இடத்தில் ஒரு கதை இந்த உதாரணத்தை சிறப்பாக விளக்கும்.
ஒருவன் கடவுளை வேண்டி தவமிருக்க அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன்
கடவுளிடம் என் வாழ்க்கையின் மதிப்பு என்ன என்ற கேள்வியை கேட்டான்.
கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா
ஆனால் விற்கக்கூடாது என்றார்.
அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு
பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு
தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள்
தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம்
காண்பித்து அதன் மதிப்பை கேட்டான்.
அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல்
உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை
இல்லை என்று கூறினார்.
இது தான் பார்வையின் மாறுபாடுகள். எப்படி ஒரு விலைமதிக்கமுடியாத கல்
ஒவ்வொருவரின் பார்வையிலும் மதிப்பிடப் படுகிறதோ அதே நிலையில் தான் நமது
செயல்களும், எண்ணங்களும், பிரச்சனைகளும் இங்கே அணுகப்படுகிறது.
இன்னொரு பிரபலமான எடுத்துக்காட்டு எல்லோரும் அறிந்திருப்பீர்கள் என
நினைக்கிறேன்.
“நமக்கு வரும் பிரச்சனையின் வீரியம் என்பது .அந்த பிரச்சனையை நாம்
எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. ஒரு சிறு கல்லை நமது கண்ணின் வெகு
அருகாமையில் கொண்டுவந்து பார்த்தல் அது இந்த உலகத்தையே நும்முடைய பார்வையில்
இருந்து மறைத்து விடும்.
மெல்ல மெல்ல அதை பின்னால் கொண்டு செல்ல எல்லாமே தெளயாக தெரியும், அந்த
கல்லும் எவ்வளவு சிறியது என்று புரியும். அந்த கல்லை ஒரு ஓரமாக வைத்து விட்டால்
அது இருக்குமிடமே மறந்து விடும்..
வாழ்க்கையில் நமக்கு வரும் பிரச்சனைகளும் இதேபோல தான் நாம் பிரச்சனையை
எவ்வளவுக்கெவ்வளவு அருகில் வைத்து மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறோமோ
அதற்கு ஏற்ப அதன் வீரியம் நம்மை பூதாகரமாக வாட்டும்.
கொஞ்சம் தூர தள்ளி வைத்து அந்த பிரச்சனையை அணுகினால் பல கோணங்களில்
அந்த பிரச்சனை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கும். அதை தீர்க்கும் வழிகளும்
புலப்படும்.
நமது மனதில் ஆயிரம் எண்ண அலைகள் அடித்துக்கொண்டு இருந்தாலும் மனம்
அமைதி கொண்டு அதை பார்க்கும்போது அந்த அலைகள் மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்து
விடுகிறது.
எல்லாமே மாறிவிடும் இந்த உலகத்தில் உருவாகும் பிரச்சனைகள் மட்டும்
எம்மாத்திரம்.? தெளிவில்லாத மனதில் இருக்கும் குழப்பம் என்றைக்கும் தீராது.
ஆக எந்த ஒரு செயலையும், பிரச்சனையையும் ஒரே பார்வையில் அணுகாமல் பல
கோணத்தில் சிந்தித்து அணுகும்போது தான் அதன் சாதக, பாதகங்கள், தீர்வுகள், வழிகள்
எல்லாம் தெளிவாக மனதில் தோன்றும்.
எந்த ஒரு சம்பவமோ, பிரச்சனையோ நாம் அணுகும் விதத்தில் தான் அதன்
எல்லைகள் விடிவதும், சுருங்குவதும் நடக்கும்.
நீங்கள் ஒருவருடன் பிரச்சனை வளர்க்க விரும்பினால் உங்கள் வார்த்தைகளில்
பலம் கூட்டுங்கள். இல்லை, பிரச்சனை வேண்டாம். அமைதியாக முடிப்போம் என்றால் உங்கள்
வார்த்தைகளில் அமைதி கூடட்டும். ஒருவரின் வார்த்தைகளின் வீரியமே எதிராளியை தூண்டுவதும்,
அமைதியாக்குவதுமான வேலையை செய்கிறது.
ஒரு சிலருக்கு, ஒரு சில நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களின்
யோசிக்காத, அவரச செயலின் மூலம் பெரிதாக வெடிக்கிறது. உண்மையில் அந்த பிரச்சனையை பார்த்தால்
ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் போயிருக்கக்கூடியதாக இருந்திருக்கும், என்ன நம்முடைய
அணுகுமுறையில் ஒரு சின்ன மாற்றம் இருந்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.
ஆனால் சிலருடைய ஒற்றை சொல்லின் கர்வம், பதவின் வேகம், பிறரின் மேல்
ஒன்றுமே தெரியாமல் நாம் கொள்ளும் பிறழ்பட்ட அபிப்பிராயம் இவைகள் தான் என்றைக்கும்
சின்ன பிரச்சனைகளையும் பெரிதாகுகிறது.
இங்கு முகநூளில் நமக்கு அறிமுகமே இல்லாதவர்கள் சம்பந்தமே இல்லாமல்
நம்முடைய பதிவில் சமயங்களில் கீழ்த்தராமான கருத்தீடு செய்துவிட்டு போய்விடுவார்கள்.
அந்த நேரத்தில் நமது அணுகுமுறையாக யாரென்றே தெரியாத, அந்த நபரின் மீது கொள்ளும்
வன்மம் காரணமாக திருப்பி நாமும் அந்த பாணியில் பதில் தாக்குதல் தொடுப்பது.
இது உண்மையில் நம்முடைய மனதை மிகுந்த அழுத்தத்திற்கு ஆட்படுத்துகிறது.
உண்மையில் அந்த நேரத்தில் நாம் அந்த நபரின் வார்த்தைகளை மனதில் ஏந்தி நம்மை நாமே
காயப்படுத்திக்கொள்கிறோம்.
அடுத்த அணுகுமுறை அந்த கருத்தீடை அழித்து அந்த நபர் மீண்டும் நம்மை
அணுகாதவாறு தடை செய்து அமைதியாக நமது வேலையை தொடர்வது.
இந்த இரண்டில் உங்கள் பார்வையில் எது சரியென்று படுகிறது அதை
செய்யலாம். சிலருக்கு இந்த பிரச்சனையில் வேற்று பார்வைகளும் இருக்கலாம்.
ஒரு காலி கோப்பையை நம்முடைய கரத்தில் ஏந்தி கரத்தை நீட்டிக்கொண்டு
நிற்கும் போது நமக்கு எதுவும் தெரிவதில்லை. அதுவே சில நிமிடங்கள் நீடிக்க கைகளில்
வழிகள் எடுக்க ஆரம்பிக்கும். அதையும் தாங்கிக்கொண்டு இன்னும் சில நிமிடங்கள் நின்றால்
கைகள் மெல்ல மெல்ல மரத்துப்போன நிலைக்கு ஆளாகும். இத்தனைக்கும் அது வெற்றுக்கொப்பை
தான். அதன் நிறையில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் அதை தாங்கிப்பிடித்திருக்கும் நமக்கு தான் எல்லா வலிகளும்,
வேதனைகளும். பதிலாக கோப்பையை கீழே விட்டுவிட்டால்? சுலபம். எந்த வலிகளும்,
வேதனைகளும் நமக்கு இல்லை.
ஆக இப்படியான மாற்றுப்பார்வைகள் மூலம் நம்மால் பல பிரச்சனைகளை எளிதாக
தீர்க்க முடியும். ஆனால் வறட்டு பிடிவாதம் கொண்டு பார்வைகளை மாற்றாமல் அல்லல்
படுவதே இங்கு பெரும்பாலும் நடக்கிறது.
இனிய வணக்கங்கள். அடுத்த பதிவில் மீண்டும் வ்ளைவீசுவோம். என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக