வலைவீசும் எண்ணங்கள்
28. உங்களை அறியுங்கள்
இந்த பிரபஞ்சம் நிரந்தமானது. இந்த உலகம் நிரந்தமானது. இந்த
நிரந்தரங்களுக்கு நடுவில் வாழும் நமது வாழ்க்கை தான் நிரந்தரமற்று இருக்கிறது.
எந்த நொடி நமது வாழ்க்கையின் முடிவு என்று யாராலும் அறிய முடியாத நிரந்தரமற்ற
நிலையில் நாம் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடலின் ஓட்டத்தில்
நாம் மறந்திருப்பது... நாம் யார்? என்று நம்மை பற்றி அறியாத உண்மைகள் தான். நம்மை
பற்றி நாம் அறிந்துகொள்ளும் ஒரு புள்ளியில் ஏற்படும் மாற்றங்கள் தான் நமது
வாழ்க்கையை மதிப்புடையதாகவோ, ஒன்றுமே இல்லததாகவோ ஆக்குகிறது.
திருமூலர் தன்னுடைய பாடலில்
“தன்னை அறியத்
தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை
அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத்
தானிருந் தானே.”
இந்த பாடலுக்கு
தனியாக விளக்கம் தேவையில்லை.. அவ்வளவு எளிமையாக, எளிதாக ஒருவர் தன்னைப்பற்றி அறிதலை
விளக்குகிறது.
ஒருவர் தனனுடைய பலன்,
பலவீனம், தன்னுடைய செயல்கள், தன்னுடைய நடத்தைகள், தன்னுடைய வார்த்தைகள் இவற்றில்
கவனம் கொண்டு தன்னுடைய செயல்களுக்கு யாரையும் பொறுப்பாக்காமல் தானே பொறுப்பு என்று
உணர்ந்துகொண்டு நடக்கையில் அவரின் வாழ்க்கையில் தேடும் நிம்மதியும், அமைதியும்
தானாக வரும்.
கணியன் பூங்குன்றன் எவ்வளவு ஞானியாய் இருந்து
தன்னைப்பற்றி தெள்ளத்தெளிவாக உணர்ந்து இருந்தால் இவ்வளவு எளிமையாக 'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்ற எளிய மந்திரத்தை நமக்கு உபதேசித்து இருப்பார்.
எளிமையான ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். நாம் மிகவும்
நேசிப்பவரிடன் ஒரு செயலை உங்களின் சுயம் சார்ந்த அதிகாரத்துடன் சொல்லாமல் ஒரு
நண்பனாக ஒரு ஆலோசகனாக சொல்லும்போது அது நிச்சயம் பரிசீலிக்கப்படும், பின்பற்றவும்
வாய்ப்புகள் அதிகம். அதையே ஒரு அதிகார, ஆணவ மிடுக்குடன் அந்த யோசனையை சொல்லுங்கள்.
அந்த ஆதிக்க உணர்வு அவரது தன்மானத்தை கிளறி உங்களுக்கு எதிரான மனநிலையை அவரிடம்
உண்டாக்கும்.
“எம்பா.. நீ இப்படி ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து உன்னோட
உடம்பை கெடுத்துக்கற, கொஞ்சம் கவனம் செலுத்தி உடம்ப பார்த்துக்கம்பா” என்று மனைவியிடம்/கணவனிடம் அன்பாக சொல்லும்போது
இருக்கும் நேசம் அங்கே எடுபடும். அதை விடுத்து கணவன்/மனைவி என்ற தன்னுடமை
அதிகாரத்தோரணையில் ”நீ எதுக்கு இப்படி
உடம்பை கெடுத்துக்கிற.. ஒழுங்க உடம்ப பார்த்துக்க” என்று சொல்லும்போது வரும் எதிர் வினையும் பாருங்கள். நிச்சயம்
அங்கே வேறுபாடு இருப்பது புரியும். அந்த இடந்தில் கணவன்/மனைவி என்ற உங்களின்
அடையாளத்தை கொஞ்சம் மாற்றி சொல்லும்போது உங்களையும் சரி, எதிராளியையும் சரி
நீங்கள் வெற்றிகரமாக கையாளலாம்.
உங்கள் மீதான அடையாளத்தை பிரதானப்படுத்தி ஒருவர் மீது உங்களின் அதிகாரம்
செலுத்துபாடுகையில் நீங்கள் வெற்றி பெற்றதாக நினைத்தலும் உண்மையில் நீங்கள்
தோல்வியை நோக்கிய உங்கள் பயணத்தை தொடங்கியுள்ளீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
என்றைக்குமே மனித மனம் தன்னைப்பற்றி
தெரிந்துகொள்ள விழைவதை விட பிறரைப்பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியுமே
அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதிலிருது விலகி எப்போது ஒருவர்
தன்னை பற்றி மிகவும் தெளிவாக உணர்ந்துகொள்ள துவங்குகிராறோ அப்போது பல மாற்றங்களை
தங்களின் வாழ்க்கையில் உணர முடியும்.
நீங்கள் பிறரைப்பற்றி ஒரு அடையாளத்தை,
முத்திரையை மனதில் கொண்டு “அவரா?.. அவர் எப்பவும் இப்படித்தான்” என்று ஒரு முத்திரைக்குள், அடையாளத்துக்குள் சுருக்கி அடக்கும்போது
குதுகலித்து மகிழும் உங்கள் மனம் அதே போன்ற ஒரு அடையாளத்தையோ, முத்திரையையோ உங்கள்
மீது பதிக்கும் போது எதிர்த்து துள்ளுவது இந்த செயலின் ஒரு பகுதியாகும். உங்களின்
அடையாளம் நல்லவிதமாக வெளிப்படுத்தும்படிக்கு உங்களின் செயல்களை
மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காக வேடமிட வேண்டாம்.
மீண்டும் திருமூலரை
துணைக்கு அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
“தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு
மறுமையும், இம்மையும்
தானே தனக்கு
வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத்
தலைவனும் ஆமே!!” என்ற செய்யுளில் தெளிவாக சொல்லிவிட்டார்.
ஆம்.. நாம் தான் நமது
செயல்களின் மூலமும் நமது அடையாளங்களின் மூலமும் நமக்கு பகைவராகவும், நமக்கு நண்பராகவும்,
இந்த வாழ்வின் இன்பங்களுக்கு வழியாகவும், மறுமை வாழ்க்கை வராமல் தடுக்கும்
காவலனாகவும், அப்படியே வந்தாலும் எல்லா வினைகளின் எதிர் வினைகளையும் எதிர்கொண்டு
அதன் எல்லா பலன்களையும் அனுபவிப்பவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நாமே நமது
வழிகாட்டியாகவும், நமது செயல்களுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறோம்.
உங்களுக்கான அடையாளம்
மூலம் நீங்கள் புகழ் பெறுகிறீர்களா அல்லது அந்த அடையாளத்துக்கு நீங்கள் புகழ்
சேர்க்கிறீர்களா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
உண்மையில் ஒரு
உங்களுக்கு உகந்ததாக தான் ஒரு நாற்காலி இருக்க வேண்டுமே தவிர அந்த நாற்காலிக்கு
உகந்தவராக நீங்கள் இருக்க கூடாது.
உங்கள் அடையாளம்,
முத்திரை தான் உங்களை செயல்பட வைக்கிறது என்கிறபோது அந்த அடையாளத்துக்குள் யார்
இருந்தாலும் அதே செயலை செய்வார்களே? நீங்கள் எதற்கு?
எந்த அடையாளமும்,
முத்திரையும் உங்கள் மேல் இல்லாத நிலையிலும் உங்களால் வெற்றிகரமாக செயல்பட
முடிகிறது எனபது தான் உங்களின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும். அந்த நிலையில்
தான் உண்மையான உறவுகளும், நட்புகளும் உருவாகும். அது தான் ஒருவரின் உயர்ந்த
நிலையின் தொடக்கம்..
உண்மையில் நாம்
என்பது நமது பெயரோ, நமது வேலையோ, நமது பாலினமோ, நம்மை வெளிப்படுத்தும் வேறு
அடையாளமோ அல்ல. நாம் என்பது நமது செயலின் மூலமே இருக்க வேண்டும். இது தான்
உண்மையில் நமது அடையாளத்தை தேட துவங்குவதும் கூட.
ஒரு உண்மையை
புரிந்துகொள்ளுங்கள்.. வெளி உலகத்துக்கான நமது அடையாளங்கள் எல்லா இடங்களிலும்
செல்லத்தக்கதாக இருந்தாலும் கடவுளின் முன்பு செல்லாது.
இனிய
வணக்கங்கள்....
அடுத்த பதிவில் மீண்டும் வலைவீசுவோம்.. என்றும்
உங்கள் அன்பை விரும்பும் - சங்கர் நீதிமாணிக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக