வெள்ளி, 15 ஜூலை, 2016

29. காதில்லா சமூகம்

வலைவீசும் எண்ணங்கள்

29. காதில்லா சமூகம்


அன்றைக்கு ஏனோ பவித்திரனுக்கு ஒருவித மனப்பதற்றமாகவே இருந்தது. எல்லா செயல்களையும் தனக்காக அல்லாமல் வேறு யாருக்காகவோ செய்வதாக ஒரு எண்ணம் என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அதிகரித்து ஒரு குழப்பமான சூழ்நிலையில் அமர வைத்திருந்தது.

இந்த இடத்தில் பவித்திரனுக்கு பதில் உங்களையும் கூட பொருத்திப்பார்க்கலாம். பெரும்பாலும் நமது செயல்களில் பலவும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்லுவார்களோ, மற்றவர்கள் கேலி பேசுவார்களோ என்று மற்றவர்களை சார்ந்தே மாற்றி அமைத்து நாம் நாமாக வாழாமல் இருக்கிறோம்.

பவித்திரனுக்கு கோட்டு , சூட்டு, ஷூ என்று மேலைநாட்டு உடைகளில் சுத்தமாகவே விருப்பம் இல்லை. ஆனாலும் அலுவல் சார்ந்த ஒரு கூட்டத்தில் எல்லோரும் இப்படியான ஒரு உடை அணிந்து வரும்போது நாம் மட்டும் வேறு உடையில் போய் நின்றால் ஏதாவது நினைப்பார்களோ, நம்மை தவறாக எண்ணுவார்களோ என்ற தன் மன நிலைப்பாட்டின் படி இந்த உடை அணிந்து அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அரங்கமாக இருந்தாலும் ஒருவித அசவுக்கியாமாக உணர்ந்தார். அவருடைய எண்ணத்தில் இது சம்பந்தமாக ஒரு விவாதமே ஓடிக்கொண்டு இருந்தது.

எல்லோரும் செய்கிறார்கள் என்று மற்றவர்களைப்பார்த்து அவர்கள் போல இருக்க வேண்டும் என்ற பெருமைக்கு ஆசைப்பட்டு இப்போது அதுவே ஒரு போலி வாழ்க்கையாக மாறிவிட்டது பற்றி அவரின் மனது சிந்தனையில் இருந்தது.

அப்போது தான் கூட்டத்தின் முக்கிய அழைப்பாளர் திரு. சொல்வேந்தன் நம்முடைய பாரம்பரியமான உடையில் கம்பீரமாக மேடையில் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்தார். அரங்கமே விதவிதமான அந்நிய பண்பாட்டு உடையில் மின்னுகையில் அவர் அரங்கத்தில் தனித்து மின்னினார்.

பவித்திரனுக்கோ ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், ஒருவித ஏக்கமாகவும் இருந்தது. உண்மையில் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள யாருக்கும் எந்த உடை கட்டுப்படும் விதிக்கப்படவில்லை. ஆனாலும் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் ஆட்பட்ட மனித உள்ளங்கள் தங்களின் பதவியின் பவிசை வெளிபடுத்த இங்கு நிலவும் கால நிலைக்கு ஒவ்வாத உடையில் குழுமியிருந்தனர்.

கூட்டம் முடிந்ததும் மெல்ல திரு. சொல்வேந்தனை அணுகி தயக்கத்துடன் தன்னுடைய எண்ணத்தையும் ஆதங்கத்தையும் பவித்திரன் அவருடன் பகிர்ந்து கொள்ள, வாருங்கள் அப்படி அமர்ந்து பேசலாம் என்று தனியிடம் அழைத்துச்சென்று வசதியாக இருக்கையில் அமர்ந்து பவித்திரனை பார்த்து..

“இந்த சூழலில் உங்களில் யாராவது என்னைப்போல உடையணிந்து இங்கு கலந்துகொண்டு இருந்தால் நீங்கள் அவரை ஏதும் கேலியே? கிண்டலோ அல்லது ஏன் இந்த உடை என்றாவது கேட்டு இருப்பீர்களா?.. இல்லை இப்படித்தான் உடை அணிந்து வந்திருக்க வேண்டும் என்று ஏதும் பாடம் எடுத்திருப்பீர்களா?” என்றார்.

சொல்வேந்தனின் எதிர்பாராத இந்த கேள்விக்கு சற்று தடுமாறினாலும், “நிச்சயம் இல்லை..காரணம் இங்கு கலந்துகொண்டவர்களில் பாதி பேர் யாரென்றே எனக்கு தெரியாது? பலர் எங்களின் மற்ற கிளை அலுவலக சிப்பந்திகளும், வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆவார்கள். அதுவும் இல்லாமல் எனக்கு இருக்கும் வேலை பளுவில் அப்படியான ஒரு கேள்வியை கேட்கவும் நேரமில்லை” என்று பவித்திரன் பதிலளித்தார்.

சொல்வேந்தன் மெல்ல பவித்திரனை நோக்கி மெல்லிய புன்னகையித்து “இதுதான் உண்மை உலகின் நிலை”.. ஓடிக்கொண்டிருக்கும் வேலை சூழலில் யாரும் யாரையும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. ஆனாலும் யாராவது நம்மை “ஏன் இப்படி” என்று கேட்டுவிடுவார்களோ என்ற கற்பனை கேள்வியை மனதில் கொண்டு பின்னர் மனதில் ஒரு கற்பனை மனிதரை உருவாக்கி அந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு மெல்ல அடிமையாகி தங்களின் சுயம் சார்ந்த செயல்களை செய்ய முடியாமல் வாழ்கிறார்கள்” என்று விளக்கினார்.

உடனே பவித்திரன்.. அப்படி சொல்ல முடியாது.. என்னை மிக நெருக்கமாக அறிந்தவர்கள் நான் ஏதாவது மற்றவர்கள் செய்யும் செயலை விட மாறுப்பட்டு சில செயல்களை செய்யும் போது சமயங்களில் கேலிப் பார்வையும், கேலி பேச்சுக்களும் என்னை நோக்கி வீசினார்கள் என்று சில யதார்த்த சம்பவங்களை சொன்னார்.

மெல்ல புன்னகைந்த சொல்வேந்தன். “அப்படி பேசிய யாராவது ஒருவர் உங்களின் மிகவும் இக்கட்டான, உதவி தேவைப்படும் நேரத்தில் அதை அறிந்தும் தாங்களாவே வந்து “ஏதும் உதவி தேவையா?” என்று கேட்டு இருக்கிறார்களா” என பவித்திரனிடம் மறுகேள்வி வைக்க..

“சமயங்களில் நான் வாய்விட்டு கேட்டும் காதில் விழாது மாதிரியும், அப்படியே கவனித்து கேட்டாலும் இல்லை என்று நேரிடையாகவும், மறைமுகமாகவும் மறுதலித்தவர்களே அதிகம்” என்று தனது உண்மை அனுபவத்தை பவித்திரன் சொன்னார்.

ஆம்.. “இதுதான் உண்மை உலகின் நிலை” என்று மீண்டும் அழுத்தி சொன்ன சொல்வேந்தன், “இந்த உலகம் தன் கண் கொண்டு மற்றவர்களின் துன்பங்களை ரசிக்கும், வாயால் மற்றவர்களை குறை கூறும், கேலியும் பேசும், புறமும் சொல்லும்.. புரளி பேசுபவர்களுக்கு தங்கள் காதுகளை கொடுத்து ரசித்து கேட்கும்.. ஆனால் அவர்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதன் காதுகள் செவிடாகிவிடும்.. கண்கள் குருடாகிவிடும், வாய் ஊமையாகிவிடும்.”

இப்படியான இந்த உலகத்தின் மாந்தர்களுக்காக தான் நாம் நமது இயல்புகளை மறைத்து ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு போலியான கௌரவத்தை சுமந்து திரிந்துகொண்டு இருக்கிறோம்.  

நாம் அனுதினும் பார்க்கும் எத்தனையோ சம்பவங்கள் மீது போகிற போக்கில் நமது கருத்துக்களை துப்பிவிட்டு செல்லுகிறோம்.. ஆனால் என்றைக்குமே உண்மையான மனதுடன் உதவி செய்ய முற்படுவதில்லை. அதற்கு ஆயிரம் காரணத்தை கையில் தயாராக வைத்திருகிறோம்...

உண்மையில் நாம் நமது எண்ணங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு உண்மையாக நடக்க வேண்டும். பிறரின் எண்ணத்துக்கு எதற்கு அடிமையாக வாழ வேண்டும். நீங்கள் ஒரு பொது இடம் செல்லும்போது உங்களுக்கு பிடித்திருந்தால் குழந்தையை போல விளையாட ஆசைபட்டால் விளையாடுங்கள். அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். அதை விடுத்து மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று உங்கள் ஆசையை மறைந்து வாழ வேண்டாம்.

மற்றவர்கள் உங்களுக்காக ஒருபோதும் உங்களின் சுமைகளை சுமக்க போவது இல்லை. உங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அவர்களின் எல்லா அங்கங்களும் ஊனமாகியது போல ஒதுங்கி செல்லுவார்கள்” என்ற சிறிய விளக்கத்தில் பவித்திரன் புரிந்தது போல தலையாட்டினார்.

“என்றைக்குமே நமது அண்டை வீட்டாருடன் ஒப்பிட்டு நமது தகுதிக்கு மீறியோ இல்லை நம்முடைய தேவைக்கு அவசியமே இல்லாமலோ வாங்கிக்குவிக்கும் பொருளும் சரி.. மற்றவர்களின் வாழ்க்கைத்தரம் பற்றி அறியாமல் நமது எதிர்கால நிலை பற்றியும் உணராமல் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை கடைசியில் மன குழப்பத்திற்கும், வாழ்க்கை சிக்கலுக்கும் இடையில் ஊசலாட வைந்துவிடும்” என்று முடித்தார் சொல்வேந்தன்.

நீங்கள் நீங்களாக வாழ முற்படுங்கள். கற்பனையில் பிறரை உருவகப்படுத்தி அவர்களுக்காக உங்களை மாற்றி வாழுவதை விடுங்கள்..

எப்படி இன்றைய கூட்டத்தில் நான் நானாக கம்பீரமாக வந்தேனோ அதே போல ஒரு தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையில் இருங்கள்.

உலகத்தின் பார்வை செல்லும் இடம் எல்லாம் நீங்களும் பயணப்பட வேண்டாம். உலகம் பேசும் எல்லா பேச்சுக்கும் உங்கள் செவிகளை திருப்ப வேண்டாம். அர்த்தமில்லா பார்வைக்கும், தேவையில்லா கேள்விகளுக்கும் உங்கள் வார்த்தைகளை வீணாக்க வேண்டாம்.

இன்றைக்கு உங்களை பார்த்து கேலி பேசி உங்களை உசுப்பி விடும் உலகம் பின்னாளில் உங்களின் துன்பங்கண்டு மனதில் குதூகலித்து உங்களை கண்டதும் செவிடாகவும், ஊமையாகவும், குருடாகவும் கடந்து செல்லும்..

நமது செயல்கள் என்பது நமக்கானது. அந்த நோக்கில் இந்த உலகம் நமக்கானது என்று வாழ்க்கையை அணுகுவோம். நம்முடைய செயல்கள் மற்றவர்களுக்காக அல்ல நமக்கானது என்பதை மனதில் வையுங்கள். நீங்கள் விளையாட நினைத்தால் விளையாடுங்கள்.. தெருவில் விற்கும குச்சிஐஸ் ருசிக்க நினைத்தால் சிறுபிள்ளையாகி ருசியுங்கள். பாட நினைத்தால் பாடுங்கள். ஒரு குழுவின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆட நினைத்தால் ஆடுங்கள்.

இது தான் உங்களின் மனம் விரும்பும் செயல் என்னும்போது மற்றவர்களுக்காக தள்ளி வைக்காமல் உடனே செயல்படுத்தி மகிழுங்கள். அடுத்த சந்திப்பில் நீங்கள் நீங்களாகவே வாருங்கள். உங்களுக்கான புதிய மகிழ்ச்சி என்றைக்கும் நிறைந்திருக்கும் என்று கூறி விடை பெற்றார் சொல்வேந்தன்.

புதிய கண்ணோட்டத்தில் உலகை பார்க்க எல்லாமே புதியதாகவும், இன்பமாகவும் பவித்திரனுக்கு தோன்றியது.

கட்டுப்பாடுகள், கேள்விகள், வரைமுறைகள் தேவையில்லாத இடத்தில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் அருகில் இருக்கும் இந்த சமூகத்தை சார்ந்த அனைவரும் காதில்லாதவர்கள். உங்களின் பிரசனைகளை அவர்கள் கேட்கப்போவதில்லை. அப்படி இருக்க அவர்களின் எண்ணத்திற்கு உங்களை அடிமையாக்கி விட வேண்டாம். நாலு பேர் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணத்தில் வாழ வேண்டாம். அந்த நாலு பேருக்கும் உங்களைப்போலவே பலவிதமான பிரச்னைகள். உண்மையில் உங்களைப்பற்றி பேசவும், நினைக்கவும், கேட்கவும் அவர்களுக்கு நேரமில்லை.


“இந்த உலகம் தன் கண் கொண்டு மற்றவர்களின் துன்பங்களை ரசிக்கும், வாயால் மற்றவர்களை குறை கூறும், கேலியும் பேசும், புறமும் சொல்லும்.. புரளி பேசுபவர்களுக்கு தங்கள் காதுகளை கொடுத்து ரசித்து கேட்கும்.. ஆனால் அவர்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதன் காதுகள் செவிடாகிவிடும்.. கண்கள் குருடாகிவிடும், வாய் ஊமையாகிவிடும்.”

இனிய வணக்கங்கள்.... அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும் உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.


கருத்துகள் இல்லை: